Monday 15 December, 2008

செருப்பும் தீவிரவாதமும்

இந்தத் தொடருக்கு என்னை அழைத்த முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே, திருத்தி விடுகிறேன்.


தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை. காரணங்கள் எப்பொழுதும் மக்களின் மனவோட்டத்தை பொறுத்தது. குஜராத், பம்பாய் என எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர். பல ஊடகங்களும் மிக வெற்றிகரமாகவே இந்தக் கூற்றுக்கு நெய் ஊற்றுகின்றன. உணர்ச்சிவசப்பட்டவனுடைய மூளையைச் சலவை செய்வதில் ஊடகங்களுக்கு இணையுண்டா? ஆதலால் இத்தகையக் காரணங்களைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை.


நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு. ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு, அப்படியும் முதல்வருக்கே டேக்கா கொடுத்த அரசு ஊழியர்களும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?


ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வெளிநாடு செல்ல தேவைப்படும் சிகப்பு முத்திரைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அரசு ஊழியர்கள் நொட்டாங்கை வேலை செய்ய வேண்டும். அது தேவைப்படுபவர் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அது பற்றியே சிந்தித்து ஊண் உறக்கமின்றி களப்பணி ஆற்ற வேண்டும். நடைமுறை கீழே:


தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) -> பதிவாளர் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.


மாதத்தில் பாதிநாள் சென்னையில் ஏதேனும் காரணம் சொல்லி தங்கிவிடும் மாவட்ட ஆட்சியர், அவர் சம்பந்தப்பட்ட கடிதப்போக்குவரத்துகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பிளஸ் கடிதங்களை டீல் செய்யும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து, அன்றே தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நெறுக்கும் இராணுவ அதிகாரி வரை அத்துணை விஷயங்களையும் அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர், உள்ளாட்சித் தேர்தலில் இருந்து, நில அளவுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிர்பந்தத்தயுடைய கிராம நிர்வாக அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு நிகரான பதவியில் உள்ளவர்கள். தரகரின்றி நெருங்கவே முடியாத கிட்டத்தட்ட கலவர பூமிபோன்ற தோற்றத்தை உடைய, காட்சிகளை பெற்ற பதிவாளர் அலுவலகங்கள். இவையனைத்தையும் தாண்டி செக்ரடேரியட்டில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியரின்(கடைநிலை ஊழியர் என்றால் பிளஸ்) உதவியின்றி சுறுசுறுப்பாக வேலை நடக்காத தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


எதற்கு இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடைமுறை? ஏன் இன்னமும் அனைத்து நிலைகளிலும் அத்துணை கடிதங்கள் எக்கச்சக்க ரெபரென்ஸ் எண்களோடு?
ஏன் எங்குமே வெளிப்படையான அணுகுமுறை இல்லை. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?
இதன் பலன்தான் என்ன? ஏன் எப்பொழுதுமே அனைத்து அரசு அலுவலகங்களிலும்மிக மோசமான அளவில் ஆள் பற்றாக்குறையுள்ளது? இந்தச் சூழலிலும் குறைந்தபட்ச மனசாட்சியோடு பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் செயல்பட்டாலும் எங்கும் எதிலும் அவப்பெயரே மிஞ்சுவதன் காரணமென்ன?இந்தப் பணிச்சூழலில் தானாக லஞ்சம் வரத்தானே செய்யும்? சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன? குமாஸ்தா டைப் வேலைகள் பெரியளவில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்காதுதான், ஆனால் இப்படி பத்தாள் வேலையை ஒருத்தர் மேலேயா சுமத்துவது?


அனைவரையும் விடுங்கள் கிராம நிர்வாக (அல்லது அதற்கு நிகரான)அலுவலகங்களிலே பணியாற்றுபவர்கள் என்ன தேவதூதர்களா அத்துணை காரியங்களை கவனிப்பதற்கு? இந்த சூழ்நிலையில் அவர்கள் வேறெப்படி செயல்படுவார்கள்? இதில் பல்வேறு விஷயங்களில் மாதத்திற்கொரு மாற்றம் என்று கடுப்பேத்துவது வேறு.


சமூக விரோதிகள் இந்த நடைமுறைகளால் லாபம்தானே அடைவார்கள்? தொல்லைகள் நிறைந்த இடங்களில் தொய்வுதானே ஏற்படும்? கடைசியில் யாரும் எதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
கமேண்டோக்கள் வருகையில் இருந்து, தரமான பாதுகாப்பு உடைகள் வரை அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டது பெரும்பான்மையாக நிர்வாக சீர்கேட்டினால்தானே?


ஒரே ராத்திரியில், குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் இறந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி, பெற்றோர்களே ஏழ்மையால் மற்றொரு பாரத்தை சுமக்க பயந்து ஒதுங்கி, ஒருவேளை பிழைத்தாலும் எட்டாக்கனியான மருத்துவத்தை அண்ணாந்து நோக்குவதையே தினப்படி வாழ்வாக ஏற்றுக்கொண்டு, இத்தனை ஏமாற்றங்களையும் சந்தித்த பின்னும் 'ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தால் பரவாயில்லை', என கெஞ்சும் மக்களை கொண்ட சமூகம் இது.
கிட்டத்தட்ட 'நாளை' எனும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ள இவர்களுக்கு குறைந்தபட்சம் இறப்புச் சான்றிதழ் பிரச்சினையின்றி கிடைக்க வேண்டும், சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக அதனைக் கூட திருடிச் செல்லும் மைத்துனர் அமையாதிருக்கவேண்டும்.


பனிரெண்டாம் தேதி கார்கரே அவர்களின் பிறந்தநாள், பதிமூன்றாம் தேதி நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுநாள். அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களின் எண்ணிக்கை:(:(:(


கார்கரே மனைவியால் ஒரு கோடி வேண்டாம் எனக் கூற முடியும், ஆனால் இறந்த கான்ஸ்டபில்களின் குடும்பத்தாரால் கூற முடியுமா? பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளா கிலோ என்ன விலை என்கின்றன நட்சத்திர விடுதிகள். கேட்டால், இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை, பாதுகாப்புத்துறையின் வேலை என்கின்றனர். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு அலுவலர்கள் இவர்களின் விடுதியை நாடுவதேன்? இங்கெல்லாம் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும் என்றுதானே? அண்டை நாட்டில் இதைவிட பயங்கர தாக்குதல் மற்றொரு விடுதியில் நடைபெற்ற போதே கொஞ்சமாவது உஷாராகியிருக்க வேண்டாமா? முன்பக்க வாசல் வழியாக வருவதற்கு அவர்கள் என்ன இவர்கள் வீட்டு மாப்பிள்ளையா? எப்படி தீவிரவாதிகளுக்கு அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட முடிந்தது என்ற கேள்விஎழும்போது, அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்படிஎன்றால் இங்கு இவர்களைப்போன்றவர்கள் இதே மாதிரி முஸ்தீபுகளுடன் தங்குவது சாதாரணம், என்ன இந்த முறை இங்கேயே தாக்குதல் நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது.


ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.


Tuesday 25 November, 2008

நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)

தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)

இன்னைக்கு முடிஞ்சது என் பணி.

வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)

Monday 24 November, 2008

என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)

வாரணம் ஆயிரம் நானும் பார்த்துட்டேனே:):):) அதால நானும் விமர்சன ஜோதில ஐக்கியாமாகுறேன். இங்கயே சொல்லிடறேன், எனக்கு சூர்யாஅவர்களையும் பிடிக்காது, கௌதம் சாரையும் பிடிக்காது. அதால பதிவு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும்.

எனக்கு படத்தோட மொதோ அஞ்சு நிமிஷம் பிடிச்சது. அது ஒரு அழகான செல்ப் பில்ட் அப்பா பத்தின படம்னு நெனக்க வெச்சுது. ஆனா அப்புறம் தான் எங்கப்பாவை பத்தி என்னை உணர்வுப்பூர்வமா சிந்திக்கவெக்கப்போற படம்னு புரிஞ்சது. எப்டின்னு கடசீல சொல்றேன்.

எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது. அடுத்தது படம் முழுக்கபல காட்சிகளில் cliché தூவிட்டா போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ, செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

அப்பாவை இவர்(பையன் சூர்யா) நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. திடீர்னு பாத்தா ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். இதுக்கு 'யாரடி நீ மோகினி'ல தனுஷ் செஞ்ச ஒரே நைட் கோடிங் அளப்பரயே பரவாயில்ல. போதைக்கு அடிமயானப்புறம் பாடற அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.

என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே. இன்னும் சொல்லப்போனா, இவங்க புரிதலை நமக்குப் புரியவெக்கிறேன் பேர்விழின்னு, தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா, அவர் ஹிந்திப்பாட்டை ரசிக்கிறது, பீட்டர் புத்தகம் படிக்கிறது, மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.

சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம், இப்டி படம் முழுக்க அதை ஒருவித அவஸ்தையோட சொல்லிருக்கவேணாம். சூர்யா கெட்டப் சேஞ் ஓகே, ஆனா அவங்க ரிலீஸ் பண்ண புகைப்படங்கள்ல இருந்த பிரம்மிப்பு படம் பார்த்தப்போ ஏற்படலை:(:(:(

சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது. திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.

'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.

பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.

கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல. என் கிளாஸ்மேட் ஒரு பையன், நேவில சேர எக்கச்சக்கமா உழைச்சான், அந்த எக்சாம்கு அவ்ளோ படிச்சான். இதுல சர்வ சாதரணமா எல்லாம் முடிஞ்சிடுது. பிளஸ், வயசு, கணக்குல கொஞ்சம் இடிக்குது. சரி, நான் ஜாஸ்தி சொல்லமுடியாது, ஏன்னா அது ஒரு பெரிய துறை, எனக்கு நெறைய விஷயம் தெரியாம இருக்கும்.

நானெல்லாம் நாலு மணிநேர படம்னாக் கூட ஒழுங்கா இருந்தா பாப்பேன்(வேலையா வெட்டியா:):):)) .அப்டிப்பட்ட என்னயே அரைமணிநேரத்துல கடிகாரம் பாக்க வெச்சுட்டாங்க.

பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?

பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.

முதல்ல சொன்ன விஷயம், இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.

Tuesday 18 November, 2008

உண்மைத்தமிழன் அவர்களுக்கு போட்டியாக...

என்னை இந்தத் தொடருக்கு அழைத்த கார்க்கி அவர்களுக்கு ரொம்ப நன்றி.
எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது. காரணம் அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே, அப்போதானே அடுத்த புக்கை எடுக்க முடியும். அதேப்போல புது புத்தகங்களும் பிடிக்காது. காசு ஒரு காரணம்னாலும், இது 'ஆகி வந்த புக்குங்கர' பீல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்பென்சர் எதிர்லையும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல இறங்கி சூளை சைட்ல போனீங்கன்னா இருக்கிற பழைய புத்தகக்கடக்காரங்கக்கிட்டயும்(இவங்கக் கிட்ட எல்லா புது புக்சும் இருக்கும்) என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்(இத வெச்சு தாராளமா நக்கல் பண்ணுங்கப்பா:):):)).

புத்தகம் வாசிக்கும் பழக்கம்ங்கறது எனக்கு ரொம்பச் சின்ன வயசுல இருந்தே உண்டு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் என்னுடன் விளையாடக் கூடிய வயதில் யாருமில்லையாதலால், இந்தப் பழக்கம் வந்துச்சி. எங்க வீட்டை வீடுன்னு சொல்றதவிட சிறிய சமையலறையும் படுக்கைகளும் கூடிய நூலகம்னு சொல்லலாம். எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).

எங்கப்பா தமிழாசிரியர்ங்கரதாலயும், திமுக அனுதாபிங்கரதாலையும் சின்ன வயசுல முக்காவாசி தமிழில்தான் இருக்கும். அப்புறம் எங்கக்கா ரொம்ப நல்ல மாணவிங்கரதால அப்போ இருந்த ஸ்கூல் ஹெச்எம் சிஸ்டர் அவங்களே நெறைய நல்ல ஆங்கில புத்தகங்களை தருவாங்க. சோ, எனக்கு இவங்க ரெண்டு பேரோட புத்தகங்கள் பிரச்சினையே இல்லாமக் கிடைச்சிடும். அப்புறம் எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பல ஆங்கில மாத இதழ்களுக்கு சந்தாதாரரா இருந்தார். பல புத்தகங்கள் வந்தாலும் அவற்றில் என்னை ரொம்ப கவர்ந்தது, சோவியத் யூனியன் மேகசின் ஒன்று. அதில் அந்தந்த மாதத்தில் உலகத்தில் நடந்த முக்கியமான சமூக, அறிவியல் நிகழ்வுகள் படங்களோட வரும். அதை நான் தனியா சேமிச்சு வெச்சு, எங்க குடும்ப நண்பர் ஒருத்தங்களோட தீசிஸ்கு கொடுத்திட்டேன்:):):) முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன். அதெல்லாம் இப்போக் கூட என்கிட்டே இருக்கு.

நான் நாளிதழ்கள் படிக்கிறதை கணக்குல சேர்த்துக்கலை, மத்தபடி ஆனந்த விகடன், குமுதம், முத்தாரம் இதெல்லாம் ஒன்னாங்கிலாசுலே இருந்தே படிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல பிஞ்சுல பழுத்த குரங்குக் குழந்தையா இருந்ததுக்கு இதுவும் காரணும்னு நினைக்கிறேன். நாலாங்கிலாசு போனப்புறம் எல்லா தொடர்கதைகளையும் படிப்பேன். நானும் எங்கக்காவும் எப்டின்னா காலையில் எழுந்ததில் இருந்து டான்ஸ் கிளாசு, பாட்டு, வீணை(எங்கக்கா மட்டும்), வயலின், ஹிந்தி, டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேன்ட்(எங்கக்கா மட்டும்) இப்டி கால்ல ரெக்கயக் கட்டிக்கிட்டு திரிவோம், அப்டி இருந்தப்போ இந்தப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்தான் எங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு.எனக்கு தமிழில் இப்படி எழுத்தாளர்களின் அனுபவங்கள், சுயசரிதைகள், கட்டுரைகள் இவற்றை படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகளும் பிடிக்கும். ஆனா நாவல்கள் படிக்கவே பிடிக்காது. அதே ஆங்கிலத்தில் சுயசரிதைகள் மற்றும் நாவல்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகள், கட்டுரைகள் இதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கப் பிடிக்காது. காரணம் தெரியல.

நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான். இன்னிவரைக்கும் என்னோட பேவரிட்னா இதுதான். திமுக குடும்பங்கரதால திராவிட எழுத்துக்கள் குவிஞ்சிருக்கும். பெரியாரோட எழுத்துக்களை படிச்சப்புறம்தான் பலத்தில் எனக்குக் கொஞ்சமாவது என்ன எதுன்னு விடைகள் கிடைச்சுது. இதற்கு முன்னர் அண்ணாவோட கட்டுரைகள் படிச்சிருக்கேன். கதைகள் சிலதும் படிச்சிருக்கேன். குமரிக்கோட்டம் படிச்சிட்டு என்னடாது அண்ணா அவர்கள் இப்டி ஒரு மேட்டர் கதை எழுதிருக்காரேன்னு நெனச்சேன். அதை எப்படி பார்க்கணும், புரிஞ்சுக்கணும்னு சொல்லிக்கொடுத்தது பின்னர் படிச்ச பெரியாரின் கட்டுரைகளும், எழுத்துக்களும்தான்.

எங்க வீட்ல இல்லாத இலக்கிய இலக்கண புத்தகங்களே இல்லை.எனக்கு கவிதைகள் ஒன்னுமே புரியாது, அதனால் பிடிக்காது. ஆனா எங்க அப்பா ஒரு கவிஞர்:):):) எங்கக்காவும் சூப்பரா கவிதை எழுதுவாங்க, ரசிப்பாங்க.
சோ அவர்களோட பல நாடகங்களின் புத்தக வடிவம் படிச்சிருக்கேன். வேலன் சார் சொன்னா மாதிரி ஒரு காலத்தில் சூப்பரா இருந்தது, இப்போ சப்பையா தெரியுங்கரத்துக்கு இவர் ஒரு வாழும் உதாரணம். கல்கி அவர்கள் காலத்து கட்டுரைகள் கூட எங்க பாட்டி(அப்பாவோட அம்மா) சேர்த்துவெச்சிருந்தது எங்க வீட்ல இருக்கு. அவரோட கட்டுரைகள் கல்கில வருதே, அதுல பலதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். இது மட்டுமில்லாம ஐம்பதுகளில் இருந்து எண்பதுகளின் இறுதிவரை வந்த வாரயிதழ்களிலிருந்து பலக் கட்டுரைகள், கதைகள், திரைப்பட விமர்சனங்கள் எல்லாத்தையும் எங்கப்பா சேர்த்து வெச்சிருக்கார். நான் எல்லாத்தையும் ஜாலியா படிப்பேன்.

