Tuesday, 15 July, 2008

கண்ணீர் அஞ்சலி!!!!!!!!!!!!!!!!!!!!!!

சில சம்பவங்கள் மட்டும் நமக்கு அப்படியே மனசுல பதிஞ்சு கனக்கச் செய்து மறக்க முடியாம பண்ணிடும் இல்லைங்களா, என்னை அந்த மாதிரி பாதித்த ஒரு சம்பவம் நடந்த நாள் நாளைக்கு வருது. எனக்குன்னு இல்லை பலருக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன், ஆனால் எனக்கு அந்த சம்பவம் குறித்து கூறிய நபரால் மேலும் மனஅழுத்தம் ஏற்பட்டது.

நாளைதான், கும்பகோணம் விபத்தில் கருகிய அழகு மொட்டுக்களின் நினைவுநாள். எல்லோரும் நாளை கல்வி நிலையங்களில், பொது இடங்களில், அரசு அலுவகங்களில், மத ஆலயங்களில் என முடிந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவோம். ஆனால் தங்களின் கனவை, பொக்கிஷத்தை ஓரிரு நிமிடங்களில் பறிகொடுத்த அந்த பெற்றோருக்கும், தங்களின் ஆத்ம நண்பர்களை பறிகொடுத்த உடன் பிறப்புகளுக்கும் எப்படி இருக்கும். இயற்கை சீற்றத்தின் போது பறிகொடுக்கும் உயிர்களின் உறவுகளுக்காவது ஒரு சிறு ஆறுதல் மிஞ்சுகிறது, ஆனால் இப்படி மொத்தமாக பிறரின் அலட்சியத்தால், இல்லை நம்முடைய கையாலாகாத்தனத்தால், கோரமாக உயிர் துறக்கும் போது அந்த காயம் வடுவாகக் கூட மாறுவதில்லை.

எனக்கு முதலில் விஷயத்தை கூறியது என்னுடைய அக்காளின் மூன்று வயது மகன், தன் மழலை கூட மாறாதவன், பள்ளியில் திடீரென மழலை பிரிவுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட போது கூறப்பட்ட காரணத்தினை என்னிடம் கூறினான். நல்லவேளை தொலைக்காட்சியில் என் தந்தை முன்பே பார்த்ததால், அவன் அதை பார்ப்பதை தவிர்த்தார்.

இப்போழுதுக் கூட தெரியாமல் தீயில் விரலை சுட்டுக்கொள்ளும்போது கூட, நமக்கே இப்படி என்றால், தப்பிக்க கூட வழியில்லாமல் மாட்டிக்கொண்டு கதறி உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு எப்படி இருந்திருக்கும், என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு கொஞ்சமும் குறைவில்லாத சோகம் தீயின் நாக்குகளில் மாட்டியும் தப்பித்த குழந்தைகளின் நிலை. சில வீடுகளில் பெற்ற இரண்டு குழந்தைகளையும் இழந்தப் பெற்றோர், சில வீடுகளில் தம்பியை காப்பாற்றப் போய் முடியாமல் படுகாயமடைந்த சகோதரி என பரிதாபமான காட்சிகள்.

இதற்கு யாரை குறை சொல்வது? வேறுவழியில்லாமலும், விழிப்புணர்ச்சி இல்லாமலும் இந்தப் பள்ளியில் படிக்க வைத்த பெற்றோரையா, பொறுப்பில்லாமல் ஆடிவெள்ளிக்கு கோவிலுக்கு சென்று புண்ணியம் கட்டிக் கொள்ள முயற்சித்து இந்த துரோகத்தை செய்த ஆசிரியப் பெருமக்களையா, பெற்றோரின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி செயல்பட்ட பள்ளித் தாளாளரயா, அனைவருக்கும் கல்வியை கிடைக்கச்செய்யும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தும், சோம்பலாலும், பணத்தாசயாலும் இந்தக் கேட்டிற்கு துணைபோன கல்வித்துறை அதிகாரிகளையா, இல்லை உலகிலயே சுறுசுறுப்பான புத்திசாலி வந்தாலும் நிர்வாகம் செய்து மக்களுக்கு நன்மை செய்ய முடியா வண்ணம் இருக்கும் நம் அரசு இயந்திர அநியாய குளறுபடிகளையா?

ஆண்டாண்டுகாலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது இவ்விஷயத்தில் ஏற்க முடியாது. குறைந்தபட்சம் இனியாவது இதைப் போன்ற விபத்துக்கள் நடக்கா வண்ணம் அனைவரும் தங்களின் குறைகளை திருத்திக் கொண்டால் மட்டுமே அந்த பெற்றோருக்கும், தங்களின் உயிர் நண்பர்களை இழந்து இந்தப் பிஞ்சு வயதிலேயே அத்தகைய கொடூர அதிர்ச்சியை தாண்டி வந்திருக்கும் அப்பள்ளியை சேர்ந்த பிற குழந்தைகளுக்கும் சிறிதளவு ஆறுதலாவது ஏற்படும். பிறர் மீண்டாலும் அவர்கள் ஒவ்வொரு ஜூலை பதினாறும் இந்த சம்பவத்தை வாழ்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.

