Thursday 31 July, 2008

ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போன்றோருக்கு இப்பதிவு சமர்ப்பணம்


ஏங்க நம்ம ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார், எம்.ஜி.ஆர் இவங்க
எல்லாம்
மாறுவேஷம் போடுறதுக்கு விக், தாடி, மச்சம், மூக்குகண்ணாடின்னு பயங்கரமான சாதனங்களை உபயோகப்படுத்தினா என்னமா தையா தக்கான்னு குதிக்கறீங்க, இங்க இருக்க மூணு படத்தையும் பாருங்க.

நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் எப்பபார்த்தாலும் Bosnia and Herzegovinaல நடக்கிற சண்டையப் பத்திதான் செய்தி வரும். அதில முக்கிய பங்கு வகிச்ச நம்ம ஹிட்லரின் உடன்பிறவா சகோதரனாம் Milosevic அவர்களின் ஆருயிர் நண்பர் Radovan Karadzic தான் அந்த மூணு படங்களிலும் இருக்கறவர்(எல்லாரும் ஏற்கனவே ரெண்டு வாரமா எல்லா நாளிதழ்களிலும், தொலைகாட்சி செய்திகளிலும் பாத்திருப்பீங்க, ஆனா இங்க நான் சொல்ல வர்ற விஷயம் வேற(பயங்கர முக்கியமான கம்பேரிசன்)).
முதல் படம் 1996கு முன்ன எடுத்தது.

இவர (போர்)கிரிமினல்னு அறிவிச்சி ஒரு பத்து பன்னெண்டு வருஷமா தேடிக்கிட்டு இருந்தாங்கல்ல, அப்போ (இந்த இருபத்தொண்ணாம் தேதி பிடிக்கிறவரை) ஒரு இயற்கை வைத்தியரா, நடுவில் இருக்கிற தோற்றத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்திருக்கார், சரிங்களா

அடுத்த படம் இப்போ நீதிமன்றத்தில் (எல்லாத்தையும் மழிச்சு) பழைய தோற்றத்துக்கு கொண்டுவந்து ஆஜர்படுத்தும்போது எடுத்தது, சரிங்களா

நீங்களே பாருங்க நண்பர்களே, கொஞ்சம் முடிவளர்த்து, தாடி மீசை வைத்து,கண்ணாடி போட்டு, நம்ம ஹீரோக்களின் ஆஸ்தான வேஷமான சாமியார் தோற்றத்தில் பத்து வருஷத்துக்கும் மேல தலைமறைவா இருந்திருக்கார்(இதுல இருக்க உள்குத்து உலக அரசியல இங்க வந்து யாரும் ஆராயக்கூடாது). ஜாலியா கால்பந்து போட்டிகள், இயற்கை மருத்துவ கருத்தரங்குகள், விடுமுறைகள்னு இப்படியே மாறுவேஷத்தில் சுத்திக்கிட்டு இருந்திருக்கார்.

இதையே நம்ம ஊர் கதாநாயகர்கள் படத்தில் பண்ணா அந்தக் காட்டு காட்றீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்............... உங்களுக்கே இதெல்லாம் நியாயமா இருக்கா நண்பர்களே????? குறிப்பா மேலே குறிப்பிட்ட கதாநாயகர்கள்னா எல்லாருக்கும் ஒரே குஷியாகி, ஒருத் தனிப்படமே ஓட்டிடறீங்க.

டிஸ்கி: நான் என் பதிவுல கருத்து சொல்லி ரொம்ப நாளாச்சுல்ல, கீழ கொடுத்திருக்கேன் பாருங்க ஒரு அபார கருத்து,

சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!!

Sunday 27 July, 2008

ஏ ஃபார் ஆப்பிள்

சஞ்சய் அவர்கள் என்னை ஏ பார் தொடரை தொடரச் சொன்னமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்குப் பல சமயங்களில் நம்ம தமிழகத்தில் எந்தத் துறையில் யார் அமைச்சர், தலைமைச் செயலகத்தில் என்னன்ன பிரிவுகள் இருக்குன்னு, அரசியல் கட்டுரைகள் படிக்கும்போது சந்தேகங்கள் வரும். அதை Assembly.tn.gov.in என்கிற தளத்தில் சென்று பார்ப்பேன். இது எனக்கு விசா வாங்கும்போது தேவைப்பட்ட சில நடைமுறைகளுக்கு மிகவும் உபயோகமாயிருந்தது.

அவ்வப்பொழுது தமிழில் வாழ்த்தட்டைகளை பகிர்வதற்கு bharathgreetings.com செல்வேன்.