இப்போ வலையில் ஜெயமோகன் அவர்களோட அனைத்து படைப்புகளையும் படிப்பேன். அனைத்திலும் இவர் வல்லவர் எனினும், இவரோட பகடி, நகைச்சுவை வகை எழுத்துக்களுக்கு நான் அடிமை:):):) சுஜாதா அவர்களோட பல்சுவை கட்டுரைகள் பிடிக்கும். ஆனா சிலசமயம், தொடர்ந்து வித்தியாசம் இல்லாம இவரோட கட்டுரைகள் வரும்போது போரடிக்கும். பயணக் குறிப்புகளையும் அது சார்ந்த விஷயங்களையும் இப்டி சுவாரசியப் படுத்த முடியுமா என வியக்க வைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் எழுத்துக்களின் கலெக்ஷன் என்னிடம் உண்டு. சுந்தரராமசாமி அவர்களோட படைப்புகள் படிச்சதில்லை, ஆனா அவரோட கடிதங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுவே ஒரு தனி அனுபவம். எங்கக்காவோட கடிதங்களுக்கு அவர் பல சமயம் பதில் எழுதி அதனால் கிடைத்த அறிய அனுபவம்.

கலைஞரோட சட்டமன்ற அனுபவங்களின் தொகுப்பகளை கொண்ட புத்தகங்களை அவர் எங்கக்காவுக்கு பரிசா கொடுத்தார். அவர் கையெழுத்தோட இருக்கிற அந்தப் புத்தகம் என்னோட பேவரிட். இவரோட கடிதங்கள் அருமையோ அருமையா இருக்கும். அதேப்போல ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றி சோனியா அவர்கள் எழுதின புத்தகத்தையும் அவரோட கடிதத்தோடவும் கையெழுத்தோடவும் அனுப்பி வைத்தார்கள். அது தெரியாம இவ எனக்கு வரலைன்னு சொல்லவும், இன்னொரு புத்தகமும் அனுப்பினார்கள். அப்போல்லாம் எங்கக்கா காலேஜ் லீவில் தான் வருடம் முழுதும் படித்த எழுத்துக்களைப்பற்றி, அதன் ஆசிரியருக்கும் அதில் கூறப்பட்டவர்கள் இப்பொழுது இருந்தால் அவர்களுக்கும் தான் உணர்ந்ததை பற்றி கடிதங்களையும் விமர்சினங்களையும் அனுப்புவார். அதில் முக்காவாசிப்பேர் தன் கைப்பட பதில் எழுதுவார்கள். அப்படித்தான் பல விலைமதிப்பற்ற கடிதங்கள், புத்தகங்கள் எங்கள் வீட்டில் அப்பொழுது சேர்ந்தது. எழுத்துக்கள் அவர்களின் எண்ணங்களை பிரதிபலித்தாலும் கடிதங்கள் அதுவும் அழகான நீண்ட கடிதங்கள் அவர்களின் வேறொரு சுவாரசியமான உலகை நமக்கு திறக்கும்ங்கர்த்து என்னோட அனுபவம்.


archie பிடிச்சாலும் மத்த படக்கதை வடிவங்கள் அதனளவு கவர்ந்ததில்லை. லிட்டில் ரெட் ரைடிங் ஹுட்ல இருந்து சிந்த்பாத் தி சைலர் வரை எல்லாமே புத்தக வடிவில்தான் படிச்சிருக்கேன். அப்புறம் ஆறாங்கிலாசுலருந்து ஸ்டார் டஸ்ட் சினி பிளிஸ் ஆரம்பிச்சு படிக்காத சினிமா இதழ்களே கிடையாது.அப்பால எட்டாங்கிளாசு டீனேஜ் வயசு,கேக்கனுமா, பெண்களின் சரோஜாதேவியாகிய mills & boon, harlequinல ஆரம்பிச்சு எல்லாத்தையும் படிப்போம். அப்புறம் எல்லா நடிகைங்களும் படிக்கிறாங்களேன்னு சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் புக்ஸை படிக்க ஆரம்பிச்சேன். இவங்களோட பிளஸ் என்னன்னா, நாவலோட தீம் சப்பையா இருந்தாலும் முக்கிய மேட்டர் நல்லா இருக்கும். விடாது கருப்பு ஆரம்பிச்சவுடனே ஸ்பிலிட் பர்சனாலிட்டின்னு கண்டுபிடிச்சதுக்கு சிட்னி ஷெல்டன் தான் காரணம்:):):)

அப்புறம் கல்யாணக் கனவு ஆரம்பிக்கிற சீசன்ல டேனியல் ஸ்டீல் நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன். முதல் நாவல் ஓகே, அப்புறம் நான் இதை படிக்கிறதுக்கு டிவி சீரியலே பார்ப்பேனேன்னு தோணிடுச்சி. அப்புறம்தான் நான் john grisham, michael connelley மாதிரியானவர்களின் நாவல்கள் படிக்கும் பழக்கம் ஆரம்பிச்சுது. இவங்கெல்லாம் மினிமம் கேரண்டி ஆளுங்கல்லையா:):):)

இப்போ காலேஜ் வந்தாச்சு. இப்போதான் என்னோட நண்பர்களான பழைய புத்தகக் கடைக்காரங்க அறிமுகமானாங்க. என் ரங்கமணி சில சமயம் இவங்கக்கிட்ட படிப்பு சம்பந்தமா சிலப் பொக்கிஷம் இருக்குன்னு அள்ளிக்கிட்டுப் போவார். ஆனா நான் அந்த லூசுத்தனமெல்லாம் செய்யாம, மத்ததைத்தான் வாங்குவேன். olivia goldsmithல இருந்து பல ரொமாண்டிக் நாவல்கள், mad collections, பல பகடி வகை கார்ட்டூன் தொகுப்புகள், ஆர்.கே.நாராயணனோட பெரும்பான்மையான புத்தகங்கள், ஸ்ரீதர் சார்ல இருந்து பலப் பேரோட சுயசரிதைகள், கண்ணதாசன் அவர்களோட மனவாசம் படிச்சிருந்தாலும் வனவாசம் படிக்காததால ஒரு நிறைவே இல்ல, அதெல்லாம் இங்க வாங்கினேன். அவரோட கேள்வி பதில்கள் புக் ரொம்பப் பிடிக்கும். பாரதிதாசன் அவர்களோட நிஜஇல்லற வாழ்க்கையை பத்தின ஒரு சுவாரசியமான நூல் இங்கக் கிடைச்சுது, எங்கப்பாவே அசந்துட்டார்.

நான் காலேஜ் படிச்சப்போ the da vinci code படிக்கிறது செம ஹாட்டா இருந்துச்சி. ஆனா செம போங்கா எனக்கு தோணினதால பாதியிலயே விட்டுட்டேன். என் ரங்கமணி இத வெச்சு நிஜமாவே இருக்கிற எல்லாக் கதைகளையும் சூப்பரா சொல்வார், அதால் இதவிட இவரோடது நிஜமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

இப்போ என்னோட ஆதர்ச எழுத்தாளர்கள் Madeleine Wickham/Sophie Kinsella, nick hornbyமற்றும் marian keyes. இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger, candace bushnell, jennifer weiner,Cecily Von Ziegesar,helen fielding இப்டி நெறயப் பேர். இவங்கெல்லாம் பொதுவா ரொம்ப நல்லா விமர்சிக்கப் படுறதில்லை. ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏன்னா இவங்களோட கதையில் இருக்கிற ஒரு சாதாரண கேரெக்டர் மற்றும் அதிலுள்ள நிஜ வாழ்வில் சந்திக்கக்கூடிய மாந்தர்கள், அவர்களின் குணாதிசயங்கள், சூழ்நிலை, சின்ன சின்ன வித்தியாசங்கள், அவை கொண்டுபோகும் பாதைகள், மிக மிக பணக்காரத்தனமான சூழல், அவர்களின் எதிர்பாப்புகள், அவர்களின் சாதாரணங்களும் நியாயங்களும் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகின்றன இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். stephen clarke அவர்களோட merde novels சொன்னா மாதிரி வித்தியாசமான(அதாவது முக்காவாசி உண்மை, கால்வாசி உடான்ஸ்) பிரெஞ்சு வாழ்க்கை முறையை ஜனரஞ்சகமா சொல்றது கொஞ்சம் சுலபமா நமக்கு சில வாழ்வியலை புரியவைக்கும்னு எனக்குத் தோணும்.

இந்திய வேருடைய ஆங்கில எழுத்தாளர்கள் ஒரு தனி அழகான அணியைச் சேர்ந்தவர்கள். ரொம்ப ஜாஸ்தி பரிச்சியமில்லைன்னாலும் இவர்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது chitra banerjee divakaruni, preethi nair, anita desai(kiran desai அம்மா), anita nair, chetan bhagat இவங்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும். இவங்களோட முக்காவாசி நூல்களை படிச்சிருக்கேன். சிலது செக்கண்ட்ஸ்ல வர்றவரைக்கும் காத்திருக்கணும்:):):)

எப்பவுமே எனக்கு சரித்திர பின்னணிக் கொண்ட கதை, புதினங்களை விட, பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் மற்றும் வாய்வழி தகவல்கள் ரொம்பப்பிடிக்கும். இந்தக் கலெக்ஷன்ஸ் ஒரு பொக்கிஷம் மாதிரி என் ரங்கமணி வெச்சிருப்பார்.இப்போ நெட்லயும் கெடைக்காததே இல்லையே. science fiction எப்போவாவது படிப்பேன். பயணக் கட்டுரைகள் சிலப் பேரோடது நல்லா இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் புவியியல் பாடம் படிக்கிற மாதிரி ஒரு பீல் ஏற்படுத்திடுவாங்க. தன்னோட பார்வையில் அழகான நகைச்சுவையோட இல்லைன்னா எளிமையான வகையில் எழுதினவைகள் ரொம்பப் பிடிக்கும்.

என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும். நமக்கு அந்த புக்கில் சொல்ற வெறியில்லையே, அவ்ளோ துணிவு இல்லையே, அசாதாரண சூழ்நிலைகள் இல்லையே, எல்லாம் நார்மலா இருக்கே, இப்டி வித விதமா தோணி ஒழுங்கா இருக்கிறவன் கூட முன்னேறாமப் போக வாய்ப்புண்டுன்னு தோணும்.

தெனாலிராமன், பீர்பால், முல்லா இப்படிப்பட்ட அத்துணை அப்பாவி அறிவுஜீவி கதைகளும் ரொம்பப்பிடிக்கும்.பக்திக்கதைகள், கட்டுரைகள் எனக்கு போரடிக்கும். பிலசாபிக்கள் நாவல்கள், நூல்கள் எல்லாம் எனக்கு பேத்தலா தெரியும். அன்றாட வாழ்விலிருந்தும், சாதாரண நூல்களிலிருந்தும் புரிஞ்சுக்காததயா இதுல சொல்லிடப் போறாங்கன்னு தோணும். பிளஸ் சிலப்பேர் இத படிக்கிற ஒரே காரணத்தால ரொம்ப அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)

இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்.

Wednesday 5 November, 2008

YES V CAN:):):)

டிஸ்கி: நான் இதனை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சில் எழுதவில்லை. என் மனவுணர்ச்சிகளின் அடிப்படையிலேயே எழுதுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே, திருத்திக்கொள்கிறேன்:):):)

நான் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், மத நம்பிக்கை இல்லாதவளாக இருப்பினும், இதனையெல்லாம் என் மூளையும் மனதும் உணரும் சந்தர்ப்பம் எனக்கு என் திருமண ஏற்பாடுகள் செய்யும்போதுதான் கிடைத்தது. என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும், கீழே குறிப்பிடும் விஷயம் எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் அளித்தது. எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிற தகவல் தெரிஞ்சு என் நெருங்கிய சொந்தக்காரர் தொலைப்பேசினார். அவர்தான் எங்க நெருங்கிய சொந்தங்களில் மிகப் பெரிய கோடீசுவரர், மிக நல்லப் பதவியில் இருந்தவர்(ஆட்சியர் பதவிக்கு இணையான பதவி). பதவி அவரை பண்படுத்தலைன்னாலும், அகம்பாவம் உண்டு. தொடர்ச்சியாக கேணத்தனமா கேள்விக்கேட்டுக்கிட்டு வந்தவர், கடைசியா கேட்ட கேள்விதான் அவ்ளோ மோசமானது. அது என்னன்னா, 'அவர் ஒரு கறுப்பர்(இவ்விடத்தில் அவர் உபயோகப்படுத்தியது ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தை) இல்லையே' எனக் கேட்டு என்னமோ இந்த நூற்றாண்டின் புத்திசாலித்தனமானக் கேள்வியக் கேட்டுட்டா மாதிரி சிரிச்சார்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை. நளதமயந்தியில் வரும் மாதவன் மாதிரியான சிந்தனை, நன்றாகப் படித்த நல்ல பொதுஅறிவுச்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இருப்பதின் காரணம் எனக்குப் புரியவில்லை.

இன்று ஒபாமா அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் (என் பார்வையில்) மெதுவாக மறுபடியும் தலைத்தூக்க ஆரம்பித்திருந்த ஒரு சமூகக் கேடு கிள்ளி எறியப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எழுபதுகளின் இறுதியிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கையூட்டும் சமூக மாற்றம், இரண்டாயிரத்து ஒன்றில் இருந்து வீழ்ச்சிப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இது என்ன ஒரு தேசத்து அதிபர் தேர்தல் அனைத்தையும் மாற்றிவிடுமா என்றால், நாம் ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும், அமெரிக்காவின் நிலைப்பாடையே பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அங்கு கறுப்பினத்தவரை ஆதரிப்பதுதான் கூல் ஆட்டிட்யூடாக கருத ஆரம்பித்த போதுதான், ஐரோப்ப்பாவிலும் அது பரவியது. பின்னர் அழகாக மலர ஆரம்பித்தது. அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.

சரி, இது மட்டுமா? குடியரசுக்கட்சியின் கொள்கைகளை பார்த்தால், அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கட்சியினை சார்ந்ததா என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கின்றன. gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். இங்கு கூறப்பட்டவைகள் சொற்பமெனினும் கிட்டத்தட்ட அனைத்துமே சோகக் காமடி வகையைச் சேர்ந்தவைகளாகவே இருந்தன.

வயதான கௌபாய் ஆக மெக்கெயினை காண்பித்தார்கள் என்றால், துணை ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் அவர்களின் ஆணியப்போக்கு என்னை எரிச்சல் படுத்தியது. சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட தகுதியே இல்லாத ஒருவர் மட்டும்தான் பெண்களின் சார்பாகக் கிடைத்த ஒரே வேட்பாளரா?

இந்தத் தேர்தலில் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு, ஒபாமா முழுமையாகக் கருப்பினத்தைச் சேர்ந்தவரில்லை, அவர் ஏன் தன்னை கிருஸ்துவராக வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எல்லாம், கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், இம்மாதிரி கலப்புத் திருமணக் குழந்தைகள் மேலும் இன்னல்களை அனுபவிப்பது நிதர்சனம். அதேப்போல இரண்டாவதிற்கும் இன்றைய அமெரிக்காவின் மோசமான நிலையையேக் காட்டுகிறது. மதச் சார்பின்மை எந்தழகில் இப்பொழுது உள்ளது என்பதின் வெளிப்பாடுதான் அது. நிலைமைமேலும் மோசமாகாமல் இருப்பதற்காகவாவது இந்த வெற்றி முக்கியமானது.

தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.

திருமதி மிஷல் ஒபாமா பல்வேறு வகைகளிலும் கவருகிறார். முதலில் அவருடைய நோ நான்சென்ஸ் லுக், தன்னை பெண்குலத்தின் பொன்விளக்கு ரேஞ்சில் வெளிக்காட்டிக்கொள்ளாத்தன்மை. பொதுவாக கணவர் ஜனாதிபதியாகத் தேர்வானவுடன் மேடையில், உலக அழகிப்பட்டம் வென்றவுடன் அந்த அழகிகள் செய்யும் டிராமாவயே இவர்களும் செய்வதை பார்த்து எரிச்சல்வரும். ஆனால் மிஷல் ஒபாமா இதனை கையாண்டவிதம் அவ்ளோ நேர்த்தி. பிஆர் கேர்ள் போல் தன்னை பிரசன்ட் பண்ணாமல் அவ்ளோ கம்பீரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.

மீடியாவும், கறுப்பின மக்களும் இன்னபிற சிறுபான்மையினரும், அவர்களின் நிதியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியத் தூண்கள் எனினும் இந்தத் தேர்தலில் மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களின் இந்த இமாலய ஆதரவில்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனக் கூறமுடியவில்லை.

மிக மிக அசாதாரணமான சூழ்நிலையில் ஜனாதிபதியாகி உள்ள ஒபாமா, சந்திக்க வேண்டிய சவால்கள் எக்கச்சக்கம். இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். ஆதலால் அனைவரும் அவர் வெற்றியடைய மனதார வாழ்த்துவோம்:):):)

Wednesday 15 October, 2008

சினிமா தொடர்

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த முரளிக்கண்ணன் அவர்களுக்கும், முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

தியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்!!!) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

என் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

சம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.

எம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

ரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ல படற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
எங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

தெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா
மலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.
ஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.
ஹாலிவுட்ல எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.
பிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போல இருக்கும்).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.

நான் இதைத் தொடர அழைப்பது,

அப்துல்லா அண்ணா.
அம்பி அண்ணா.
மங்களூர் சிவா.
சஞ்சய் .
எஸ்கே .
தருமி அவர்கள்.
இவன்.

Tuesday 7 October, 2008

என்டிடிவியில் என்னை பார்த்தீங்களா?