மலராமலே உயிர்விட்ட அந்த மொட்டுகளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!!!!!

77 comments:

வெண்பூ said...

//இதற்கு யாரை குறை சொல்வது? //

எல்லோரும்தான்.. நீங்கள், நான் உட்பட..

கண்ணீர் அஞ்சலி...

கயல்விழி முத்துலெட்சுமி said...

வெண்பூ சொன்னது போல மக்கள் கேள்வி கேப்பதை நிறுத்தினால் இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும்.. அங்கே சேர்த்த பெற்றோர் என்று இல்லை இப்படிப்பட்ட தப்பு நடைபெறுகிறது என்று கேள்விக்கேக்கத்தயங்கி அவங்கவங்க வேலை பாத்துட்டுப்போன ஒவ்வொருவரும் பொறுப்பு...
குழந்தைகளுக்கு என் அஞ்சலி.

rapp said...

வெண்பூ said,
//எல்லோரும்தான்.. நீங்கள், நான் உட்பட//
கயல்விழி முத்துலெட்சுமி said,
//இப்படிப்பட்ட தப்பு நடைபெறுகிறது என்று கேள்விக்கேக்கத்தயங்கி அவங்கவங்க வேலை பாத்துட்டுப்போன ஒவ்வொருவரும் பொறுப்பு//
அப்படியே வழிமொழிகிறேன்

rapp said...

வெண்பூ சார், முத்து, நானும் பெற்றோரை குத்தி காட்டும் நோக்கத்தில் சொல்லலை, பல பள்ளிகளில் காசை கொட்டி கொடுத்தும், படாத பாடு பட்டும் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு நெருடும் விஷயங்களில் கூட ஒரு அனாவசியமான தயக்கத்தால் கேள்வி கேட்காமல் விடுகின்றனர். நானும் ஒரு நாள் தாயகப் போகும் பெண்தானே, நான் ஏன் அவர்களை காயப்படுத்தப் போகிறேன்:)

Analyzt said...

//எல்லோரும் நாளை கல்வி நிலையங்களில், பொது இடங்களில், அரசு அலுவகங்களில், மத ஆலயங்களில் என முடிந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவோம்.//

அத்துடன் இனி இது போன்ற பள்ளிகளை கண்டிப்பாக புறகணிப்போம் என்ற சபதத்தையும் எடுப்போம்..

BTW, ஏதோ கவிதை கும்ளேன்னு ஆரம்பித்து பரபரப்பாக பேசப்பட்டு(பின்னூட்டப்பட்டு) இப்பொழுது மிக அழகாக அடுத்த தளத்திற்கு சென்றுவிட்டீர்கள்... வாழ்த்துகள்.

rapp said...

analyzt,
எனக்கு இந்த நாள் மறக்கவே மறக்காதுங்க, ஏன்னா ஜூலை பதினேழு எங்கப்பா பிறந்தநாள். அதுக்காக காலேஜிலிருந்து வரும்போது சில ஏற்பாடுகளை செஞ்சுட்டு, வீட்டுக்கு வரேன், எங்கக்கா பையன் ஓடிவந்து, "சித்தி சித்தி, எனக்கு இன்னைக்கு ஹாப்படேல ஸ்கூல் விட்டுட்டாங்க,என்னை மாதிரி நெறயப் பாப்பா செத்துப்போச்சாம்", சிரிச்சிகிட்டே தத்தக்கா புத்தக்காவென வந்து சொல்லவும் எனக்கு ஒன்னுமே புரியல,அப்பாதான் நடந்ததை சொன்னார். எப்படி திக்குன்னு இருந்தது தெரியுமா, சம்பந்தம் இல்லாம, என் நெவ்யூவை அடுத்த நாள் கூட நான் விடுமுறை எடுக்க வெச்சேன்.
மற்றபடி, இதுவும் என்னோட அனுபவம், கவிதை காமடியும் என்னோட அனுபவம், நான் அந்த விதத்தில்தான் எழுதினேன். உங்க கருத்துக்களுக்கு நன்றிங்க

Analyzt said...

//எனக்கு இந்த நாள் மறக்கவே மறக்காதுங்க, ஏன்னா ஜூலை பதினேழு எங்கப்பா பிறந்தநாள். அதுக்காக காலேஜிலிருந்து வரும்போது சில ஏற்பாடுகளை செஞ்சுட்டு, வீட்டுக்கு வரேன், எங்கக்கா பையன் ஓடிவந்து, "சித்தி சித்தி, எனக்கு இன்னைக்கு ஹாப்படேல ஸ்கூல் விட்டுட்டாங்க,என்னை மாதிரி நெறயப் பாப்பா செத்துப்போச்சாம்"//

கொடுமைதான்.. எனக்கும் அந்த செய்தியும் மீடியா அதை Present செய்த விதமும், வயிற்றை கலக்கிவிட்டது..