டிஸ்கி: பதிவு இம்மாம் பெர்சா இருக்கேன்னு வழக்கம்போல கடைசீப் பத்திக்குப் போய், அத வெச்சு ஒப்பேத்தி அட்டெண்டன்ஸ் போடும் அன்பர்களுக்கு, கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோ டிக்கட் கூரியரில் அனுப்பப்படும் என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதோட முதல் பாகம் இங்கே, ரெண்டாவது பாகம் இங்கே.


அங்கப் போனா விவாதத்துல கலந்துக்கற மாதிரி ஒரு மூஞ்சியும் காணோம். அப்போதான் முழு நம்பிக்கை வந்துச்சி, இங்க நிஜமாவே விவாதம் நடக்கப்போகுது, வந்த போன்கால் எல்லாம் யாரும் எங்களை பல்பு வாங்க வெக்க செஞ்ச சதியில்லைன்னு. ஏன்னா என் பின்னணி அப்படி!!!


சரின்னு, ஒரு பெண்ணாகப் பிறந்தால் திருமணமாகும்வரை ஆற்ற வேண்டிய சிலக் கடமைகள் இருக்கே, அதை செவ்வனே செய்யனும்ங்கற கடமையுணர்ச்சியோட, விகல்பமில்லாம பார்வையை சுழல விட்டால், சவுக்கார்பெட்டே தேவலாம்னு ஆகிடுச்சி. அதென்னமோ சேட்டு பசங்க மட்டும் அசட்டுக்களையை வரமா வாங்கிட்டு வந்தா மாதிரி இருக்கறதோட ரகசியம் என்னன்னே புரியல. சரின்னு இன்னொருப்பக்கம் யதார்த்தமா பார்வையை திருப்பினா, எக்சாம்கு பிரிப்பேர் பண்ற மாதிரி நியூஸ் பேப்பரை வெச்சிக்கிட்டு சிலப் பழம்ஸ் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நெக்ஸ்ட் கலர் கலர் வாட் கலர்னு பார்த்தா டோட்டல் டாமேஜ். எக்கச்சக்க மாமிங்க இங்கிலிபீஸ் பேச தெரிஞ்ச ஹோம் மேக்கர்னு ப்ரூவ் பண்ண கெடச்ச சந்தர்ப்பத்த தெளிவா பயன்படுத்திக்க செம சதியோட சங்கமிச்சிருந்தாங்க. என்னடா இது கருத்துப் போலீஸ்களுக்கு வந்த சோதனைன்னு பார்த்தப்போ, ரெண்டு பேர் வந்தாங்க. ரெண்டு பேரும் எம்.ஒ.பி, எங்கள மாதிரியே சேம் பிளட் பீலிங்க்ல இருந்தாங்களாம், அதைச் சொல்லியே அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவங்கக் கிட்ட யாரெல்லாம் (வி.ஐ.பி) வராங்கன்னு கேட்டப்போ, மைத்ரேயன், கனிமொழி, ஒரு பெண் சினிமா டைரெக்டர், இன்னும் ரெண்டு பேர்(ஜாஸ்தி பிரபலமில்லாததால் இப்போ நியாபகம் இல்ல) அப்புறம் நம்ம மல்லுவேட்டி மைனர் கார்த்தி சிதம்பரம்னு சொன்னாங்க.

விஷயத்தை பரப்ப பிரெண்ட்சுக்கு போன் போட்டா, கடமைய எருமை கணக்கா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதாவது நான் என்டிடிவில வரேன்னதும் செல்லைக்கூட ஆப் பண்ணிட்டு டிவி முன்னாடியே பழியா கெடக்கறாங்களாமா. சீன் போடறதுக்கு சொல்லியா தரணும். சரின்னு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............ஆகறதுக்குள்ள அடுத்த மேட்டரைக் கேட்டிருவோம்னு, யாரு நிகழ்ச்சிய நடத்தப் போறாங்கன்னு கேட்டேன், ஸ்ரீனிவாசன் ஜெயினாம்னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவரு கார்ல டைரெக்டா விமானநிலையத்தில இருந்து வந்து இறங்கறார். ஆள், தமிழ் பட அமெரிக்க மாப்பிள்ளையாட்டம் இருந்தார். கொஞ்ச நேரத்தில பிரபலங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க, கனிமொழி மேடம் வரலைன்னு தகவல் வந்துச்சி. கார்த்தி ஸார் வரும்போது, 'காரைக்குடி மைனர் பராக் பராக்னு' கத்தனும் போல இருந்துச்சி.


பொதுவாவே யாராவது பிரபலமானவங்க வந்தா, விழுந்தடிச்சு போய் பாக்கறது என்னோட தனித்திறமைகளில் ஒன்னு. ஒருதரம் நான் மினி புராஜெக்ட் ரிப்போர்ட் பிரிண்டவுட் எடுக்கும்போது, அந்தக் கட்டடத்துக்கு எதிர்புறம் அம்மா பிரச்சாரம் பண்ண வராங்கன்னதும், எனக்கு முன்னாடி நின்ன நாலஞ்சு கட ஆளுங்கள எத்திட்டு, பாஞ்சு போய் ஒரு யு டர்ன் அடிச்சு, சுவத்தைப் பிடிச்சி பாலன்ஸ் பண்ணிய ஸ்டைலை பார்த்தப்புறம், அங்க எனக்குக் கெடச்ச மரியாதையே வேற, "மேடம் முதல்ல உங்க பைண்டிங்க முடிச்சுக்கங்க, மேடம் உங்க பிராஜெக்ட் காப்பி எப்படி இருக்குன்னு பாருங்கன்னு" ஒரே அன்புத் தொல்லை.இப்படிப்பட்ட நான் இங்க என்னா செஞ்சிருப்பேன்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் பண்ணல, யு சி அட் தட் டயம் மீ த மேரியிங் நெக்ஸ்ட் மந்த், சோ நோ அல்பை வேல வெளிப்படையா செஞ்சிங், ஓகே.


பெரிய மனுஷங்கள்லாம் குசலம் விசாரிச்சிக்கிட்டும், ஜாலியா பேசி சிரிச்சிக்கிட்டும் இருக்கும்போதே, நிகழ்ச்சியை நிர்வகிக்கிறவர் வந்தார். 'மாமா பிஸ்கோத்துன்னு' மட்டும்தான் கத்தலை, மத்தபடி அதேமாதிரி தான் எல்லாரும் வரிசைக்கட்டி நின்னோம். வழக்கம்போல இங்கயும் கடசியாத்தான் போய் நின்னேன். அங்கப்போய் பார்த்தா அவர் தன்னை பூச்சாண்டின்னு நம்ப வெக்க படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார்.


காலேஜ்ல கான்பரன்ஸ்(எங்களையும் உள்ள விடுற ரேஞ்சுல கூட்டம் இருக்கும்னா பாத்துக்கங்க), மீட்டிங்னு, சிம்போசியத்தைத் தவிர அத்தனைக்கும் எப்டி ஹெச்.ஒ.டி மாமாவ வெச்சு பூச்சு காட்டுவாங்க, அதேமாதிரி அங்கயும் புல்தடுக்கி மாமா, எங்கள எல்லாம் கூப்ட்டு, என்னமோ பிரியாணி பொட்லம் கொடுக்கப்போரா மாதிரி இறுமாப்போட, 'யாரும் மைக்க புடுங்காதீங்க, கருத்த சொல்ல விழுந்தடிச்சு, மிதிபடாதீங்க' அப்டி இப்டின்னு என்னமோ விவாதம் முடிஞ்சப்புறம் எங்க மூஞ்ச ரவுண்டு கட்டி, தாய் மண்ணே வணக்கம் போடப்போறா மாதிரியும், நாங்கெல்லாம் ஒப்பாரி வெக்க மதுரையில ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்துக்கிட்டு வந்திருக்க மாதிரியும், ஸ்ரீனிவாசன் ஜெயின் வாயப் பொத்தி அழ திருப்பூர்லருந்து டர்க்கி டவல் ஆர்டர் பண்ணி கோட் பாக்கெட்ல சொருகி விட்டா மாதிரியும் ஓவரா பில்டப் கொடுத்தார்.


நம் சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாட்டின் கருத்துக் காவலர்களான குஷ்பு, ஐயா(ஜயா இல்ல) தமிழ் 'குடி'தாங்கி அண்ட் கோவோட பொன்மொழிகளால் ஏற்பட்ட கலவரச் சூழலில், இம்மாதிரி ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நடத்திய விவாதத்துல கலந்துக்கிட்ட ஒரு காலேஜ் பிரெண்டின் வாக்குமூலத்தின் மூலம், இந்த மாதிரி விவாதத்துக்கு அவங்களே ஆள் டிரெயின் பண்ணி கூட்டி வந்து, அவங்களை மட்டுமே பேச விடுவாங்கன்னும், முக்காவாசி நேரம் நம்ம கைகிட்டக் கூட மைக்க கொடுக்க மாட்டாங்கன்னும் கேள்விபட்டிருந்ததால நானும் நிம்மதியா, அந்த மாமாவின் முக அமைப்பை தீவிரமா ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நிஜ கருத்துப் போலீசான எங்கக்காவை நெனச்சுத்தான் பாவமா இருந்துச்சி.


சரின்னு, அவர் எல்லாரையும் போய் உ , என்ன முழிக்கறீங்க, நிஜமாவே, அவரு இவ்ளோதான் சொன்னாரு, அதுக்குள்ள கேமரா கோணத்தை பாலுமகேந்த்ரா சார் கணக்கா கணிச்சு, அடுச்சி புடுச்சி ஆர்டர் பண்ண ஸ்பெஷல் ஐட்டங்கள் உக்காரதுக்குக் கூட இடம் விடாம, தமிழ் மரபை காக்கும் பொருட்டு, லேடீஸ் தனி, பல்ப்ஸ் தனின்னு லேன்ட் ஆகிட்டு, இன்னும் பார்க் ஆகாம தவிச்சுக்கிட்டிருந்த எங்க நாலு பேரை நக்கலா வேற ஒரு பார்வை பாக்கறாங்க. உடனே, ஐரோப்பாவின் மண்ணையும், அமெரிக்காவின் கழிவையும் அமுதமாகக் கருதும் அந்த புல்தடுக்கி மாமா, நம்ம சென்னையை பத்தி நக்கலா கமெண்டடிச்சுட்டு, எல்லாரும் கலந்துக் கட்டி உக்காருங்கன்னு சொன்னார்.


நான் ரெண்டாவது வரிசை இடது ஓரத்துல இருந்த சீட்டில் உக்கார வெக்கப்பட்டேன். எங்கக்காவ, அவளோட ராசிப்படி பர்ஸ்ட் ரோவில், ஸ்பெஷல் கெஸ்டான மைத்ரேயன் பக்கத்துல உக்கார வெச்சாங்க. விவாதம் ஆரம்பமாச்சு, நானும் வழக்கம்போல கற்பனாஉலகில் சஞ்சரிக்க ஆரம்பிச்சேன். அப்பப்போ மனசு, நம்மள இங்க நொந்திட்டாங்களே, டிவியில நம்மள காமிப்பாங்களா, அப்படின்னு அடிச்சிக்கிட்டே இருந்தது. ஆனாலும் எல்லாந்தெரிஞ்ச மேதாவி ஸ்மைல மட்டும் கொட்டோ கொட்டுன்னு தேளவிட ஜாஸ்தியா கொட்டிக்கிட்டு இருந்தேன். கீழ எங்கக்காவும், அவ பக்கத்துல உக்காத்திருந்த ஒரு பொண்ணும் தரையில் விடப்பட்ட மீனாட்டம் துடிச்சிக்கிட்டு இருந்தாங்க, அதாவது அவங்க கைல மைக்கக் கொடுக்கனுமாம். அதுக்குள்ள ஒரு சின்ன பிரேக் விட்டாங்க. ஒடனே நெறயப் பேர் தப தபதபன்னு கீழ ஓடினாங்க, என்னவாம்னா, ஸ்ரீனிவாசன் ஜெயின்கிட்ட அந்த ரெண்டு மூணு நிமிஷத்துல கலந்தாலோசிச்சி, அடுத்த பிரணாய் ராய் ஆகோனும்னு ஆலோசிக்கராங்களாமா.


நான் நம்ம உடன்பிறப்பு எங்கன்னு பார்த்தா, அப்பவும் தொடர்ந்து பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட ஏதோ தீவிர டிஸ்கஷன்ல இருந்தா, அடிப்பாவிகளா நீங்கல்லாம் எப்போதான் அறியாமை இருளிலிருந்து ஜெனெரேட்டர் வெளிச்சத்துக்கு வருவீங்கன்னு சிரிச்சிக்கிட்டேன். நாம எப்பவுமே ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கறோம்னாலே நாலு நிமிஷத்துக்கு கொறையாம இருக்கும், சிரிச்சோம்னா எவ்வளவு நேரம் தாங்கும்னு நீங்களே யோசிங்க(இவ்ளோ பெரிய பதிவையே படிக்கறீங்க, இதச் செய்ய மாட்டீங்களா). சோ, அதுக்குள்ள பிரேக் முடிஞ்சு நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்சிது. அந்த பிரேக் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ என் சிரிச்ச மூஞ்சுக்கு ஒரு டைட் க்ளோசப் வேற வெச்சாங்களாம்(அப்போன்னு டிவி பார்த்து ஜன்னி கண்ட குழந்தைகளின் தாய்மார்கள் கொடுத்த கண்ணீர் பேட்டியிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன்)


மறுபடியும் நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்ச ரெண்டு நிமிசத்துக்குள்ள துள்ளித் திரியும் காலம்(மைக்குக்காக) ஆரம்பிச்சுது, நான் பாட்டுக்கு பிசியா, கார்த்தி டை அடிக்கறாரா, விழ ஆரம்பிச்சிருக்க நடுமண்டை சொட்டையை எப்படி எதிர்காலத்துல மறைப்பார்ங்கற முக்கிய பிரச்சினை சம்பந்தமா தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கும்போது, யாரோ என்னை இடிக்கிறா மாதிரி இருந்துச்சி, யாருடா அது, கேமரா முன்னாலயே வேலையக் காமிக்கர ஆள்னு, புதுமைப்பெண் படத்துல, 'ஒரு தென்றல் புயலாகி வருமோன்னு', ரேவதி சூப்பரா காமடி பண்ணுவாங்களே, அப்படி பாக்கறேன், இடிச்சது மைக். எனக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்ல(டிவியில ஒரு முழு நிமிஷம்னா யோசிச்சுக்கங்க), ஏன் என்கிட்டப் போய் இதை கொடுக்கறாங்கன்னு. அப்புறம் சுதாகரிச்சு, புடிங்கி பின்னால கொடுக்கறதுக்குள்ள கொஞ்சம் பதட்டமே ஆகிடுச்சுன்னா பாருங்களேன். 'டோமர் பாய், என்கிட்டே என்ன வெள்ளாட்டு சின்னப்புள்ளத் தனமான்னு' நிமிர்ந்து பார்த்தா, ஸ்ரீனிவாசன் ஜெயின் முறைக்கறார். அதுக்குள்ள அடுத்த பிரேக். எல்லாரும் என்னைய திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு குசுகுசுன்னு பேச்சு வேற. அப்பவும் எங்கக்கா வளரும் நாடுகளின் விவசாயப் பிரச்சினைய டிஸ்கஸ் பண்ற மாதிரியே சீன் போட்டுக்கிட்டு இருந்தா. சரி வளர்த்த கடாவோட அம்மாதானேன்னு விட்டுட்டேன்(எங்கக்கா பையனை நானும் வளர்த்தேனாக்கும்) .


திரும்ப விவாதம் ஆரம்பிச்சது, எல்லா வி.ஐ.பி பனியன் வேஷ்டிகளும், சுடிதார், புடவைகளும் பேசி முடிச்சாச்சி. மறுக்கா சாதா ஆளுங்கக் கைல மைக் வந்துச்சி, ஒரு மாமி மூணாவது வரிசையில மைக்குக்காக அந்த குதி குதிக்கறாங்க, கீழே டைரெக்டரம்மா சாமியாடாத குறைதான். எங்கக்கா, அவ பக்கத்துல இருக்கிற எம்.ஒ.பி பொண்ணு இப்டி மைக்குக்காக அங்க ஒரு ஜனத்திரளே அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்குது, ஆனா பாருங்க, எல்லாரையும் விட்டுட்டு, என்னமோ பூர்வ ஜென்ம பந்தம் மாதிரி, என்கிட்டயே மைக் வந்துச்சி. 'யோவ் நீங்கல்லாம் என்னத்தப் பத்தி இப்போ பேசிக்கிட்டு இருகீங்கன்னே எனக்கு தெரியாது, என்னைய ஏன்யா ரப்ச்சர் பண்றீங்கன்னு' கத்தனும்போல இருந்தாலும், அங்க இருந்தவங்க பார்வையெல்லாம் சரியில்லாததால கம்முன்னு அதை பாஸ் பண்ணிட்டேன். அப்போ மட்டும் எனக்கு அந்த பிரெண்ட் கைல கெடச்சிருந்தா உயிரைக்கொடுத்தாவது, விஜயகாந்த் படத்துல கதாநாயகி வேஷம் வாங்கிக் கொடுத்திருப்பேன்.


ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சது, இந்த பின்னங்கால் பிடரியில் பட ஓடறதும்பாங்களே, அப்படில்லாம் நான் எப்பவுமே செய்ய மாட்டேன். இப்போ என்னாச்சு, வீரத் திருமகளின் சரித்திரத்தில் மற்றுமொரு விழுப்புண், அப்படின்னு தொடச்சி விட்டுட்டு எங்கக்காவோட வீட்டுக்கு வந்துட்டேன். போறவழியெல்லாம் ஒரே விசாரிப்பு, பொதுமக்கள் கிட்டருந்து இல்ல, பிரெண்ட்ஸ்கிட்ட இருந்து. சும்மா சொல்லக்கூடாது, நல்லா வகதொக இல்லாம காரி காரி துப்புறாங்க. இந்த வீணாப்போன கேமராமேன நான் என்னவோ பயங்கரமா மயக்கி எக்கச்சக்க க்ளோசப் ஷாட்ஸ் வாங்கிட்டேன்னேல்லாம், 'சேர்த்து வெச்சி அபாண்டமா பேசுவது எப்படிங்கற' புக்குக்கு, வாயாலேயே விளக்க உரை எழுதுனாங்க. அப்போ புரோகிராம் பாக்காத, ரெண்டு மூணு குரங்குங்கக் கூட விஷயத்தை கேள்விப்பட்டு, சந்துல சிந்து பாடுதுங்க(அதை எப்டி கண்டுபுடிச்சேன்னா, நான் போட்டுக்கிட்டு போன சல்வார் கமீஸ் மஞ்சள்&ஒயிட் காம்பினேஷன், இதுங்க என்னோட பேவரிட் காம்பிநேஷனான எங்கக் கட்சிக் கொடி காம்பினேஷன்ல தான் போட்டுக்கிட்டு போயிருப்பேன்னு நெனச்சு, ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு, டிரஸ்ஸப் பத்தி உளறி மாட்டிக்கிட்டாங்க, நாம யாரு, ஜெய்சங்கர் படமாப் பார்த்து வளர்ந்த ரிவால்வர் ரீட்டாவாச்சே)


வீட்டுக்குப் போனா, என்னமோ நான் பிக்பாக்கெட் அடிச்சி மாட்டிக்கிட்டா மாதிரியும், அதப்பத்தி பேசி எம்பாரஸ் பண்ண விரும்பாதவங்க மாதிரியும் திரிஞ்சாங்க. சரின்னு சமாதானப்படுத்தி திட்டச்சொன்னா, முதல்ல கொஞ்சம் சுமார்தான்னாலும், அப்புறம் பிக்கப் ஆகிடுச்சி, நானும் ஸ்டார்ட் மீசிக்னு தாலாட்டை ரசிக்க ஆரம்பிச்சேன்.


இதுல என்ன சோகமான விஷயம்னா, இதை மறுஒளிபரப்பு செஞ்ச ரெண்டு தரமும் கரண்ட் மாமா விரும்பி விளையாடும் கரண்ட் கட் மற்றும் கேபிள் மாமா விரும்பி விளையாடும் ஜாலி கட் போன்ற விளையாட்டுகளின் காரணமாக என் முகத்த என்டிடிவியில பாக்கற கொடுப்பனை கூட எனக்கு இல்லாமப் போய்டுச்சி.

Thursday 2 October, 2008

மீ த பர்ஸ்ட்

எல்லோருக்கும் வணக்கம். நான் வலைப்பூக்களில் முதல் முதலில் படிக்க ஆரம்பிச்சது, டுபுக்கு அண்ணாவோட பதிவுதான். மென்மையாக என்னை இழுத்துச் சென்ற நகைச்சுவை ப்ளஸ் நாஸ்டால்ஜியா ஒரே நாளில் அவரோட வலைப்பூவை முழுவதுமாக படிக்க வைத்தது. அவரோட பதிவுகள் படிச்சப்புறம் அதில் வந்த பின்னூட்டங்களை பார்த்து, அழகான கிண்டலோட இருந்த அம்பி அண்ணாவோட பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். எதையுமே ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கிட்டு ரொம்ப ஜாலியா டீல் பண்ணுகிற இவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிது. இவங்க ரெண்டு பேரோட வலைப்பூவும் ரொம்பப் பிடிச்சுப் போய் ஒரு நாளைக்கு எக்கச்சக்க தடவை இவங்களோட தளத்திற்கு சென்று புதுப் பதிவு போட்டிருக்காங்களான்னு பார்ப்பேன்.

அப்புறம் இவர்களோட சில பதிவுகளில் இருந்து வவா சங்கம் பத்தி தெரிஞ்சு அங்கே போய் பார்த்தப்போ வெட்டிப்பயல் அவர்களோட பதிவுகள் ரொம்ப கலக்கலா இருந்தது. அவரோட பெரும்பான்மையான பதிவுகள் படிச்சிருக்கேன். சரி, இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வேறெங்காவது மொத்தமா திரட்டுராங்களான்னு வலையில் தேடினப்போ தமிழ்மணம் பார்த்தேன். அங்கேப் போய் வெறும் நகைச்சுவைப் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். முதலில் படிச்சது அபி அப்பா வலைப்பூ.

இவங்க எல்லாருமே ஜாலியா கல கலன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க. அப்போதான் அம்பி அண்ணாவோட மெயில் ஐடி இருக்கறது பார்த்தேன். தப்பா எதாவது எழுதிடுவேனோங்கர பயத்தோட என்ன எழுதினேன்னு எனக்கே தெரியாத(அதாவது வழக்கம்போல) ஒரு மெயில் அனுப்பினேன். ஆனா ஒரு பத்து நிமிஷத்திலேயே அவர்கிட்டயிருந்து மெயில். அப்புறம் அவர்கிட்ட கேட்டு டுபுக்கண்ணா, அபி அப்பா ஐடி வாங்கினேன்.

என்னோட சிலப் பதிவுகள் நூறு பின்னூட்டங்களுக்கு மேல வாங்கியிருக்கு, சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் என்னன்னா, நான் பதிவு போட்டவுடன் செய்ற முதல் வேலை, மேலேக் குறிப்பிட்டுள்ள பதிவர்களுக்கு மட்டுமல்லாது, என் பதிவில் வந்து கலகலப்பான, கிண்டலான பின்னூட்டங்கள் இடும் அத்துனை பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" என்ற டயலாக்கை போட்டுவிட்டு வருவேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் பின்னூட்டம் வேண்டும் என்ற காரணத்தால் செய்தாலும், பின்னர் அவர்கள் பின்னூட்டம் போடாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, சும்மா படித்தால் கூட போதும் என்ற அளவிலே இதனை தொடர்ந்தேன். இது என்னோட பழக்கம்.

என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".
பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.

அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான். யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல. ஆரம்பத்தில் அப்துல்லா அண்ணா மற்றும் ச்சின்னப்பையன் பதிவுகளுக்கு மட்டும் போட முயற்சித்து வந்தேன், அதன் பின்னர், நகைச்சுவைப் பதிவுகள் எழுதும் பலரின் பதிவுகளில் போட ஆரம்பித்தேன். பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.

நான் எழுதும்போது பேச்சுவழக்கில் எழுதிவிடுகிறேன், அதனால் பலருக்கு வேறொரு அர்த்தத்தில் படலாம். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நான் எழுதுவது தவறாக தோன்றும்படி இருக்கலாம், காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாமே பேச்சு வழக்கிலே இருக்கும், பின்னூட்டங்களும் அவ்வாறே இருக்கும். என் பின்னூட்டங்கள் மற்றும் அதன் தொனி பிடிக்கவில்லை என்றால், அதனை இக்னோர் செய்திடுங்கள், நான் புரிந்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதை உங்கள் பதிவுகளில் தவிர்த்துவிடுகிறேன்.

நான் இதனை தேவையில்லா இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்றுதான் பதிவிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:):):)

டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும். இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)

கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள் என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)

Monday 15 September, 2008

என்டிடிவியும் நானும்

இதன் முதல் பாகம் இங்கே.

எங்கக்கா பார்க்க ரதி மாதிரி(அதாவது பாரதிராஜாவோட புதியவார்ப்புகள் ரதி மாதிரி, ஒடனே எங்கக்காவுக்கு பொளந்த வாயா, வயத்துக்குள்ள தினம் எத்தனை ஈ, கொசு குடிபோகும்னெல்லாம் கேக்காதீங்க, ஏன்னா அவங்களும் இப்போ ப்ளாகர் ஆகிட்டாங்க, அவ்வ்வ்வ்வ்...................) ஓடி வந்து என்கிட்டே நின்னு, "ஏய் உனக்குத்தான்டி போன், என்டிடிவியில் இருந்து ஒரு பல்பு டி, வர்ற வியாழக்கிழமை, நம்ம தமிழ்நாட்டோட தேர்தல் ரிசல்ட் பத்தி ஒரு டிஸ்கஷனாம், அதில் பங்கெடுத்துக்க உன்னை செலெக்ட் பண்ணி இருக்காங்களாம்", அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா.

என்னடா இது ஒருத்தருக்கொருத்தர் சூனியம் வெச்சுக்கறளவுக்கு விரோதம் இல்லைனாலும், இப்டியெல்லாம் ஒருத்தர் நலனில் ஒருத்தர் அக்கறை செலுத்துவோம்ங்கற ஆக்டிங்கெல்லாம் நம்ம வீட்ல வொர்கவுட் ஆகாதுன்னு தெரிஞ்சும் தன்னம்பிக்கையோட முயற்சி பண்றாளே, என்னா விஷயமா இருக்கும்னு தீவிரமா, அந்த நம்பிக்கையோட கைய எடுக்க யோசிக்க ஆரம்பிச்சேன்(யப்பா, இதை எழுதறதுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, என் மூளைய வழக்கம்போல செயல்படவிடாம ஊக்குவிச்சிருப்பேன்) .

என் தொலைநோக்குப் பார்வையை தெளிவா புரிஞ்சிக்கிட்டு, அவளும் விஷயத்துக்கு வந்தா, "நீ, கூட ஒருத்தங்களையும் கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னாங்கடி, நானும் வேறவழியில்லாம என் பேரை கொடுத்திட்டேண்டி, பேசின ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்டா வேற பேசினார்டி" அப்டின்னு அடிச்சு விட்டுக்கிட்டே போறா, சரி தீட்டின கம்பியிலயே கூர் பாக்கிறாப் போலன்னு, ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து அதில் லயிச்சேன். திருவாளர் பீட்டர் இறுதி முடிவு தெரிஞ்சிக்க நாளை திரும்பவும் என்னைக் கூப்பிடுவதாக சொன்னதாக சொல்லிட்டு, எங்கக்கா நடையக்கட்டிட்டா.

எனக்கோ டென்ஷனாகிடுச்சி, ஏன்னா என்கிட்டே பல குறைகள் இருந்தாலும், எதிராளி என்னை ஜென்ம விரோதியா பாக்குற அளவுக்கு ஒரு குறை உண்டு. அது என்னன்னா, சாதாரணமா எல்லார் கிட்டயும் சகஜமா பழகற நான், இந்த மாதிரி கூட்டம், விவாதம், கலந்துரையாடல்னா இன்னும் ஜாலியாகிடுவேன். இந்தக் கலை எனக்குள்ள எந்த வயசில் துளிர் விட்டுச்சின்னு தெரியல, ஆனா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போஷாக்கா வளர்ந்துக்கிட்டே இருக்கு.

என்ன பில்டப் ஜாஸ்தியாகிடுச்சா, சரி விஷயத்துக்கு வர்றேன். ஒரு கூட்டத்தில் நான் போய் உக்காந்தாலே, அங்கு நிகழ்ச்சிய நடத்துறவர்ல இருந்து, கலந்துக்கற மத்த மைக் மோகன்கள் வரை எல்லாரையும் வித விதமா கலாய்க்கறது, அவங்க நடந்துக்கறதை வெச்சும், பேசுறதை வெச்சும் அவங்களை டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட கம்பேர் பண்றது, இல்ல அவங்களோட விவாதம் நடத்தினா எப்படி இருக்கும்னு யோசிக்கறதுன்னு, ஆக்கப்பூர்வமா அறிவ வளப்பேன். இன்னும் அவங்க என்னை மதிக்கறதா தெரிஞ்சா ஒரே கொண்டாட்டம்தான், என்னை ஒருவேளை கேள்விக்கேட்டா, "சீ போ, சொல்ல முடியாது"ன்னோ, "வெவ்வெவ்வே உன் வேலையப் பாத்துக்கிட்டு போ"ன்னோ, இல்லை வேற விதமாக நங்குக் காட்டியோ அவங்களை வெறுப்பேத்தினா எப்படி இருக்கும்னு குஷியா கற்பனைக் குதிரைய தட்டிவிட்டுக்கிட்டு, ஒரு ஸ்மைலிங் பேசோடவே இருப்பேன். இதனால் அந்த நிகழ்ச்சிய நடத்துறவங்க நேர்மாறா புரிஞ்சிக்கிட்டு, என்னையே சுத்தி சுத்தி வருவாங்க.

நான் இப்படி கவலைப்பட்டுக்கிட்டே(எதுக்குன்னா ஒரு வாரத்துக்கு முன்னருந்தே ஒரு பொறுப்பு, பருப்பு பீலுக்கு போக. பின்ன அந்தச் சின்ன விஷயத்துக்காக வாழ்நாள் முழுசும் நாலுபேரை வெறுப்பேத்துற வாய்ப்பை விடுவனா நானு)அடுத்த நாள், நிகழ்ச்சியில் கலந்துக்க சம்மதமும் சொல்லிட்டேன்.

வழக்கம்போல எங்கக்கா முக்கியமான வேலை இருக்கு, அங்க வந்து ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு, கடமையே கண்ணா செல்போனை வீட்டில் மறந்து வெச்சிட்டு போயிட்டா. சாந்தோம் தேவாலயப் பின்புறம் படப்பிடிப்பு. என் ராசிப்படி எல்லா விதத்திலும் தாமதமாகி டென்ஷனாகி, சர்ச்சுக்கு போனப்புறமும் எங்கக்காவைத் தேடி முழிச்சி, ஆட்டோவைக் கட் பண்ண சில்லறை இல்லாத பரிதாப நிலையில், ஆட்டோக்காரர் நவீன கர்ணனா மாற(மாற்ற) முயற்சி நடந்துக்கிட்டிருக்கும்போது, எங்கக்காவை பார்த்து, மினி சண்டை போட்டு, பிரச்சினைய சால்வ் பண்ணிக்கிட்டு படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு போய் சேர்ந்தேன்.

அப்போ என்ன நடந்துச்சின்னா..................

டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், இந்தப் பதிவும் எக்கச்சக்க நீளமாகிடுச்சில்லையா:):):)(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

Saturday 6 September, 2008

முக்கிய அறிவிப்பு(ப்ளாஷ் நியூஸ், யு நோ)

நண்பர்களே, என்னோட மொக்கைய இன்னைக்கு மோகன் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் பிரசுரித்துள்ளார். தலைப்பு, ' லொடுக்கு சுந்தரிகள் : ஒரு பார்வை'. இந்த ஆராய்ச்சிக்கட்டுரை லொடுக்கு சுந்தரிகளின் குமுறல்களை கூறுகின்றது. வந்து உங்கள் ஆதரவை அள்ளி விடுங்க எனக் கேட்டுக்கொள்கிறேன்:):):)

Tuesday 2 September, 2008

என் முதல் கொடூர சஸ்பென்ஸ் கதை

டிஸ்கி 1: கிருஷ்ணா கொஞ்ச நாளைக்கு முன்ன நம்மளோட முதல் அனுபவங்களை பத்தி எழுதச் சொல்லி ஒரு பதிவு போட்டிருந்தார்ல, அதுக்குத்தான் இந்தப் பதிவு.இன்னும் கூட நெறைய இந்த மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.

நீங்க என்டிடிவிய தொடர்ந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாத நேரத்தில் பார்த்தவரா?
அதில் ஏதாவது நீயா நானா டைப் விவாதம் நடந்துச்சின்னா, படிக்கறதுக்கோ வேலைக்கோ போயே ஆகனுங்கர கட்டாயத்தால கொழாயடிச்சண்டையயும், பஞ்சாயத்தையும் மிஸ் பண்ணிட்ட பீலிங்க ஆத்திக்க, லோக்கல் முகத்த டார்ச்சடிச்சு ட்யூப்லைட்டாக்க முயற்சி பண்ணி, 'மீ த கருத்து சொல்லிங், யு ஆல் வார்த்த குஸ்தி பைட்டிங், நோ தீர்ப்பு கெடச்சிங், தென் வாட் திஸ் பஞ்சாயத்து நோ இண்டிரஸ்டிங்'னு புலம்பினவரா?

இதோட தொடர் நிகழ்வா, அந்த விவாதத்தில் இருந்த (நீங்க ஆணா இருந்தா) பட்சிகளையும், (பெண்ணா இருந்தா) எங்க தல மாதிரி ஹேண்ட்சம், மேச்சோ ரணகள கட்டிளங்காளைகளையும் லுக்கினவரா?

கட்டக்கடசீல எதப்பத்தி விவாதம் நடந்திச்சின்னு யாராவது கேக்கப்போறாங்கன்னு விவாதம் நடத்தின நிகழ்ச்சித் தொகுப்பாளர, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஆணியவியாதி, பெண்ணியவாதி, அது இதுன்னு திட்டிட்டு சேனல எரிச்சலா மாத்தறாப்புல மாத்திட்டு ஓடினவரா?
அப்போ உங்களுக்கும் எனக்கும் இடையில ஒரு பட்டர்ப்ளை எபெக்டு ரேஞ்சு தொடர்பிருக்கு.

எல்லாம் ஏன் இறந்தகாலத்தில் சொல்லிருக்கேன்னா இது பிளாஷ்பேக் பதிவு!!!

எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம். இங்க வந்தும் அதை தொடந்து செஞ்சேன், பலன், நான் பிளாக் எழுதி பொதுச்சேவை செய்ற மாதிரி ஆகிடுச்சி. இந்த ஆர்வம் என்னோட காலேஜ் நாட்கள்ல இன்னும் ஜாஸ்தி. எப்படின்னா, ஒரு பிரச்சினை, ஸ்டரைக்குன்னா நான் வர்றேன்னு தெரிஞ்சாலே போதும், சும்மா எல்லாரும் தெரிச்சிக்கிட்டு பிரச்சினைய மைக்ரோ செக்கண்டுல தாங்களே சால்வ் பண்ணிக்கறது, நிபந்தனயில்லாம கோரிக்கைகள வாபஸ் வாங்கவும், கோரிக்கைகள ஏத்துக்கவும் பசங்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் போட்டி நடக்குறதுன்னு ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கும்.

இதனால பிரச்சினை இல்லாத ஒரு கொடூர உலகத்தில் தள்ளப்பட்டதை தாங்கிக்கமுடியாம, நான் அடுத்து பாஞ்ச இடம் என்டிடிவி. ஏன் என்டிடிவின்னா, பீயிங் எ மெட்ரோ சிட்டி(நாட் மண்சட்டி)கேர்ள் ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்(நன்றி உலகநாயகன்)

இதுல நடக்கற எல்லா ஹாட் டிபேட்ஸ்லையும் நம்ம கருத்த எஸ்எம்எஸ்ல சொல்லச்சொல்லி என்னைய மாதிரி சுயமா சம்பாதிக்காத சோம்பேறிகள உசுப்பேத்துவாங்கல்ல, அதுல எல்லாம் பாஞ்சுக்கிட்டு போய் கருத்தடிச்சி நாட்டோட தலையெழுத்த மாத்தறதுதான் என்னோட மொதோ கடமை, இதுலன்னு இல்லாம அந்த டிவில என்னா கருத்து கேட்டாலும் சும்மா சொய் சொய்யின்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.

நியாயமா பாத்தா நான் அளிச்ச(எங்கப்பா சொத்தை அழிச்ச) பங்களிப்புக்கு என்னைய பிரணாய்ராய் ஒரு பங்குதாரராவே ஆக்கி இருக்கணும். சரி இந்தியால பல்பு நியூஸ் பசங்க சுய உதவிக்குழுவ ஆரம்பிச்சவராச்சே அதால விட்டுட்டேன். இப்படி வழக்கம்போல கணக்கு பரீட்சை கணக்கா, பலனை எதிர்பார்க்காம கடமைய செஞ்சதோட வினைப்பலன்(எப்படி என் பின்நவீனத்துவ வார்த்தை ஜாலம்) வழக்கம்போல நாம எதிர்பாக்குற மாதிரி க்ளைமேக்சுல கிடைச்சிது. என்ன பிரணாய் ராய் உங்க வீட்டுக்கு முட்ட வண்டி அனுப்பினாரான்னு கேக்கக்கூடாது, ஓகே.

அது 2006 மே மாச ஆரம்பத்துல ஒரு நாள், நான் வழக்கம்போல என்னோட ரங்கமணிக்கு 'நம்ம கல்யாணத்துக்கு தடையே இல்ல அன்பேன்னு' பீலா விட்டு மெயிலனுப்பிட்டு, அடுத்தக்கட்டமா மனசுல பெரிய ரகுவரன்னு நெனச்சிக்கிட்டு, வில்லத்தனமா இல்லாத உள்ளடி வேலையெல்லாம் சைலண்டா செஞ்சுக்கிட்டிருந்த எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்ணி கல்யாண வேலைய ஆரம்பிக்க வெக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு டி.ஆர்,'வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' கத்தினார்(வேறொன்னுமில்லை, அப்போ அதுதான் என்னோட மொபைல் ரிங்டோன்). எடுத்து ஹலோன்னதும் ஒரு பீட்டர் பையன். அடடே புதுசா ஒரு பே(ங்)க்கு போல, ஹை மாட்னான்டான்னு எனக்கு ஜாலியாகிடுச்சி. ஆனா அந்தப்பையன் பேங்க் கிங்கரன் இல்லைன்னதும் இண்டிரஸ்ட் போய், எங்கக்கா இந்த நம்பரை அவளோட கல்லூரி/பள்ளி நண்பர்கள் யாருக்கோ விடுமுறையில வந்திருக்கறதால கொடுத்திட்டா போலன்னு, என்னா எதுன்னு விசாரிக்காம அவக்கிட்டப் போய் கொடுத்திட்டேன். மறுபடி எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்றதுன்னு யோசிக்க தூள் சொர்ணாக்காவாவே(நாமதான் கேரெக்டரா மாறிடுவோம்ல) கூடு விட்டு கூடு பாய, பீட்டரோஸ்பதி பீஜிஎம்மோட(அதாவது எங்கக்கா உள்ளே இங்கிலிபீஸ்ல டாக்கிங், வாக்கிங்) முயற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

அப்போ எங்கக்கா என்னமோ அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து, ஒரு விஷயத்தை சொன்னா, அது என்னன்னா......................... அஸ்கு புஸ்கு இதோட தொடர்ச்சியை வந்து அடுத்தப் பதிவுல பாருங்க :):):)

டிஸ்கி 2: உடனே எல்லாரும் என்னா நடந்திருக்கும்னு, செமையா யோசிக்கவும், மூளைய கொஞ்சமும் உபயோகப்படுத்தத் தேவையும் இல்லாத இந்த சஸ்பென்சுக்கு ஆப்பு வெக்கக் கூடாது. ஹி ஹி, நீங்க நினைக்கறதுதான் நடந்தது. இப்பவே பதிவு எக்கச்சக்க நீளமாகிட்டதால மீதிக்கொடுமய அடுத்த பதிவுல போடறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்......................

Sunday 31 August, 2008

நான் வந்துட்டேன்

வணக்கம் நண்பர்களே. நான் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்கு முதற்கண் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை விசாரித்து எழுதிய பிரேம்ஜி, எஸ் கே, இவன், மங்களூர் சிவா, ச்சின்னப்பையன், அப்துல்லா அண்ணா, அம்பி அண்ணா, முத்துலெட்சுமி-கயல்விழி, முரளிக்கண்ணன் சார், தன் அவியலிலேயே இடமளித்து என் ப்ளாகிற்கு நல்ல விளம்பரமளித்த கிருஷ்ணா(பரிசல்காரன்), தாமிரா, சரவணக்குமரன், தமிழன் மேலும் அவ்வப்பொழுது என் ப்ளாகையும் நினைவில் கொண்டு திறந்து பார்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. தவறி இதில் எவர் பெயராவது விடுபட்டிரிந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான் :):):)

Thursday 31 July, 2008

ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போன்றோருக்கு இப்பதிவு சமர்ப்பணம்


ஏங்க நம்ம ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார், எம்.ஜி.ஆர் இவங்க
எல்லாம்
மாறுவேஷம் போடுறதுக்கு விக், தாடி, மச்சம், மூக்குகண்ணாடின்னு பயங்கரமான சாதனங்களை உபயோகப்படுத்தினா என்னமா தையா தக்கான்னு குதிக்கறீங்க, இங்க இருக்க மூணு படத்தையும் பாருங்க.

நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் எப்பபார்த்தாலும் Bosnia and Herzegovinaல நடக்கிற சண்டையப் பத்திதான் செய்தி வரும். அதில முக்கிய பங்கு வகிச்ச நம்ம ஹிட்லரின் உடன்பிறவா சகோதரனாம் Milosevic அவர்களின் ஆருயிர் நண்பர் Radovan Karadzic தான் அந்த மூணு படங்களிலும் இருக்கறவர்(எல்லாரும் ஏற்கனவே ரெண்டு வாரமா எல்லா நாளிதழ்களிலும், தொலைகாட்சி செய்திகளிலும் பாத்திருப்பீங்க, ஆனா இங்க நான் சொல்ல வர்ற விஷயம் வேற(பயங்கர முக்கியமான கம்பேரிசன்)).
முதல் படம் 1996கு முன்ன எடுத்தது.

இவர (போர்)கிரிமினல்னு அறிவிச்சி ஒரு பத்து பன்னெண்டு வருஷமா தேடிக்கிட்டு இருந்தாங்கல்ல, அப்போ (இந்த இருபத்தொண்ணாம் தேதி பிடிக்கிறவரை) ஒரு இயற்கை வைத்தியரா, நடுவில் இருக்கிற தோற்றத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்திருக்கார், சரிங்களா

அடுத்த படம் இப்போ நீதிமன்றத்தில் (எல்லாத்தையும் மழிச்சு) பழைய தோற்றத்துக்கு கொண்டுவந்து ஆஜர்படுத்தும்போது எடுத்தது, சரிங்களா

நீங்களே பாருங்க நண்பர்களே, கொஞ்சம் முடிவளர்த்து, தாடி மீசை வைத்து,கண்ணாடி போட்டு, நம்ம ஹீரோக்களின் ஆஸ்தான வேஷமான சாமியார் தோற்றத்தில் பத்து வருஷத்துக்கும் மேல தலைமறைவா இருந்திருக்கார்(இதுல இருக்க உள்குத்து உலக அரசியல இங்க வந்து யாரும் ஆராயக்கூடாது). ஜாலியா கால்பந்து போட்டிகள், இயற்கை மருத்துவ கருத்தரங்குகள், விடுமுறைகள்னு இப்படியே மாறுவேஷத்தில் சுத்திக்கிட்டு இருந்திருக்கார்.

இதையே நம்ம ஊர் கதாநாயகர்கள் படத்தில் பண்ணா அந்தக் காட்டு காட்றீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்............... உங்களுக்கே இதெல்லாம் நியாயமா இருக்கா நண்பர்களே????? குறிப்பா மேலே குறிப்பிட்ட கதாநாயகர்கள்னா எல்லாருக்கும் ஒரே குஷியாகி, ஒருத் தனிப்படமே ஓட்டிடறீங்க.

டிஸ்கி: நான் என் பதிவுல கருத்து சொல்லி ரொம்ப நாளாச்சுல்ல, கீழ கொடுத்திருக்கேன் பாருங்க ஒரு அபார கருத்து,

சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!!

Sunday 27 July, 2008

ஏ ஃபார் ஆப்பிள்

சஞ்சய் அவர்கள் என்னை ஏ பார் தொடரை தொடரச் சொன்னமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்குப் பல சமயங்களில் நம்ம தமிழகத்தில் எந்தத் துறையில் யார் அமைச்சர், தலைமைச் செயலகத்தில் என்னன்ன பிரிவுகள் இருக்குன்னு, அரசியல் கட்டுரைகள் படிக்கும்போது சந்தேகங்கள் வரும். அதை Assembly.tn.gov.in என்கிற தளத்தில் சென்று பார்ப்பேன். இது எனக்கு விசா வாங்கும்போது தேவைப்பட்ட சில நடைமுறைகளுக்கு மிகவும் உபயோகமாயிருந்தது.

அவ்வப்பொழுது தமிழில் வாழ்த்தட்டைகளை பகிர்வதற்கு bharathgreetings.com செல்வேன்.

C for Cartoonindia.com , எனக்கு எப்பொழுதும் ரொம்பப் பிடித்த ஒன்று. அதுப்போல Glasbergen.com(கொஞ்சம் அமெரிக்க வாசம் தூக்கல்) பிடிக்கும். அதேப்போல மேற்கத்திய சங்கீதத்தில் ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு அதன் மேல் ஆர்வமேற்படுத்தியவர் என் கணவர். இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி செல்லும் தளம் இந்த Classiccat.net .

D for தினத்தந்தி தான், நான் முதல் முதலில் எழுத்துக்கூட்டி தமிழ் படித்தது இதில்தான். அதனால் மற்ற தினசரிகளைவிட இதன் மேல் எனக்குக் கொஞ்சம் பிரியம் ஜாஸ்தி.

E for ebay தான். இஷ்டத்துக்கு தேவயில்லாததஎல்லாம் ஷாப்பிங் போகும்போது வாங்கிட்டு குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, இதனை திறந்தால் மக்கள் எவ்வளவு கேணத்தனமாக வாங்குகிறார்கள், வாங்கி இருக்கிறார்கள், விற்கிறார்கள் என்பதை பார்த்து மனச்சாந்தி பெறலாம்.
அடுத்து ELLE என்னுடைய பேவரிட் இதழ். பனிக்காலம், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் என அந்தந்த காலகட்டத்தில் கரண்ட் லுக் என்ன, எந்தெந்த நிறங்களில் இப்பொழுது ஆக்சசரீஸ் அணியவேண்டும், எந்த போஷ் எடுத்துப்போகலாம், சாண்டில்ஸ்,பூட்ஸ் வகைகளில் எதையெல்லாம் இம்முறை அணியக்கூடாது போன்ற முக்கியத் தகவல்கள் இதிலிரிந்து ஒவ்வொரு காலத்திற்கும் முன்னரே தெரிந்து, அதற்கேற்றார் போல் ஷாபிங் செய்வோம். அதோட அனைத்து காலங்களிலும் சிலக் குறிப்பிட்ட இடங்களில் திடீர் தள்ளுபடி வெறும் அரைநாள், இரண்டு நாட்கள் என நடக்கும், அந்தத் தகவல்களை இந்த இதழின் தனிப்பட்ட கடிதங்களிலிருந்து பெறலாம். ஒரு முறை நான் ஒரு ப்ரதா(அது ஒன்றுதான் என்னுடைய ஒரே ப்ரதா கலெக்ஷன்) பேக்கை எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கினேன்.

G for google மற்றும் அதன் தொடர்புடைய பிறத் தளங்கள் எல்லாவற்றையும் கூறலாம். இதையும்( guruji.com) நான் அவ்வப்போது உபயோகிப்பதுண்டு.

H for Hinduonline தான். இதில் மிகப் பிடித்த ஒரு பொழுதுப்போக்கு விஷயம் ஞாயிறன்று வரும் மணமகள்/மணமகன் தேவை பக்கங்கள்தான். இப்படிஎல்லாம் கூட எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்களா என ஆச்சர்யப் பட வைக்கும். அதேப்போல பல சரித்திர பக்கங்களை பட்டியலிடும் Historysites.net எனும் தளமும்,அடிக்கடி செல்வதில்லை எனினும் பிடிக்கும்.

I for ibnlive . பல சமயம் ஓவர் சீனா இருந்தாலும் பாக்கப் பிடிக்கும். இட்லிவடையும் நான் தினமும் செல்லும் இடம்.

J for Jeyamohan.in, எனக்கு இவரோட 'பாப்பா சாப்பிடு பாப்பா', மற்றும் இவர் மகளைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். இதெல்லாத்தையும் விட எனக்கு சிறுவயதிலிருந்தே மிக மிகப் பிடித்த நடிகர் ஒருவர் என்றால் ஷம்மிகபூர் தான். அவர் வலையில் சேட்டிங் செய்கிறார் என்று கேள்விப்பட்டுத்தான் நான் நெட் பக்கமே பள்ளி காலத்தில் திரும்பினேன். அவரோட மின்னஞ்சல் போக்குவரத்துக்கள், சேட்டிங் என்று இரண்டு மூன்று வருடங்கள் கலகலப்பாக இருந்தது. இந்தியாவில் அனைத்து திரைத்துறயினருக்கும் முன்னர் வலையுலகில் கால் பதித்தவர். அவரின் Junglee.org.in ஆக்டிவாக இருக்கின்றதோ இல்லையோ ஒரு விசிலடிச்சான் குஞ்சாக தினமும் ஒரு முறை சென்று விடுவேன்.

K for குமுதம்.காம், கல்கிஆன்லைன், அதேப்போல Keepvid.com, என்னுடைய பேவரிட் பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கு அடிக்கடி செல்வதுண்டு.

L for Le Monde, பிரெஞ்சு தினசரி, எங்கு இருந்தாலும் அவ்விடத்தில் உள்ள அம்மொழி தினசரியை படிக்க வேண்டும் (மொழிப் பிரச்சினை என்றால் குறைந்தபட்சம் பார்க்கவாவது வேண்டும்) என்பது என் கொள்கை.

M for Marian Keyes, என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை அவ்வளவு நகைச்சுவையோடு சொல்லும் இவர் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. இவருடையக் கதாநாயகிகள் பாத்திரம் பல சமயம் என்னைப் போலவே செயல்படும், பிற பாத்திரங்களும் என்னைச் சுற்றி இருப்பவர்களை ஞாபகப் படுத்தும். இவர் தன் வலைப்பக்கத்தை அடிக்கடி அப்டேட் செய்ய மாட்டார் என்றாலும் நான் தினமும் ஒரு முறையேனும் செல்வேன்.
Meteo paris வானிலைக்காக தினமும் சென்று பார்ப்பேன்.
அதேப்போல Marie Claire ரொம்பப் பிடிக்கும்(சந்தா என் மாமியார் கட்டிவிடுவார்). இதற்கும் Elle காரணமேதான்.

N for ndtv தான். இதில் கூடுதல் நல்ல விஷயம் என்னவென்றால் சேனலயே லைவாக பார்க்கலாம் என்பது தான்.

O for ஆர்குட்.

R for Radioclassique தான். சில சமயம் rediff மெயில் செல்வேன்

S for Sify, Suryan FM, என்னுடைய மற்றொரு பேவரிட் எழுத்தாளர் Sophie Kinsella வலைத்தளம்( Marian Keyes அவர்களின் கதைகள் போலவே மிக மிக நகைச்சுவையாக இருக்கும். இவருடைய shopaholic series என்னுடைய ஆல் டைம் பேவரிட்) . smashits.com நான் அடிக்கடி செல்லும் தளம்

T for Techsatish.net, தமிழ்மணம்.
V for Visual dictionary, Vikatan முதலியவை .
W for Wikipedia,Watch movies முதலியவை .
Y for Youtube, Yahoo முதலியவை.

அடுத்து நான் அழைக்கப் போவது, என்னை, ஜம்புலிங்கம் போன்றவர்களை ப்ளாகர் ஆகத் தூண்டிய அம்பி அண்ணன்(மாட்டிக்கிட்டீங்களா).
விடுமுறையில் செல்வதாகக் கூறிவிட்டு, எல்லாரையும் விட ஜாஸ்தி பதிவுகளை போடும் நண்பர் மோகன் கந்தசாமி.
தினமும் வற்றாத நகைச்சுவை நக்கலோடு பதிவுகள் இடும் நண்பரும், எங்கள் மன்றத்தின் துணைத் தலைவருமான ச்சின்னப் பையன்.

வழிநெறி:தலைப்பு :: ஏ ஃபார் ஆப்பிள்அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்கஇன்னும் மூணு பேரை பிடிங்க .. எழுத வைங்க

Tuesday 15 July, 2008

கண்ணீர் அஞ்சலி!!!!!!!!!!!!!!!!!!!!!!

சில சம்பவங்கள் மட்டும் நமக்கு அப்படியே மனசுல பதிஞ்சு கனக்கச் செய்து மறக்க முடியாம பண்ணிடும் இல்லைங்களா, என்னை அந்த மாதிரி பாதித்த ஒரு சம்பவம் நடந்த நாள் நாளைக்கு வருது. எனக்குன்னு இல்லை பலருக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன், ஆனால் எனக்கு அந்த சம்பவம் குறித்து கூறிய நபரால் மேலும் மனஅழுத்தம் ஏற்பட்டது.

நாளைதான், கும்பகோணம் விபத்தில் கருகிய அழகு மொட்டுக்களின் நினைவுநாள். எல்லோரும் நாளை கல்வி நிலையங்களில், பொது இடங்களில், அரசு அலுவகங்களில், மத ஆலயங்களில் என முடிந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவோம். ஆனால் தங்களின் கனவை, பொக்கிஷத்தை ஓரிரு நிமிடங்களில் பறிகொடுத்த அந்த பெற்றோருக்கும், தங்களின் ஆத்ம நண்பர்களை பறிகொடுத்த உடன் பிறப்புகளுக்கும் எப்படி இருக்கும். இயற்கை சீற்றத்தின் போது பறிகொடுக்கும் உயிர்களின் உறவுகளுக்காவது ஒரு சிறு ஆறுதல் மிஞ்சுகிறது, ஆனால் இப்படி மொத்தமாக பிறரின் அலட்சியத்தால், இல்லை நம்முடைய கையாலாகாத்தனத்தால், கோரமாக உயிர் துறக்கும் போது அந்த காயம் வடுவாகக் கூட மாறுவதில்லை.

எனக்கு முதலில் விஷயத்தை கூறியது என்னுடைய அக்காளின் மூன்று வயது மகன், தன் மழலை கூட மாறாதவன், பள்ளியில் திடீரென மழலை பிரிவுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட போது கூறப்பட்ட காரணத்தினை என்னிடம் கூறினான். நல்லவேளை தொலைக்காட்சியில் என் தந்தை முன்பே பார்த்ததால், அவன் அதை பார்ப்பதை தவிர்த்தார்.

இப்போழுதுக் கூட தெரியாமல் தீயில் விரலை சுட்டுக்கொள்ளும்போது கூட, நமக்கே இப்படி என்றால், தப்பிக்க கூட வழியில்லாமல் மாட்டிக்கொண்டு கதறி உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு எப்படி இருந்திருக்கும், என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு கொஞ்சமும் குறைவில்லாத சோகம் தீயின் நாக்குகளில் மாட்டியும் தப்பித்த குழந்தைகளின் நிலை. சில வீடுகளில் பெற்ற இரண்டு குழந்தைகளையும் இழந்தப் பெற்றோர், சில வீடுகளில் தம்பியை காப்பாற்றப் போய் முடியாமல் படுகாயமடைந்த சகோதரி என பரிதாபமான காட்சிகள்.

இதற்கு யாரை குறை சொல்வது? வேறுவழியில்லாமலும், விழிப்புணர்ச்சி இல்லாமலும் இந்தப் பள்ளியில் படிக்க வைத்த பெற்றோரையா, பொறுப்பில்லாமல் ஆடிவெள்ளிக்கு கோவிலுக்கு சென்று புண்ணியம் கட்டிக் கொள்ள முயற்சித்து இந்த துரோகத்தை செய்த ஆசிரியப் பெருமக்களையா, பெற்றோரின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி செயல்பட்ட பள்ளித் தாளாளரயா, அனைவருக்கும் கல்வியை கிடைக்கச்செய்யும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தும், சோம்பலாலும், பணத்தாசயாலும் இந்தக் கேட்டிற்கு துணைபோன கல்வித்துறை அதிகாரிகளையா, இல்லை உலகிலயே சுறுசுறுப்பான புத்திசாலி வந்தாலும் நிர்வாகம் செய்து மக்களுக்கு நன்மை செய்ய முடியா வண்ணம் இருக்கும் நம் அரசு இயந்திர அநியாய குளறுபடிகளையா?

ஆண்டாண்டுகாலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது இவ்விஷயத்தில் ஏற்க முடியாது. குறைந்தபட்சம் இனியாவது இதைப் போன்ற விபத்துக்கள் நடக்கா வண்ணம் அனைவரும் தங்களின் குறைகளை திருத்திக் கொண்டால் மட்டுமே அந்த பெற்றோருக்கும், தங்களின் உயிர் நண்பர்களை இழந்து இந்தப் பிஞ்சு வயதிலேயே அத்தகைய கொடூர அதிர்ச்சியை தாண்டி வந்திருக்கும் அப்பள்ளியை சேர்ந்த பிற குழந்தைகளுக்கும் சிறிதளவு ஆறுதலாவது ஏற்படும். பிறர் மீண்டாலும் அவர்கள் ஒவ்வொரு ஜூலை பதினாறும் இந்த சம்பவத்தை வாழ்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.

மலராமலே உயிர்விட்ட அந்த மொட்டுகளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!!!!!

Sunday 13 July, 2008

சந்தேகங்கள்

எனக்கு சில சந்தேகங்கள் இருக்குங்க, யாராவது கொஞ்சம் தீர்த்து வைங்களேன்.

ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில பண்ற தவறுகள பெரிதுபடுத்தி பாக்குற சமூகம், ஏங்க அவங்களே பொது வாழ்க்கையில பண்ற தவறுகள கண்டுக்கறதே இல்ல?
தனிப்பட்ட வாழ்க்கையில நல்லவங்களா இருக்கிறவங்க பொது வாழ்க்கையில தப்பான கருத்துக்களே வெச்சிருக்க மாட்டாங்களா?

ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்தால் ஏற்படுற பாதிப்பு ஒரு சிறிய வட்டத்தை தான் பெரும்பாலும் பாதிக்குது, இன்னும் அதில் சில விஷயங்களுக்கு பரிகாரம் செய்வதின் மூலம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கலாம். ஆனா இதுவே பொது விஷயத்தில் செய்யும்போது பெரும்பான்மையாக பாதிக்கப் படுபவர்களுக்கு பல சமயங்களில் எந்தப் பரிகாரமும் செய்ய முடிவதில்லை, அப்படி இருக்கும்போது இதற்கு கொஞ்சமாவது கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா வேண்டாமா?

நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் பலருக்கும், பல விஷயங்களுக்கும் பொருந்தினாலும், இன்னைக்கு நம்மளோட தலையாய பிரச்சினை அணு ஒப்பந்தம் பற்றியும், அதை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஆதரிக்கும் சாராரைப் பற்றியும்தான். இவர்கள் சொல்லுவதிலேயே முக்கியமானக் காரணம் மின்சாரத் தன்னிறைவாம்.

சரிங்க நான் இதை எதிர்க்கறேன்னா, எனக்கென்ன தெரியும் அடிப்படை தேவையான மின்சாரத்தைப் பற்றியும் அந்தப் பற்றாகுறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்? எனக்கு இது பற்றி ஜாஸ்தி தெரியாதுதான், ஆனா ஒரு விஷயம் சுய புத்தி உள்ள எல்லாருக்குமே தெரியும், அது என்னன்னா, மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்.

தெரியாமத்தான் கேக்குறேன், பாதுகாப்பு பாதுகாப்புன்னு பேத்துறீங்களே, நாட்ல நூறு வகையான அணு ஆயுதங்களை வெச்சுகிட்டா எல்லாரும் பயந்துடுவாங்களா, அழிக்க நினைக்கறவன் கையில் ஒண்ணிருந்தாலும் நூறிருந்தாலும் அதே விளைவுதானே. சரி இதை எதிர்க்கிறவங்களாவது கொஞ்சம் ஒழுங்கான காரணத்தை முழுசா சொல்லி எதிர்க்கிறாங்களா, அதுவும் இல்லை. நாம எப்படி அமரிக்காகிட்ட அடிமயாகலாம்னு எதிர்த்து பல வாதங்கள எழுப்புறவங்கக் கூட அணு உலைகளால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் அதனை சார்ந்துள்ள உயிரினங்கள், விவசாயம், இவ்விரண்டையும் நம்பியுள்ள அனைத்து வகை தொழில்கள்னு எல்லாமே பயங்கர மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்கிற உண்மையான, அதி முக்கியமான வாதத்தை ஏன் வைக்க மாட்டேன் என்கின்றனர்.

நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள்(அது அமெரிக்க உதவியினாலாகட்டும், இல்லை பிரான்சு உதவியினாலாகட்டும் இல்லை நாமே யார் உதவியும் இன்றி ஏற்படுத்துபவைகளாகட்டும்) அமைப்பதனால் நாட்டின் எதிர்காலமே சூனியமாகாதா?

நாம் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தானே முடிவெடுக்க வேண்டும். அதிலும் இறந்த காலத்தில் பிற நாடுகளில் செய்தவற்றை வைத்து எப்படி நம் நாட்டிற்கு நிகழ்கால மற்றும் எதிர்கால முடிவுகள் எடுக்க முடியும்? இந்த விஷயத்திற்கு எப்படி பிரான்சை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும், இப்பொழுது பிரான்சுலேயே சில அணு உலைகளை பொதுமக்களின் எதிப்பினால் மூடி விட்டார்களே, மேலும் பல ஆண்டுகளாக அணு உலைகள் புதிதாக அமைப்பதில்லயே, ஏன்?

சரி அணு உலைகள் அமைக்கிறோம் பின்னர் அதன் கழிவுகளை என்ன செய்வது? பிரான்ஸில் மற்றும் ஜப்பானில்(பிரான்சின் உதவியால் கட்டப்பட்டது) உள்ள அணுக்கழிவு ரீசைக்கிளிங் ஆலைகள்தான் இதற்கென வடிவமைக்கப் பட்டவை. ஆனால் இவ்விரண்டில் ஒன்று முற்றிலும் செயலிழந்து விட்டதென்றும், மற்றொன்றில் குவியும் கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் அவ்வாலையிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றும் படிக்கின்றோமே, நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்?

சரி இன்றில்லாமல் போகலாம் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குள்ளாக மாற்று ஏற்பாடை கண்டுபிடித்து விட மாட்டார்களா என்றால், இந்த விஷயத்தை பொறுத்த வரை பாதிப்பு கழிவினால் மட்டுமில்லை, உற்பத்தியினாலேயே உள்ளது, அதன் உபயோகத்தினாலேயே உள்ளது. என்னுடைய மிக நெருங்கிய உறவினர் என்ன ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்றால், புற்று நோயிற்கு(குறிப்பாக மார்பக புற்று நோய்) அளிக்கப்படும் சிகிச்சையின்போது சில சமயம் பாதிக்கப்பட்டவரும், சில சமயம் சிகிச்சை அளிப்பவருமே கதிர் வீச்சின் மோசமான பாதிப்புக்குள்ளாகின்ற காரணத்தால், அதன் வீரியத்தை குறைப்பது அல்லது இந்த சிகிச்சயிலேயே சிறியளவில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்ப்பது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது இன்றைய முன்னேற்றத்திற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று எப்படி கேட்பது? முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்க ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகள் வேண்டாமா?

ஓரளவிற்கு சட்டத்தை ஞாயமாக செயல்படுத்தும் நாடான பிரான்சிலயே அனைத்து பாதுகாப்புகளும் செய்த பின்னரும் நிறைய நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே, சாயப் பட்டறைகளின் அத்துமீறலை கூட சரியாக தட்டிக் கேட்காத நம் நாட்டின் நிலை என்னவாகும்? நாம் ஒரிஸ்ஸா கடற்கரையில் உள்ள தோரியத்தை வைத்து அணு உலைகள் அமைக்கலாமே எனச் சிலர் கூறுகின்றனர். அந்த அணு உலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? பாதுகாப்பு, மின்சாரம் எனக் கூறும் நாம் ஏற்கனவே அணு உலைகள் அமைந்த பகுதிகளில் என்னன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், கசிவு ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்று. இதை தவிர வேறொன்றும் இல்லை. அணு உலைகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள வயல்களின் விவசாயப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்ற சட்டம் சில நாடுகளில் உள்ளது. ஏன் அங்குள்ள புற்களை உண்ணும் ஆடுகளை கூட உண்ணக் கூடாதென்கின்றனர். இவ்வளவு முக்கியமானப் பிரச்சினையில் வழ வழா கொழக் கொழா பதில்கள் சரிவருமா?

சரி எல்லாவற்றையும் விடுங்கள், பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா?

நம்முடைய முக்கிய ஆதார தொழிலான விவசாயம் முற்றிலும் அழிவுப்பாதையில் சென்றுவிடாதா? இதனால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடாதா? அனைத்து தொழில்களும் பலவீனமடயாதா? இன்றைய நிலையில் சாதாரண நோய்களுக்குக் கூட மருத்துவ வசதியின்றி பலர் வாழ்வு கேள்விக்குறியோடுள்ளது, நாளை இதன் பாதிப்புகளால் ஏற்படும் புதிய நோய்களுக்கும், அதற்கு தேவையான மருத்துவத்திற்கும் எங்கு செல்வீர்கள், பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தி சந்ததிகளையே பாதிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த இதனை நாம் போற்றித்தான் ஆக வேண்டுமா?

மின்சாரத் தன்னிறைவடைஞ்சு மென்பொருள் ஏற்றுமதி செஞ்சு ஈட்டுற அன்னியசெலாவனிய மருத்துவத்துக்கும், நஷ்ட ஈடுக்கும் தாரைவார்க்கப் போறோமா? இல்ல இந்த உலைகளை பாதுகாக்கும் பொருட்டு செலவிடப்போறோமா? மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை? பல பயன்பாடுகளில் ஏற்கனவே நாம் அணுசக்தியை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம், அதனை எதுவும் செய்து தடுக்க முடியாது, உள்ள உலைகளை எல்லாம் மூடிவிடுவதும் தீர்வாகிவிடாது. ஆனால் மேலும் பல உலைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதே இங்கு கூறப்படுகிறது.

நான் ஆரம்பத்தில் கேட்ட சிலக் கேள்விகள் இந்தப் பிரச்சினையிலும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குரியது. ஏனென்றால் மக்கள் ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை யாரும் தவறாக மட்டுமல்ல பொறுப்பில்லாமலும் பயன்படுத்தக் கூடாது. அது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பாடுபடுவதாய் கூறும் அனைத்து துறையினருக்குமே பொருந்தும்.

Tuesday 8 July, 2008

கமலுக்கு உலகநாயகன் பட்டத்தை உறுதி செய்யும் அதி முக்கிய பதிவு

டிஸ்கி 1: ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள் மன்னிக்கவும். இந்தப் பதிவை பார்த்து நான் கமல் ரசிகை என யாரும் எண்ண வேண்டாம். நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.


டிஸ்கி 2: வழக்கமாக எல்லோரையும் கைல கால்ல விழுந்தாவது ஒரு பின்னூட்டம் போடுங்க சாமின்னு கேக்குற நானு, இந்தப் பதிவுக்கு கேக்கல(அவங்களை தர்மசங்கடப்படுத்த வேண்டாமேன்னுதான்)


டிஸ்கி 3: ஏன் இந்த கொழுப்பெடுத்த வேலைனு திட்ட நினைக்கிறவங்க தாராளமா திட்டலாம், ஏன் எங்க பதிவெல்லாம் சூடான இடுகைல வரணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா?ஆமாங்க ஆமாம், அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் பதிவு.