//மற்றபடி, இதுவும் என்னோட அனுபவம், கவிதை காமடியும் என்னோட அனுபவம், நான் அந்த விதத்தில்தான் எழுதினேன். உங்க கருத்துக்களுக்கு நன்றிங்க//

I just wanted to say i appreciate the way you sequenced ur posts...

கயல்விழி முத்துலெட்சுமி said...

ராப் தவறாப்புரிஞ்சிக்கிட்டப்பா.. நான் உன்னை குத்தம் எதுவுமே சொல்லல..எனக்குள்ள குற்றவுணர்வுல சொல்லிட்டேன்.. இன்னமும் எங்க ஊரில் இதே போல அடைஞ்ச கதவோட பள்ளிகள் இருக்கு..
விளையாட்டு மைதானம் இல்லாமல் ஊரின் ஒரே விளையாட்டுமைதானம் அதுவும் பல கி.மீ தூரத்திலிருப்பதைக் காட்டி அனுமதி பெற்ற பள்ளி..
ஒன்னுமேலஒன்னா கட்டின மாடிகள் .. பெட்டிபெட்டியா அறைகள்.. இன்னமும் இருக்கே..

rapp said...

//இன்னமும் எங்க ஊரில் இதே போல அடைஞ்ச கதவோட பள்ளிகள் இருக்கு..
விளையாட்டு மைதானம் இல்லாமல் ஊரின் ஒரே விளையாட்டுமைதானம் அதுவும் பல கி.மீ தூரத்திலிருப்பதைக் காட்டி அனுமதி பெற்ற பள்ளி..
ஒன்னுமேலஒன்னா கட்டின மாடிகள் .. பெட்டிபெட்டியா அறைகள்.. இன்னமும் இருக்கே..
//
தமிழ்நாட்டிலும் அதே நிலைதான் முத்து. நீங்க என்னை தப்பா எடுத்துக்கிட்டீங்களோன்னு தான் நான் விளக்கம் கொடுத்தேன்:)

rapp said...

//
I just wanted to say i appreciate the way you sequenced ur posts...
//
analyzt,
எனக்கு புரிஞ்சதுங்க, நானும் யதார்த்தமாத் தான் சொன்னேன்:)

rapp said...

//மீடியா அதை Present செய்த விதமும், வயிற்றை கலக்கிவிட்டது//
அப்படியே வழிமொழிகிறேன்

Karthik said...

Can't say anything...

:(

யாத்திரீகன் said...

இதை சரிபார்க்க வேண்டிய எத்தனை அரசு அதிகாரிகளுக்கு இந்த குற்ற உணர்ச்சி இருக்கின்றது ? இன்னும் எத்தனை பள்ளிகள் இத்தகைய ஆபத்தான நிலைமையிலேயே உள்ளது, ஒரேயடியாய் மாற்றம் வேண்டாம். . குறைந்தபட்சம் மாற்றம் ?!

ச்சின்னப் பையன் said...

:-((((

மிகவும் கொடூரமான சம்பவம் அது. கண்டிப்பாக அந்த பள்ளி நிர்வாகம், அதற்கு 'லைசன்ஸ்' கொடுத்த அதிகாரிகள் எல்லாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

rapp said...

ரொம்ப நன்றிங்க கார்த்திக்.

//இதை சரிபார்க்க வேண்டிய எத்தனை அரசு அதிகாரிகளுக்கு இந்த குற்ற உணர்ச்சி இருக்கின்றது ? இன்னும் எத்தனை பள்ளிகள் இத்தகைய ஆபத்தான நிலைமையிலேயே உள்ளது, ஒரேயடியாய் மாற்றம் வேண்டாம். . குறைந்தபட்சம் மாற்றம் ?!//
என்னுடைய வருத்தமும் ஆதங்கமும் இதுதான்

rapp said...

யாத்திரீகன் said,

//இதை சரிபார்க்க வேண்டிய எத்தனை அரசு அதிகாரிகளுக்கு இந்த குற்ற உணர்ச்சி இருக்கின்றது ? இன்னும் எத்தனை பள்ளிகள் இத்தகைய ஆபத்தான நிலைமையிலேயே உள்ளது, ஒரேயடியாய் மாற்றம் வேண்டாம். . குறைந்தபட்சம் மாற்றம் ?!//
என்னுடைய வருத்தமும் ஆதங்கமும் இதுதான்

rapp said...

//அந்த பள்ளி நிர்வாகம், அதற்கு 'லைசன்ஸ்' கொடுத்த அதிகாரிகள் எல்லாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்//
ச்சின்னப்பையன், இன்னும் கூட அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது

தாமிரா said...

கல் நெஞ்சங்களையும் அழவைத்த சம்பவம். அதை மீண்டும் நினைவுறுத்தி கலங்க வைத்துவிட்டீர்கள்.. ராப்.!

Kamal said...

ரொம்ப கொடுமையான நிக்ழவு அது!!!!!!! :(((
ஆமா!!! இதுக்கு அம்மா ஒரு கமிஷன் போட்டதா ஞாபகம்!!!! அது இன்னும் உயிரோடதான் இருக்கா இல்ல நாளைக்கு அதுக்கும் நினைவு நாளா???

மத்தபடி என்ன சொல்றதுன்னே தெரியல :((((((((((

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு நன்றிங்க தாமிரா
உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு நன்றிங்க கமல், விசாரணைக் கமிஷன் என்னாச்சுன்னு எனக்கும் தெரியலைங்க, நிர்வாக நடைமுறைகளை ஒழுங்குப் படுத்தி, கொஞ்சம் அனாவசிய ப்ரோட்டோகால் சுமையை குறைத்தால்தான் அதிகாரிகள் மாறுவார்கள், உண்மையாக உழைக்க முயற்சிப்பார்கள் என்பது என் கருத்துங்க

ஜி said...

//இப்போழுதுக் கூட தெரியாமல் தீயில் விரலை சுட்டுக்கொள்ளும்போது கூட, நமக்கே இப்படி என்றால், தப்பிக்க கூட வழியில்லாமல் மாட்டிக்கொண்டு கதறி உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு எப்படி இருந்திருக்கும் //

இதனை வாசிக்கும்போதே நிஜத்தின் நிழல் கற்பனையில் தோன்றி ஒருவித துன்பயுணர்வை மனதில் இட்டுச் செல்வதை தவிர்க்க முடியவில்லை...

:((( கண்ணீர் அஞ்சலி...

ஜோசப் பால்ராஜ் said...

மறக்க முடியாத மிகக் கொடூர சம்பவம் அது.
அந்த பள்ளி தாளாளர் மிக சர்வ சாதாரணமாக தஞ்சாவூரில் சுத்திக்கொண்டு இருந்தார். அந்த வழக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.

அந்த நேரத்தில் மிகத் நல்ல முறையில் செயல்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.இராதாகிருஷ்ணண் அவர்களையும் இந்நேரத்தில் பாராட்ட வேண்டும்.

கயல்விழி said...

:( மறக்கமுடியாத துயர சம்பவம் இது. இப்போதும் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. அதே ஆங்கிலப்பள்ளி மோகம், பிள்ளைகளை புளி மூட்டை போல வகுப்பறையில் அடைத்து வைத்திருப்பது, பாதுகாப்பில்லாத வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது.

நினைவு வைத்து பதிவெழுதியதுக்கு நன்றி ராப்.

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றிங்க ஜி.

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றிங்க ஜோசப் பால்ராஜ்.
//அந்த நேரத்தில் மிகத் நல்ல முறையில் செயல்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.இராதாகிருஷ்ணண் அவர்களையும் இந்நேரத்தில் பாராட்ட வேண்டும்//
நானும் வழிமொழிகிறேன்

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றிங்க கயல்விழி

பரிசல்காரன் said...

இறைவா - நீ இல்லையா
உனக்கிதயம் இல்லையா?


பிஞ்சுகளை இப்படிச்செய்யும்
நஞ்சுதனை உன்
நெஞ்சுதனில் வளர்த்தது யாரோ?

கண்களிலே பல
கனவுகளை சுமந்த
பெற்றோரை காப்பதினி யாரோ?

தீயதனைப் பார்க்காதே
தீயதனைக் கேட்காதே
என்றேதான் போதித்த பலரும்,

தீ-அதனைப் பார்க்காமல்
மீள வழியில்லாமல்
சென்றேதான் விட்டாரே அவரும்!

என் சொல்லி எம் துயரம்
உனக்கறிவிப்போம்..
எம் உயிரை எடுத்திருந்தால்
இன்னும் மகிழ்ந்திருப்போம்!

பரிசல்காரன் said...

படித்ததும் மனது கனக்க எழுதிய கவிதை அது!

சந்தங்களோ, வார்த்தை ஒழுங்குகளோ சரி செய்ய மனம் வரவில்லை!

கருத்துக்களை மட்டும் கவனிக்கவும்!