நான் நேற்று மாலை வழக்கமாக செல்லும் பால் ரெஸ்டாரெண்டில் (பாரிஸ், லக்ஸம்பெர்க், gibert ஜோஸப் புத்தகக் கடை அருகில் உள்ள கிளை, மிகப் பிரபலமான லேண்ட்மார்க்).நான் சென்றபோது உணவகத்தில் ஒரே வெளிநாட்டினர் மயம்(ஏன்னா இது அவங்க ஊர்). சிலருடன் பேச்சுக் கொடுத்தேன். முதலாமவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெண் தோழியின் முதுகில் கைகளால் கோலம் போட்டுக்கொண்டே சிரித்தமுகத்துடன் ஹலோ சொன்னார்(எனக்கு நாகரிகம் இல்லைனா, அவருக்குமா இருக்காது? பின்ன அவரு கடல போடும்போதுப் போய் மூக்க நொழைக்க தனி அநாகரிகச் சிந்தனை வேணும்ல). நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் அங்குள்ள அல்டெனா எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும் தான் தற்போது சுவிசர்லாந்தில் உள்ள cern லேபில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) என்றும் சொன்னார். சரி விசயத்துக்கு வருவோம் என்று ”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா" என்றேன். பேந்தப் பேந்த முழித்தவர் சொன்ன பதில், “நான் நிறைய ஆராய்ச்சியாளர்களை சந்திப்பவன், அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதேயில்லையே”. மருத்துவரான அவரது தோழியும் தோள்பட்டையை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி “தெரியவில்லை” என்று உடல்மொழியால் சொன்னார். சரி உங்களுக்குபிடித்த ஒரு க்ளாசிகல் ஆராய்ச்சியாளர் பெயரை சொல்லுங்கள் என்றேன்.. 'professor andrew wallard' என்று சொன்னார். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.சரி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரயாவது தெரியுமா என்றேன், அதற்கும் உதட்டை பிதுக்கினார். சரி மூடர்களுக்கென்ன தெரியும்னு அடுத்து நின்ன ஜப்பான் நாட்டு கப்பல் கேப்டனிடம், உங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் தெரியுமா எனக் கேட்டேன், கொழுப்பப் பாருங்க, அவரும் உதட்டைப்பிதுக்கினார். அவனவன் இங்கே 100 கோடி, 1000 படம், என்று ஒரே டெசிமல் நம்பர்களாகபுகழும் இவர்களுக்கா இந்த சோதனை என்று வேதனைப்படலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள் ஏதோ மனநலம் பிழன்றவள் எனக் கருதி போலிசை கூப்பிட ஆயத்தமாவதை பார்த்ததால் அங்கிருந்து வெளியேறினேன்.


இத்தோட விட்டேனா, வீட்டிற்கு வந்ததும் முதலில் அமரிக்க டாக்டரான எங்கக்கா கணவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் "உங்களுக்கு கமல்ஹாசன் என்ற நடிகரை தெரியுமா" என்றேன். அவர் உடனே, "தெரியுமே, தசாவதாரம் நேத்துதான் ரெண்டாவது முறை எல்லாரும் பார்த்தோம்" என்றார். அவரின் பெற்றோருக்கு(கணவர் பெரிய வீட்டலங்கார சாமான் மற்றும் பர்னிச்சர் கடை வைத்திருப்பவர், மனைவி சமூக சேவை மையத்தில் வாலண்டரி சர்வீஸ் செய்பவர்) போன் செய்தேன். அவர்களும் அதையே கூறினர். அடுத்தது பிரெஞ்சுக்காரர்களான என் மாமியார் வீட்டிற்கு(மாமனார் ஆர்க்கிடெக்ட், மாமியார் ஹோம் மேக்கர்) போன் செய்தேன். அவர்களும் 'சென்ற வாரம் பாரிஸ் வந்தப்போ எல்லாரும் சேர்ந்து தியேட்டரில் பார்த்தோமே தசாவதாரம், அதில் நடித்து சாதனை புரிந்த கமல்தானே' என்றனர், நான் ஆமாம் எனவும், அவரைப் போய் எங்களுக்கெப்படி தெரியாமல் இருக்கும் எனக் கோபப்பட்டனர். சரி என அவர்களை சமாதானப்படுத்திவிட்டு விஞ்ஞானியான என் கணவரிடம் அதே கேள்வியை கேட்டேன், 'வேற வேலை இல்லைனா வழக்கம்போல ப்ளாக் எழுதி மொக்கப் போடறதுதான, இன்னைக்கு நான்தானா கெடைச்சேன்னு' கடுப்பானவர கூல் பண்ணி அதிமுக்கிய கருத்துக்கணிப்புக்காக கேக்கிறேன்னு சொல்லவும், 'கமலைத்தான, நல்லாவேத் தெரியும், கேட்டுக்க, அவரோட முதல் படம் களத்தூர் கண்ணம்மா, முதல் மனைவி வாணி கணபதி, இப்போதய கேர்ள் பிரண்டு கௌதமி, மகள்கள் பேரு சுருதி, அக்ஷரா. ஷூட்டிங் பார்த்திடாத இங்கிலாந்து ராணி முதல் முதலா பார்க்க ஆசைப் பட்டது இவரோட பட ஷூட்டிங்கைத்தான். இப்போதைக்கு இதப் பத்தி நீ கண்டிப்பா ஒரு பதிவ போடுவ, ஏன்னா இன்னைய தேதிக்கு எக்கச்சக்க பிரபலமான ப்ளாகர் ஆகணும்னா, அவரைப் பத்தி ஒரு வரி எழுதினாப் போதும்' அப்படீன்னு அடுக்கிட்டே போறாருங்க. எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆகிடுச்சி. சரி இப்படி உலகத்தில் உள்ள விஞ்ஞானி, ஆர்க்கிடெக்ட், லங் ஸ்பெஷலிஸ்ட், பெரிய பிசினஸ்மேன், சமூக சேவகி, இல்லத்தரசின்னு எல்லாப் பிரிவினரிடையும் பயங்கர அறிமுகத்தோட இருக்கும் கமல் ஒரு பட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானவர். அது என்னன்னா,


உலகநாயகன்


கடைசி டிஸ்கி: இந்தப் பதிவில் நான் என் குடும்ப பேக்ரௌண்டை சொல்லி பீத்திக்கிரேன்னு நினைச்சீங்கன்னா, ரொம்ப சரியா கணிச்சிருக்கீங்க. இப்பல்லாம் அதுதான் டிரன்ட். இதை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன், :):):)

Tuesday 1 July, 2008

கவித, டி.ராஜேந்தர், கும்ப்ளே, மாமி

டிஸ்கி 1: கிருஷ்ணா(பரிசல்காரன்), மங்களூர் சிவா, (யுகபாரதி வேற எழுதறார் இல்ல) இவங்களோட பதிவயெல்லாம் பார்த்திட்டு அத மாதிரியான கவிதைகள எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா இப்பவே கழண்டுக்கங்க, அப்பாலிக்கா ஏற்படுற பாதிப்புக்கு நான் பொறுப்பில்லீங்கோ.


டிஸ்கி 2: இந்தப் பதிவு என்னோட ஆசான்களான டி.ராஜேந்தருக்கும், பேரரசுவுக்கும் சமர்ப்பணம்.


இவங்க ரெண்டு பேரும் எனக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க. இனி இந்த எலியோட இம்சையான மலரும் நினைவுகள கேட்டு காண்டானீங்கன்னா, என் பதில் ஒண்ணுதான். வாயில வந்ததெல்லாம் (வாந்தியா இருந்தாக்கூட) கவிதைனு கற்பனை பண்ணிக்கிட்டு, பல மசாலா ஹீரோக்களோட வாழ்க்கைக்கு சூனியம் வெக்க வந்திருக்க பேரரசோட அழிச்சாட்டியத்த நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன். ரைமிங்கா பேசினாலே அதுக்குப் பேரு கவிதைனு ரெண்டு மூணுத் தலைமுறையயே நம்ப வெச்சு கழுத்தறுத்துகிட்டிருக்காரே டி.ராஜேந்தர் அவர நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன். இருங்க இருங்க, கவலைப்படாதீங்க, இப்படில்லாம் நான் சொல்லப்போறதில்லை, அரசன்(என் கதைல வர்ற பிரண்டு) என்னை அன்றே கொன்னுட்டான்(அப்ப நீ ஆவியானெல்லாம் கேட்டீங்கன்னா அப்புறம் தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா எழுதி மத்த பதிவுகள்ல போட்ட பிளேடத் திருப்பிப் போடுவேன்), அதாவது வன்முறையில் நம்பிக்கையில்லாதக் காரணத்தால்(தேவையான ஆப்பு அப்போதே வைக்கப்பட்டமையால்) இந்த பாதகத்தை நான் எப்பவோ நிறுத்திட்டேன், ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள என் ஆசான்களின் பாதிப்பு தமிழ்நாட்ட என்னமா ஆட்டிப் படைக்குதுன்னு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத்தான் இந்தப் பதிவு.


ஏற்கனவே என்னோட பேர்வெல் டே அனுபவங்களை இங்கே http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_06.html பதிஞ்சுருக்கேன். அதுல +2ல கொண்டாடின ஏனோத்தானோ பேர்வெல் டே பத்தி சொல்லிருந்தேன்ல, அந்த பேர்வெல் டேல, மரபு மாறாம சீனியர்களான எங்கள பழிவாங்க வழக்கம்போல சீட்டுக் குலுக்கிப் போட்டு, யாருக்கு எது வராதோ அதையே செய்யச் சொல்லி கட்டக் கடசியா இந்த ஜூனியர்ஸ் ரேக் பண்ணுவாங்கல்ல, அத மாதிரி எனக்கு ஆப்படிக்கறதா நெனச்சு அவங்க தன் சொந்தக் காசிலயே சூனியம் வெச்சுகிட்டாங்க.


என்னோட கவிதை அலர்ஜி கிட்டத்தட்ட எங்க பள்ளிக்கூடத்துல எல்லாருக்குமே தெரியும். இதை இந்த புத்திசாலிங்க பயன்படுத்திக்கிட்டு அதையே எனக்கு வரமாதிரி பாத்துகிட்டாங்க. நாங்க யாரு? விடுவமா, அங்கயே ஒரு கவிதைய எடுத்துவிட்டேன். அது என்னன்னா,


கும்ப்ளே

நீ ஒரு ஆம்பளே

உங்க அம்மா ஒரு பொம்பளே.


இதெப்படி இருக்கு! இதக் கேட்டு அந்தப் புத்திசாலிங்களோட சேர்த்து பரீட்சை பயத்துல ஒரு மார்கமா இருந்த எங்கக் கிளாசு பசங்களும் (புத்திபேதலிச்சுப் போய்டுச்சோ இல்ல விட்டா அடுத்த கவிதைய ஆரம்பிச்சிடப்போறாங்கிற பயத்திலயோ) கன்னாமுன்னானு தட்டோ தட்டுன்னு(கையத்தாங்க) தட்டுறாங்க. கீழ எறங்கினா ஒரே பாராட்டுமழை. சிலப் பேர் சீரியஸா மூஞ்ச வெச்சுகிட்டு,"உன்னோட இந்தத் திறமைய இவ்ளோ நாள் ஏன் வீணாக்கினேனு" கேட்டுட்டாங்க.


விடுவனா நானு. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு வியூகம் வகுக்க ஆரம்பிச்சேன். பாராட்டுன அப்பாவிங்க அதோடப் போக வேண்டியதுதானே. ஒரு பலியாடு கடசீ பரீட்சை முடிஞ்சப்புறம் நேரா பலிப்பீடத்துக்கு(அதாவது என்கிட்டே) வர, என்ன ஏதுன்னு நானும் நல்லபுள்ளயாட்டமா கேட்டேன். அந்தப் பலியாடும் தன் கழுத்துல தானே மாலைப் போட்டுக்கறதப் பத்தின தெளிவில்லாம என்கிட்டே ஆட்டோகிராப் புக்க நீட்டப் போக, என்னோட கவிதை ஏவுகணைய ஏவினேன்.அதென்னன்னா


மேலப் பார்த்தா வானம்

கீழப் பார்த்தா பூமி

உங்கம்மா எல்லார்க்கும் மாமி


இப்படி எழுதி என் கையெழுத்தும் போட்டுக் குடுத்திட்டேன். அந்தப் பொண்ணும் ரோபோ படத்துக்கு முத நாள் முத ஷோ டிக்கட் கெடச்சா மாதிரி பெருமையாகி ஓடுனா. இங்க நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அந்தப் பொண்ணு பிராமண பொண்ணு. அவங்கம்மா எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுவாங்க. நாங்களும் அவங்கக்கிட்ட மாமி, மாமின்னு ரொம்ப ஒட்டுதலா இருப்போம். அத மனசுல வெச்சுத்தான் நான் அப்படி எழுதினேன். மாமாவோடப் பொண்டாட்டி மாமிங்கறது சுத்தமா மறந்துப்போச்சு. இதுப் புரியாதவங்க அந்தப் பொண்ணுகிட்ட நான் டபுள் மீனிங்க்ல அவள நக்கல் பண்ணிட்டதா போட்டுக் குடுத்துட்டாங்க(ஏன்னா அந்தப் பொண்ணு அப்பப்போ யாரையாவது லவ் பண்றேன்னு சொல்லி உளறுவா, ஆனா அவ இன்பாச்சுவேஷன்ல ஜாலியா சொல்றான்னு நாங்க யாரும் எப்பவுமே அதை சீரியஸா எடுத்துக்கலை)


அன்னிலேருந்து அவ செமக் காண்டா ஒரு மாசத்துக்குத் திரிஞ்சா, ஏன்னா அதுவரைக்கும் எனக்கு விஷயம் புரியவே இல்லை. கடசியா ஒரு நல்ல உள்ளம் என் ட்யூப் லைட்டுத்தனம் தாங்க முடியாம விளக்கப்போக, அப்புறம் என்னோட கவிதை ஆர்வத்தை தூக்கி குப்பைதொட்டிலப் போட்டுட்டு அவகிட்டப் போய் விளக்கம் சொல்லி சமாதானப்படுத்தினேன். ஏற்கனவே என் கலை மற்றும் கவிதையார்வத்தை பத்தி அவளுக்கு முழுசா தெரிஞ்சதால ஆப்பு அத்தோட முடிஞ்சுது. இன்னைக்கு அவளும் இந்தப் பதிவ படிச்சுக்கிட்டுருக்கா, இந்த மொக்கைய படிக்கறச்சே அவ முகம் எப்படி மாறுங்கறத உங்களோட கற்பனைக்கே விட்டுடறேன்.

Wednesday 25 June, 2008

கமல், தசாவதாரம், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

தசாவதாரத்தை பத்தி எல்லாரும் எழுதி, தான் படம் பார்த்தாச்சுன்னு பீத்திகிட்டு இருக்காங்க, சரி நாமும் பார்த்தத எழுதினாத்தான ஒரு பெருமையா இருக்கும்னு இதை எழுதுகிறேன்.

நம்பி ஏன் அழுக்கு வேஷ்டி கட்டிக்கலை, அசின் ஏன் பட்டுப் புடவை கட்டிக்கிட்டு வந்து அழுறாங்கன்னு கேக்குறவங்களுக்கு, கமல் அந்த சிலைய தூக்க அந்த பாடு படும்போது ஆகாத அழுக்கா முன்னாடி இருந்திருக்கப் போகுது,அசின் மேட்டர்ல எனக்கொரு பயங்கர சந்தேகம்: ஏங்க புருஷன கொல்லப்போறாங்கன்னு தெரிஞ்சவுடன் ஒரு பொண்டாட்டி அலறி அடிச்சிகிட்டு அப்டியேத்தான ஓடி வருவா? நாம கட்டிருக்கறது பட்டுப் புடவயாச்சே, இந்த சோகக் காட்சியில அது ஒத்துவராதுன்னு பொறுமையா கழட்டி வெச்சிட்டு பழைய புடவைய தேடி எடுத்து மாத்தி கட்டிகிட்டா வருவாங்க? இல்ல அவங்க கிட்ட பட்டு புடவையே இல்லைன்னு அந்தக் காலத்து சுவடு ஏதும் சொல்லுதா? நெறயப் பேரு நெப்போலியன நக்கல் பண்ணிருக்காங்க, ஆனா எனக்கு அவரு நல்லா நடிச்சிருக்கா மாதிரித்தான் தெரியுது. இத்தனைக்கும் அவர்கிட்ட இருந்து பிரிக்க முடியாத மதராஸ் பாஷை(இத்தனைக்கும் அவரு திருச்சிக்காரராமே) வாசனை அடிக்கலைங்களே!

அப்புறம், அமெரிக்கால ஏன் முக்கிய மீட்டிங்க்ல தமிழ்க்காரங்க எல்லாரும் தமிழ்ல பேசிக்கறாங்கனு கேக்குறாங்க, இந்த பழக்கம் தமிழ்நாட்ட விட்டு வெளிய வந்த உடனே எல்லார்கிட்டயும் ஒட்டிக்கிற விஷயம்தான். அப்படி பேசினா அந்த மீட்டிங்க்ல கோவம் வந்து புரியாதவங்க திட்டுவாங்க, இந்த படத்துலயும் அதே மாதிரி ஒருத்தர் திட்டறாரு.