என்ன செய்ய.. அந்தப் பிஞ்சுகளை நினைத்து ஒரு நிமிடம் அமைதியாய் அஞ்சலி செய்வதைவிட!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அந்த பள்ளி தாளாளர் மிக சர்வ சாதாரணமாக தஞ்சாவூரில் சுத்திக்கொண்டு இருந்தார். அந்த வழக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவியுங்கள். //


அந்த ஆளு இன்னமும் சுத்திக்கிட்டு தான் இருக்கான். நான் அறிந்தவரை அந்த விஷயத்தில் சம்மந்தம் இன்றி பாதிக்கப்பட்டவர் அன்றைய தஞ்சை மாவட்ட C.E.O திரு.பழனிச்சாமி அவர்கள். எங்க ஊர்காரர்.மிக மிக நேர்மையான மனிதர். அந்த சம்பவம் நடப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்தான் தஞ்சை மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றார். தஞ்சை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளை எல்லாம் தன்னுடைய செயல்பாட்டால் கிடுகிடுக்க வைத்தார்.அவரை அங்கிருந்து மாற்ற பெரும்முயற்சி நடந்தது.அவருடைய கவனம் குடந்தைக்குச் செல்லும் முன் இந்த சம்பவம் நடந்து விட்டது. அவரது நேர்மையும்,பணித்திறனும் நன்கரிந்த கலெக்டர் ராதாகிருஷ்ணன் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசிடம் முயற்சித்தார். ஆனால் C.E.O பழனிச்சாமி குற்ற உணர்ச்சியால் அதற்கு ஒத்துழைக்காமல் ஜெயிலுக்குப் போய்விட்டார்.மேலும் ஜாமின் பெறவும் முயற்சிக்கவில்லை. இவை அனைத்தும் எனக்கு மிகமிக நெருக்கமான தஞ்சை N.S.N மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மூலம் அறிந்தவை.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ராப் அந்த இடத்தை சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பின் சென்று பார்த்தேன். மாடுகளைக் கட்டக் கூட லாயக்கில்லாத இடம் அது. நம்ம புள்ள படிக்கிதோ இல்லையோ டையும்,பூட்சும் போடணும்னு நினைக்கிற பெற்றோரை என்ன செய்வது?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இந்த சம்பவம் தொடர்பாக என்னுடைய நண்பர் கவிஞர்.தனிக்கொடி அவர்கள் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில் " எங்க பிள்ளைக் கறி படையலாய் கேட்டது எந்த சாமி" என்று எழுதி இருந்தார். ஒரு பாவமும் அறியாத தளிர்களைக் காக்க இறைவன் கூட தயார் இல்லாமல் போய்விட்டானே?

rapp said...

வந்து உங்கள் அஞ்சலிகளை பதிந்தமைக்கு ரொம்ப நன்றிங்க கிருஷ்ணா(பரிசல்காரன்), உங்களின் அஞ்சலிக் கவிதைக்கும் என் நன்றிகள்

rapp said...

வந்து உங்கள் அஞ்சலிகளை பதிந்தமைக்கு ரொம்ப நன்றிங்க அப்துல்லா அண்ணே,
//ஒரு பாவமும் அறியாத தளிர்களைக் காக்க இறைவன் கூட தயார் இல்லாமல் போய்விட்டானே?//
நான் கூட பலமுறை இதை நினைத்துத் தான் ரொம்ப வேதனை படுவேன். ஏன் இப்படி நாம் வாழும்போது நடக்கவேண்டும் என்று பல சமயங்களில் சுயநலமாகவும் எண்ணத் தூண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில் நீங்கள் அளித்த தகவல்களுக்கும் என் நன்றிகள்

Ramya Ramani said...

பிஞ்சு குழந்தைகள் தீக்கு இறையானது ரொம்ப பெரிய கொடுமை :((. நம்ம வீட்டு குட்டீஸ் கீழ விழுந்தாலே நமக்கு தாங்காது..அப்படி தீப்புண் பட்ட குழந்தைகள பார்த்த பெற்றோருக்கு எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும்..சில பெரியவங்க செய்த தப்பு அவங்களை தண்டிச்சிடுச்சு :((

rapp said...

உங்க அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க ரம்யா ரமணி
//பிஞ்சு குழந்தைகள் தீக்கு இறையானது ரொம்ப பெரிய கொடுமை :((. நம்ம வீட்டு குட்டீஸ் கீழ விழுந்தாலே நமக்கு தாங்காது..அப்படி தீப்புண் பட்ட குழந்தைகள பார்த்த பெற்றோருக்கு எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும் :((//
நானும் அதை நினைச்சு ரொம்ப வேதனை பட்டிருக்கேங்க, ஆனால் இனிமேலாவது நம்ம அரசாங்கம் நடவடிக்கை எடுத்து மற்ற பள்ளிகளை கண்காணிச்சு மேம்படுத்தணுங்க

ambi said...

//தப்பிக்க கூட வழியில்லாமல் மாட்டிக்கொண்டு கதறி உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு எப்படி இருந்திருக்கும்,//

நினைத்து பார்க்கவே பயங்கரமா இருக்கு. :(((

நானும் அஞ்சலி செய்கிறேன்.

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றி அம்பி அண்ணே

babu said...

இது போன்று எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் , நம் சமுதாயம் திருந்தவே திருந்தாது.உடனே எனக்கு negative mindset என்று சொல்லிவிடாதீர்கள்.
இன்றும் சாலையில் குழந்தைகளை ஏற்றி செல்லும் auto க்களையும் van களையும் மற்ற வாகனங்களையும் பார்த்தால் தெரியும்.

rapp said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க பாபு

நாமக்கல் சிபி said...

:(

என்னுடைய அஞ்சலியையும் இங்கே பதிவு செய்கிறேன்!

Divya said...

மலராமலே உயிர்விட்ட பிஞ்சு குழந்தைகளுக்கு என் அஞ்சலி:(


அந்தக் கொடுர சம்பவம் நிகழ்ந்து சில வருடங்கள் ஆகியிருப்பினும்.......நினைவாக பதிவிட்டு அஞ்சலி செலுத்த நினைத்த உங்களைக் கண்டு பெருமையாக இருக்குறது.

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிவு செஞ்சமைக்கு நன்றிங்க சிபி

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிவு செஞ்சமைக்கு நன்றிங்க திவ்யா

Syam said...

என்னுடைய கண்ணீர் அஞ்சலியை உங்கள் பதிவு மூலம் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு செலுத்துகிறேன், மீண்டும் நினைத்து பார்கவே நெஞ்சம் நடுங்குது...

Syam said...

//வெண்பூ said...
எல்லோரும்தான்.. நீங்கள், நான் உட்பட..

கண்ணீர் அஞ்சலி...//

ரொம்ப சரி, நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்து எடுக்காததும், தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பதும்...

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க ஸ்யாம்

விஜய் said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அந்த பள்ளி தாளாளர் மிக சர்வ சாதாரணமாக தஞ்சாவூரில் சுத்திக்கொண்டு இருந்தார். அந்த வழக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவியுங்கள். //


அந்த ஆளு இன்னமும் சுத்திக்கிட்டு தான் இருக்கான். நான் அறிந்தவரை அந்த விஷயத்தில் சம்மந்தம் இன்றி பாதிக்கப்பட்டவர் அன்றைய தஞ்சை மாவட்ட C.E.O திரு.பழனிச்சாமி அவர்கள். எங்க ஊர்காரர்.மிக மிக நேர்மையான மனிதர். அந்த சம்பவம் நடப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்தான் தஞ்சை மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றார். தஞ்சை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளை எல்லாம் தன்னுடைய செயல்பாட்டால் கிடுகிடுக்க வைத்தார்.அவரை அங்கிருந்து மாற்ற பெரும்முயற்சி நடந்தது.அவருடைய கவனம் குடந்தைக்குச் செல்லும் முன் இந்த சம்பவம் நடந்து விட்டது. அவரது நேர்மையும்,பணித்திறனும் நன்கரிந்த கலெக்டர் ராதாகிருஷ்ணன் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசிடம் முயற்சித்தார். ஆனால் C.E.O பழனிச்சாமி குற்ற உணர்ச்சியால் அதற்கு ஒத்துழைக்காமல் ஜெயிலுக்குப் போய்விட்டார்.மேலும் ஜாமின் பெறவும் முயற்சிக்கவில்லை. இவை அனைத்தும் எனக்கு மிகமிக நெருக்கமான தஞ்சை N.S.N மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மூலம் அறிந்தவை.//


பழி ஓரிடம் பாவம் ஓரிடம்.
C.E.O பழனிச்சாமி அவர்கள்,
ஏற்பட்ட கொடுமைக்கு தான் காரனம் இல்லை யென்றாலும் தன் பணிகாலத்தில் நடந்ததால் பெறுப்பேற்று தண்டனை அனுபவிப்பது கண்டு இவர்களுக்காத்தான் மழை கொஞ்சம் பொழிகிறது என் எண்ண தோன்றுகிறது.

கண்ணிர் அஞ்சலி என் சார்பில்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com


//http://pugaippezhai.blogspot.com

மோகன் கந்தசாமி said...

ப்ச்! :-(

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நீங்க அந்தப்பக்கம் வரவில்லை என்று அண்ணன் வழிப்போக்கன் மிகவும் கவலையாக இருக்கிறார். சீக்கிரம் செல்லவும்.
https://www.blogger.com/comment.g?blogID=2515805102904586704&postID=1889137962558188233

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு நன்றிங்க மோகன்
உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு நன்றிங்க விஜய்

DHANS said...

நேற்று NDTV செய்தியில் சொன்னாங்க, அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலருக்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இது எப்படி இருக்கு?

rapp said...

வருத்தமான விஷயம், எனக்கு மேலும் அதைப் பற்றிய செய்திங்கள் தெரியவில்லை dhans.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

kindly visit my new posting

Vijay said...