அடுத்து அசினோட காட்சிகள் செமக் கடுப்பா இருந்தாலும், அதே மாதிரி நார்மலான சிலப் பேரு கூட சில சமயம் அப்படி நடந்துக்கறத பார்த்திருக்கேன். ஆனா அவங்க அப்படி சுத்தறதுக்கான காரணம்தான் நம்ப முடியல. சாமி சிலைக்காக ஒருத்தங்க இம்புட்டு ரிஸ்க் எடுப்பாங்களா?
அடுத்து நெறைய பேரு திட்டுற விஷயம், அத்தனைப் பேரு சுனாமில செத்துக் கெடக்கும்போது கமலும் அசினும் எப்படி காதல் வசனம் பேசறாங்கங்கறது. ஒரு விஷயம் எல்லாரும் கவனிச்சிருக்கீங்களா, கல்யாண வீட்ல முறுக்கிட்டு திரியறவங்கக் கூட சாவு வீட்ல ஒன்னு மண்ணா கலந்திருப்பாங்க. பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதேப்போல நமக்குள்ள இருக்கிற தயக்கங்களை தள்ளி வெச்சிட்டு விஷயத்தை போட்டு உடைக்கறதுக்கும்(நாளைக்கென்ன நடக்குமோன்னு தெரியாத ஒருவித இனம்புரியா பயத்தை ஏற்படுத்தும்) தெகிரியத்தை கொடுக்கும். அசாதாரணமான சூழ்நிலைகள்ள ஏற்படுற தைரியம், 'இடம் பொருள் ஏவல் ஆள் பேரு ஊரு', இப்படி எதையும் பார்த்து வராதுங்க. என்னை பொறுத்த வரைக்கும் அந்த காட்சி மிக யதார்த்தமா இருக்குங்க.

புஷ்ஷையும் அமரிக்காவையும் நக்கலடிச்சிருக்கறது செம சூப்பரா இருக்குங்க. அதேப் போல பல்ராம் நாய்டு மற்றும் பாட்டி வர்ற காட்சிகளும் டாப். கொஞ்ச நாளா சினிமால நெம்ப விளக்கமான நகைச்சுவை காட்சிங்க தொடர்ந்து வந்து போரடிச்சிட்டதால இந்த படத்தில் வர்ற நகைச்சுவை ரொம்ப ரசிக்க வைக்குதுங்க.

பூவராகன் காரக்டர் பேசுற தமிழ் பத்தி இருவேறு கருத்துக்கள் சொல்றாங்க. எனக்கு அந்த விஷயத்தில் சுத்தமா ஞானம் இல்லாததால என்னோட ஒரு குறையை மட்டும் சொல்லிடுறேன். இவர் வர்ற காட்சிகள், பேசுற வசனங்கள் எல்லாரையும் ஜாஸ்தி கவனிக்க வைக்குது. இப்படிப்பட்ட இடத்துல எப்படிங்க, வாசு இவர்கிட்ட சொல்ற, மீதியையும் பார்த்துட்டு போங்கர வசனத்தோட தொடர்ச்சியை காட்சியாக்காம விட்டாங்க?

ஏன் நாகேஷையும், கே.ஆர்.விஜயாவையும் அந்த எடத்துல போட்டிருக்காங்கன்னு கேக்குறாங்க. இந்தப் படத்துல கவனிச்சீங்கன்னா, முடிஞ்சவரைக்கும் எல்லா கமலோடவும் குறைந்தபட்சம் ஒரு பிரபலமானவராவது நடிச்சிருப்பாங்க. நம்பியோட அசின், நெப்போலியன், பாடகரான சீக்கிய கமலோட ஜெயப்பிரதா,பூவராகனோட கவிஞர் கபிலன், டைரக்டர் வாசு, ஃப்ளெட்சரோட மல்லிகா ஷெராவத்,பல்ராம் நாய்டுவோட நடன இயக்குனர் ரகுராம், பாட்டியோட அசின், கலிபுல்லா கானோட நாகேஷ்,கே.ஆர்.விஜயா, புஷ் கமலோட கலைஞர், மன்மோகன் சிங்(கொஞ்சம் ஜாஸ்தியா கற்பனைய தட்டிட்டேனோ) ஹீரோ கோவிந்த் படம் முழுக்க எல்லாரோடவும் கலந்துகட்டி வர்றதாலையும், அவர்தான் ஹீரோனு சொல்லிட்டதாலையும் பிரச்சினை இல்லை. ஆனா ஜப்பான் கமல் கூடத்தான் பிரபலமான யாரும் தனிச்சு வரலை. சிட்டிபாபு, வையாபுரி,ஹேமா பாஸ்கர் இவங்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் அந்நியப்பட்டு போயிடக் கூடாதுன்னு சேர்த்திருப்பாருன்னு நினைக்கிறேன்(சிவாஜில சாலமன் பாப்பையா சார் பண்ற 'பழகுங்க' காமடிக்கு சிரிப்பே வரலன்னாலும்,அவரு வந்து சொன்னா அதுக் காமடி சீனா இருக்கும்னு நம்பிட்டாங்கல்ல,அது மாதிரி). இது இப்படிப்பட்ட எல்லாப் படத்துலயும் செய்யற விஷயம்தான். ஒவ்வொரு கமல் காரக்டரையும் தனிச்சி காட்ட பல வழிகள்ல இதுவும் ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். ஏற்கனவே குரங்கா கூட கமலே நடிச்சிருக்கலாமேனு நக்கல் பண்றாங்கல்லைங்க, அப்படி படம் முழுக்க கமலே வியாபிச்சி ஒருவித அயர்ச்சி ஏற்படும்போது சின்ன ரிலீப் மாதிரித்தான் இவங்களை படத்துல நடிக்க வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இதுல கமல் அவர் சாயலே இல்லாம எதுக்கு சில காரக்டர்களுக்கு மேக்கப் போட்டுகிட்டார்னு எனக்குப் புரியல. கொஞ்சம் நல்லா சாயல் இருந்தாத்தானே அவரோட நடிப்புல உள்ள வித்தியாசத்தை தூக்கி காமிக்க முடியும். அதே மாதிரி மேக்கப் சரியில்லேங்கும்போது எதுக்கு இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்ஸ் வெச்சாருன்னு புரியல.

அப்புறம் எப்படி ஃப்ளெட்சர், ப்ளேன்ல இருந்து இறங்கின உடனே தமிழ்நாட்ல உள்ள சந்து பொந்தெல்லாம் பூந்து சேஸ் பண்றாருங்கறாங்க. ஏங்க இது உங்களுக்கே அடுக்குமா, அவரு கடைசி அரைமணிநேரம் வரைக்கும் ஹேமா பாஸ்கரோட தானே சுத்தராரு? அதோட அவரு பழைய சிஐஏ ஏஜெண்டா வேற வராரு, அவிங்கெல்லாம் அத்துவானக் காட்ல விட்டாக் கூட வழி கண்டுபிடிப்பாங்களாமே. உடனே ரா அதிகாரி(பல்ராம் நாயுடு) இப்படியா சுத்திகிட்டிருப்பாருங்கறீங்க, ஏங்க படத்துல ரவிக்குமார் ஒன்னுமே செய்ய மாட்டாருன்னு நெனச்சீங்களா? அவரு சில இடத்துல தன் முத்திரைய பதிச்சிட்டாரு. நம்மள்ல சிலப் பேர் ஓவரா விவாதம் பண்ணப்போய், ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இல்லைங்கறத விட்டுட்டு, ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இருக்கு, அதெப்படி அந்தக் காட்சியில லாஜிக் வெக்காதவங்க, இந்தக் காட்சியில மட்டும் லாஜிக் வெக்கலாம்னு பழக்கதோஷத்துல திட்டிடுறாங்க.
இதுல இன்னொரு விஷயமும் நெம்ப ரசிக்கணுங்க. இந்தப் படம் பார்த்திட்டு வந்த எல்லாரையும் திருப்தி படுத்திடுத்து. கேவலமா திட்டணும்னு நினைக்கறவங்களுக்கு நெறைய விஷயம் இருக்கு, சூப்பரா இருக்குன்னு பாராட்ட நினைக்கறவங்களுக்கும் விஷயம் இருக்கு, நாத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, ஆத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, பெரும்பான்மையினருக்கும் விஷயம் இருக்கு, சிறுபான்மையினருக்கும் விஷயம் இருக்கு.

ஏங்க, கமலும் ரவிக்குமாரும் எப்பவாவது இந்த படம் சத்தியஜித்ரே, குரசோவா படங்களுக்கு போட்டின்னு சொன்னாங்களா? ரவிக்குமார டைரக்டரா போடும்போதே கமல் இது ஒரு பக்கா கமர்ஷியல் பாண்டசி படம்னு தெளிவுப்படுத்திட்டார். இதுக்கும் மேல டெலிபுரேட்டா எப்படிங்க சொல்ல முடியும். அவரு தன் கருத்தை மட்டுமே சொல்லணும்னு படம் எடுத்திருந்தா ஒப்புக்குச் சப்பாணியா சுரேஷ் கிருஷ்ணாவத்தான போட்டிருப்பாரு. நெறயப் பேரு தானே ஒரு பிம்பத்தை உருவாக்கி வெச்சுகிட்டு இல்லாததை இருக்குறாப் போல நினைச்சுகிட்டு தைய்யா தக்கான்னு குதிக்கறாங்க. அப்போ இது ஹாலிவுட் தரமா இல்லையா, ரவிக்குமார் அப்படி சொல்லிருக்காரேங்கரவங்களுக்கு, ஆமா, ஹாலிவுட் தரத்தில் தான் இருக்கு. ஏங்க ஹாலிவுட்ல ஒழுங்கா நகைச்சுவை, பாண்டசி, காதல், ரொமேன்டிக் காமடி, ஆக்ஷன், டிராமா, சயன்ஸ் பிக்ஷன், அட்வென்ச்சர், வார், ஹாரர் அது இதுனு தரம் பிரிச்சு வெச்சு அதுப்படி தானே விமர்சனம் பண்றாங்க. இங்க மட்டும் ஏங்க எல்லாத்தையும் சேர்த்து போட்டு உலகத்தரம், ஹாலிவுட் தரம், ஆஸ்கார் தரம்னு கலந்து கட்டி கும்மி அடிக்கறீங்க? இது ஒரு நல்ல பாண்டஸி வகை படங்கறது என்னோட கருத்து.
இந்த காச்சு காச்சரவங்கள எல்லாம் லேட்டஸ்ட் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்கு அனுப்பி வெச்சிடணும்.

பின்குறிப்பு: நான் ஒரு கமல் ரசிகை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு.

தசாவதாரம், கமல், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

நண்பர்களே, மறுபடி தமிழ்மண பட்டை பிரச்சினை காரணமாக இந்த பதிவு இங்கு
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_2984.html
மறுபதிப்பு செய்யப்படுகிறது. இங்கு போடப்பட்ட பின்னூட்டங்கள் காப்பி செய்து புதிய பதிப்பில் போடுகிறேன். இடையூறுக்கு மன்னிக்கவும்.

Monday 23 June, 2008

மக்களே, பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?

என்னக் காரணத்தாலோ தமிழ்மண ப்ளாகர் பதிவுப்பட்டை செயலிழந்தமையால், மறுமுறை உங்கள் பார்வைக்கு இதனை வைக்கிறேன்.
பெண்கள் ஏன் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்? முதலில் பொதுவான சிலக் காரணங்களை பட்டியலிட்டுவிட்டு பின்னர் சிறிது வித்தியாசமானக் காரணத்தைக் காணலாம்.

முதல் காரணம், அவை பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றது. சரி, ஆனால் இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்? அது அடுத்த காரணத்தை நோக்கி நம்மை செலுத்துகிறது. இரண்டாவதுக் காரணம் பெண்களுக்கானத் திரைப்படங்கள் குறைந்து போயின. சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.

தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது. அதனால் பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன். இவ்விடத்தில் தயவுசெய்து யாரும் வீட்டில் ஒரு டிவி தானே இருக்கு, வேறுவழி இல்லாமல் பார்க்கிறேன் எனக் கூறவேண்டாம். பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்.

இந்த இடத்தில் நான் சீரியல் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் குறை கூற முயலவில்லை. எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? சரி விடுங்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

இன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் வன்முறை நிறைந்திருக்கிறது. எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன. வெகுஜனப் பொழுதுபோக்கு என்பது அனைவரையும் சார்ந்து இருப்பது. இதில் பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாளிகளாகிறார்கள்? வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நாங்கள் ஆலோசைகள்தான் கூறினோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதெல்லாவற்றையும் விடுங்கள், நான் மேற்கூறிய கடைசிக் காரணத்திற்கு வருவோம்.என்னுடைய தாயார் பொதுவாக நகைச்சுவை தன்மையுள்ள நிகழ்ச்சிகளையே பார்க்க விரும்புவார்கள், அத்தன்மையுள்ளவற்றையே படிக்கவும் விரும்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பிக்கும் சீரியல்களை மட்டுமே விரும்பினார்கள். நானும் அப்பொழுதுதான் பிரபலமானவை வரும் நேரம் என்பதால் அவ்வாறு செய்கிறார் என நினைத்தேன். ஆனால் தான் பார்த்து வந்த தொடரின் நேரத்தை மாற்றினாலும் சரி, அந்த சமயத்திற்கு வேறொரு சீரியல் வந்தாலும் சரியென அவர்களின் போக்கு வித்தியாசமானதாக இருந்தது. அந்தச்சமயம் நான் கல்லூரிக்கு(வெகு தொலைவில் இருந்தது) சென்றுகொண்டிருந்த காரணத்தால் சீக்கிரம் தூங்கப் போய்விடுவேன். அவர் தொடர்கள் பார்க்கும் பொழுது தூங்கித் தூங்கி வழிவார். பார்க்கின்ற தொடர்களை பற்றியும் மிக எரிச்சலுடனே குறிப்பிடுவார். சீக்கிரம் தூங்கச் சொன்னாலும் செல்ல மாட்டார். எந்த விதத்திலும் தனக்கு பிடிக்காத ஒன்றை இவர் எதற்காகச் செய்கிறார் என எனக்கு கவலை மேலோங்க, ஒரு நாள் வற்புறுத்தி கேட்டபொழுது, "நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்.

இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மனைவிக்கு தான் விரும்புகிற அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற போக்கு தவறானது என்பதை அவருக்கு சிறிது சிறிதாக விளக்கி பிரச்சினையின் வேரை சரிசெய்தோம். பின்னர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாகியது. என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?

என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம். ஏனென்றால் நாம் விரும்பிச் செய்யும் விஷயங்களை நாம் பெரும்பாலான நேரங்களில் மறப்பதில்லை. ஆனால் நிறையப் பேர் முக்கால்வாசி தொடர்களின் கதையை(கதை இருக்கானு கேக்கக்கூடாது) கூட ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)

ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள். ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? அப்படியே ஊர் சுற்றினாலும் எதற்காக சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லவே(பல சமயம் பார்ப்பதற்கு பெண்கள்தான் அவ்வாறு விரும்புவதுபோல் தோற்றமளித்தாலும் எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை. மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள்) விரும்புகிறார்கள்? நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?

நாம் நூறுதடவை ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்கிறோம், அதனால் அதனை 101வது தடவை கண்டிப்பாக சரியாகச் செய்வோம் என்ற உறுதியுண்டா? பின்னர் பெண்கள் மட்டும் எப்படி திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டபடியால் அனைத்தையும் மிகச் சரியாக செய்ய முடியும்? இதெல்லாவற்றையும் விட எரிச்சலான விஷயம், பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". இதென்ன யுத்தக் களமா இல்லை போட்டித் தேர்வா, நம் புத்திசாலித்தனங்களை காட்ட என நான் கூற வரவில்லை. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் முழுமையாகத் தெரியாததால் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது நடத்து கொள்ளச் சொல்வது சரி. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானப் பின்னும் பல குடும்பங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதின் காரணம், ஆண்கள் தாங்கள் முட்டாளாக்கப்படுவதை மிகவும் விரும்புகிறார்களா இல்லை நானாக உன் விருப்பங்களுக்கு செவிமடுக்க மாட்டேன், நீயாக உன் மூளையை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள் என்னும் மனப்பாங்கா? ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?

இதை படிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் எரிச்சல் வரும். நான் என் சொந்த அனுபவத்தை பொதுக் கருத்தாக்க முயல்வதாக குற்றம் சாட்டுவர். இது அவரவரின் மனசாட்சியை பொறுத்த விஷயம். நான் கூறும் விஷயம் வேறெங்கும் நடப்பதே இல்லை என்றால், இவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. இன்னும் இவ்வகை குறைகள் இல்லாத சில ஆண்கள் நான் அப்படி இல்லையே எனக் கூறுவர்.இவர்களுக்கு என் பதில், அப்படிஎன்றால் மிகவும் நல்லது.இதில் குறிப்பிடப்படும் வகையைச் சேராதவர் நீங்கள். உங்களின் துணை நிறைவாக வாழ்வார் என்பதாகும்.மொத்தத்தில் இந்தப் பதிவு, தான் செய்வது தவறென்றே உரைக்காமல் தவறு செய்யும் ஆண்களுக்காகவும், தன் துணையிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகம் என்பதை உணராத ஆண்களுக்காகவும்தான். நாங்களும் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிற ஆண்களா, தாராளமாக நீங்களும் உங்கள் வலைபதிவில் தெரிவியுங்கள். நான் ஒரு பெண், அதனால் எங்களின் பிரச்சினைகளை கூறுகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் நீ ஏன் இவற்றை குறித்து மட்டும் எழுதுகிறாய் என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் என வேண்டுகிறேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இவ்விஷயத்தில் இன்னும் பல முக்கிய கூற்றுகள் இருந்தாலும் பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு மற்ற பிரச்சினைகளை வேறொரு சமயம் விவாதத்திற்கு எடுக்கலாம் என இத்துடன் முடிக்கிறேன்.