சாரி பா. எனக்கு சீரியஸ் கொஞ்சம் அலர்ஜி. அதான் உங்க "சந்தேகங்கள்" பதிவு படிச்சிட்டு அப்புறம் பின்னூட்டம் போடலாம்ன்னு இருந்துட்டேன். வேலையும் கொஞ்சம் அதிகம் இந்த வீக். ஆனா இதை படிச்சப்புறம் அப்படி இருக்க முடியல. அவேர்னஸ் இல்லாமைதான் முக்கிய காரணம்ன்னு நான் நினைக்கிறேன். எந்த அஞ்சலியும் அந்த வலியை மாத்தமுடியாதுதான். என்ன செய்ய? இந்த கையாலாகதவனின் அஞ்சலிகளையும் இங்கு பதிக்கிறேன்.

rapp said...

நீங்க கருத்துக்களை பதியணும்னு எப்போ நினைக்கறீங்களோ, அப்போ பின்னூட்டம் போட்டா போதுங்க விஜய். உங்களோட அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு நன்றி

இவன் said...

ஒன்றுமே செய்வதற்கில்லை ராப் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திற்பதைத்தவிர.... இனிமேல் இவ்வாறு நடக்கமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம். மற்ற உயிர்களைக்காப்பாற்றவாவது

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு நன்றிங்க இவன்

Vijay said...

raap, come fast. ambi is answering in Gopika pathivu..

Vijay said...

Sorry Rapp, In ambi's BLOG I was there upto 104..after that the comments let some where.... So me escape. If you dont mind can I get your mail id pls..mine viji022@gmail.com.

கயல்விழி said...

உங்கள் அடுத்த பதிவு எப்போ ராப்?

ராஜ நடராஜன் said...

நான் வேறு தகவலோடு உங்கள் பதிவுக்கு வந்தேன்.ஆனால் வந்த இடத்தில் கண்ணீர் அஞ்சலி பார்த்து மனம் கனக்கிறது.

வெண்பூ said...

வெட்டியாப்பீஸர்.. என்ன ஆச்சு, எந்த புது பதிவுமே இல்லை. என்னோட பதிவுலயும் ஆளைக் காணோம். எங்க போயிட்டீங்க‌????

தமிழன்... said...

நினைத்துப்பார்க்கையில் மனது கனக்கிற நிகழ்வு அது...:(

நானும் அஞ்சலி செலுத்திக்கறேன்...

Vijay said...

இது மட்டுமா?? தருமபுரி பஸ் எரிப்பு உட்பட பல விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். அடுத்து செய்ய வேண்டியது என்னவென்பதை ஊடகங்களும் பார்ப்பதில்லை, அரசுக்கும் கவலையில்லை... எனக்கும் (நமக்கும்) தான்.
என்னிக்கு மக்கள் ஓசில கிடைக்கிறத விடறாங்களோ... அன்னிக்குதான் ஒரு விடிவின் தொடக்கம் ஆரம்பமாகும்

SK said...

என்னுடைய கண்ணீர் அஞ்சலி.

இது போன்ற நிறைய விஷையங்கள் இன்னும் திருந்தவில்லை.

1. பாபு சொன்னது போல் ஷேர் ஆடோஸ் மற்றும் குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன் இன்னும் பார்க்கும் போது உடம்பே நடுங்குது.

2. தஞ்சை கலெக்டர் ராதாகிருஷ்ணன் பணிமாற்றம் செய்யப்பட்டு வேறு சிலருக்கு உதவியாக இருக்கும் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இதுலும் அரசியல்.

3. இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் பாதிக்க பட்டு தண்டனைக்கு ஆளானார்கள் என்பது தெரிஞ்சுக்கணும்.

இன்னும் ஒரு விஷயம் இது மாதிரி இனி நடக்காம இருக்க நாம என்ன செய்யலாம்னு யோசிச்ச இன்னும் கொஞ்சம் உதவியா இருக்கும் என்பது என் கருத்து.

நான் வெளிநாட்டுலே இருந்துகிட்டு என்ன பண்ண முடியும், எனக்கே ஆயிரத்து எட்டு வேலை இதுலே இதெல்லாம் எங்கே பண்றது, நம்மளால என்ன பண்ண முடியும் அப்படிங்கற கேள்வி எல்லாம் தள்ளி வெச்சிட்டு என்ன பண்ணலாம்னு எல்லாரும் கொஞ்சம் யோசிச்சா எதாவது வழி சில வருடங்கல்லையாவது பொறக்கும்னு நம்புறேன்.

rapp said...

உங்களின் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க தமிழன்
உங்களின் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க விஜய்
உங்களின் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க எஸ்கே
உங்களின் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க வெண்பூ
உங்களின் அஞ்சலிகளை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க ராஜ நடராஜன்

ஓவியா said...

இறந்த குழந்தைகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலி..
இழந்த பெற்றோருக்கு உறவுகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது..??
அவர்கள் துன்பத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

PPattian : புபட்டியன் said...

//இன்னும் ஒரு விஷயம் இது மாதிரி இனி நடக்காம இருக்க நாம என்ன செய்யலாம்னு யோசிச்ச இன்னும் கொஞ்சம் உதவியா இருக்கும் என்பது என் கருத்து. //

முதலில் பெற்றோர், தம் குழந்தை படிக்கற பள்ளி எந்த நிலையில் இருக்குன்னு பார்க்கணும். பள்ளியில கொஞ்சமாவது ரிஸ்க் இருக்கற மாதிரி இருந்தா, "கல்வித்தரம்" குறைவுன்னாலும் பரவாயில்லைன்னு வேற பாதுகாப்பான பள்ளியில் சேர்க்கணும்.

இந்த மாதிரி ஆபத்தான பள்ளிகளை எல்லா பெற்றோரும் புறக்கணிச்சாலே, பாதி பிரச்சினை தீர்ந்திடும்.

அதுபோலவே, அடிக்கடி பள்ளிக்கு சென்று பள்ளியின் நிலை, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நோட்டம் விடணும்.

நல்ல விசாலமான வகுப்பறைகள், தரமான கட்டடங்கள், நல்ல ஒழுங்கு விதிமுறைகள் உள்ள பள்ளிகளில்தான் குழந்தைகளை சேர்க்கணும்.

தமிழ் பிரியன் said...

வலைச்சரத்தில் பதிவர்

SanJai said...

நானும் அஞ்சலி செலுத்தி பதிவு போட்டேன். உங்களோடது இப்போ தான் பார்க்கிறேன். மிகக் கொடுமையான சம்பவம். இனியும் இது போல நடக்காமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

..... TAG பண்ணி இருக்கேன் பாருங்க. சீக்கிறம் எழுதுங்க. எழுதிட்டு சொல்லுங்க. :)...

rapp said...

உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு ரொம்ப நன்றிங்க ஓவியா.
உங்கள் அஞ்சலிகளை பதிஞ்சமைக்கு ரொம்ப நன்றிங்க புபட்டியன்

rapp said...

வலைச்சரத்தில் என் பதிவுகளையும் சேர்த்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க தமிழ் பிரியன்

rapp said...

என்னையும் அழைத்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சஞ்சய், முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா போடறேன்.

மதிபாலா said...

கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகரம்...எங்கு திரும்பினும் கோயில்களும் , கோபுரங்களும் நிறைந்த ஓர்....................மகாமகத்தில் குளித்தால் பாவம் போகும் என்று படையல் வைத்து குளித்த அதே நாளில் தான் (இருப்பதாகச்சொல்லப்படும் ) சித்திரகுப்தன் பல உயிர்களின் ஓலைகளை கிழித்தான்.......

சூதுவாதறியாத சிறு பிள்ளைகளை காவு கொண்டது நெருப்பென்றால்
அந்த அக்னிதேவனும் அழிப்பு தேவன் ஆனதை என்னவென்று சொல்ல.......

ஆக , மதம் துறந்து மனிதம் வளர்ப்போம்...........

கோயில்களை எல்லாம் அறிவுக்கண் திறக்கும் சிறந்த பள்ளிச்சாலைகள் ஆக்குவோம்............

இனியொரு முறை இத்தகைய நிகழ்வுகளுக்கான அஞ்சலிகளே இல்லையென்ற நிலை வருவதாய் கனா காண்போம்.....

இவ்வுலகில் இருப்பதாக சொல்லப்படும் இறைவன் இருந்திருந்தால் அவன் கூட இதைத்தான் விரும்பியிருப்பான்.....!

rapp said...

//இனியொரு முறை இத்தகைய நிகழ்வுகளுக்கான அஞ்சலிகளே இல்லையென்ற நிலை வருவதாய் கனா காண்போம்//
இதை நானும் அனைவரின் சார்பாக வழிமொழிகிறேன்

விஜய் said...

கண்ணீர் அஞ்சலிகள்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

ராமலக்ஷ்மி said...

ஆறாத ரணம் என்பார்களே அதுதான் இது. ஆறுதல் என்பதற்கெல்லாம் அர்த்தமேயில்லாமல் போன தருணம்.

அரசாங்கம் இனியாவது இம்மாதிரியான பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும். பெற்றோரும் தவறெனப் படுபவற்றைத் தட்டிக் கேட்கவும், திருந்த மறுக்கும் பள்ளிகளைப் புறக்கணிக்கவும் தயங்கக் கூடாது. அதுதான் அந்த மொட்டுக்களுக்கான உண்மையான அஞ்சலியாக அமையும்.