C for Cartoonindia.com , எனக்கு எப்பொழுதும் ரொம்பப் பிடித்த ஒன்று. அதுப்போல Glasbergen.com(கொஞ்சம் அமெரிக்க வாசம் தூக்கல்) பிடிக்கும். அதேப்போல மேற்கத்திய சங்கீதத்தில் ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு அதன் மேல் ஆர்வமேற்படுத்தியவர் என் கணவர். இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி செல்லும் தளம் இந்த Classiccat.net .

D for தினத்தந்தி தான், நான் முதல் முதலில் எழுத்துக்கூட்டி தமிழ் படித்தது இதில்தான். அதனால் மற்ற தினசரிகளைவிட இதன் மேல் எனக்குக் கொஞ்சம் பிரியம் ஜாஸ்தி.

E for ebay தான். இஷ்டத்துக்கு தேவயில்லாததஎல்லாம் ஷாப்பிங் போகும்போது வாங்கிட்டு குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, இதனை திறந்தால் மக்கள் எவ்வளவு கேணத்தனமாக வாங்குகிறார்கள், வாங்கி இருக்கிறார்கள், விற்கிறார்கள் என்பதை பார்த்து மனச்சாந்தி பெறலாம்.
அடுத்து ELLE என்னுடைய பேவரிட் இதழ். பனிக்காலம், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் என அந்தந்த காலகட்டத்தில் கரண்ட் லுக் என்ன, எந்தெந்த நிறங்களில் இப்பொழுது ஆக்சசரீஸ் அணியவேண்டும், எந்த போஷ் எடுத்துப்போகலாம், சாண்டில்ஸ்,பூட்ஸ் வகைகளில் எதையெல்லாம் இம்முறை அணியக்கூடாது போன்ற முக்கியத் தகவல்கள் இதிலிரிந்து ஒவ்வொரு காலத்திற்கும் முன்னரே தெரிந்து, அதற்கேற்றார் போல் ஷாபிங் செய்வோம். அதோட அனைத்து காலங்களிலும் சிலக் குறிப்பிட்ட இடங்களில் திடீர் தள்ளுபடி வெறும் அரைநாள், இரண்டு நாட்கள் என நடக்கும், அந்தத் தகவல்களை இந்த இதழின் தனிப்பட்ட கடிதங்களிலிருந்து பெறலாம். ஒரு முறை நான் ஒரு ப்ரதா(அது ஒன்றுதான் என்னுடைய ஒரே ப்ரதா கலெக்ஷன்) பேக்கை எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கினேன்.

G for google மற்றும் அதன் தொடர்புடைய பிறத் தளங்கள் எல்லாவற்றையும் கூறலாம். இதையும்( guruji.com) நான் அவ்வப்போது உபயோகிப்பதுண்டு.

H for Hinduonline தான். இதில் மிகப் பிடித்த ஒரு பொழுதுப்போக்கு விஷயம் ஞாயிறன்று வரும் மணமகள்/மணமகன் தேவை பக்கங்கள்தான். இப்படிஎல்லாம் கூட எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்களா என ஆச்சர்யப் பட வைக்கும். அதேப்போல பல சரித்திர பக்கங்களை பட்டியலிடும் Historysites.net எனும் தளமும்,அடிக்கடி செல்வதில்லை எனினும் பிடிக்கும்.

I for ibnlive . பல சமயம் ஓவர் சீனா இருந்தாலும் பாக்கப் பிடிக்கும். இட்லிவடையும் நான் தினமும் செல்லும் இடம்.

J for Jeyamohan.in, எனக்கு இவரோட 'பாப்பா சாப்பிடு பாப்பா', மற்றும் இவர் மகளைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். இதெல்லாத்தையும் விட எனக்கு சிறுவயதிலிருந்தே மிக மிகப் பிடித்த நடிகர் ஒருவர் என்றால் ஷம்மிகபூர் தான். அவர் வலையில் சேட்டிங் செய்கிறார் என்று கேள்விப்பட்டுத்தான் நான் நெட் பக்கமே பள்ளி காலத்தில் திரும்பினேன். அவரோட மின்னஞ்சல் போக்குவரத்துக்கள், சேட்டிங் என்று இரண்டு மூன்று வருடங்கள் கலகலப்பாக இருந்தது. இந்தியாவில் அனைத்து திரைத்துறயினருக்கும் முன்னர் வலையுலகில் கால் பதித்தவர். அவரின் Junglee.org.in ஆக்டிவாக இருக்கின்றதோ இல்லையோ ஒரு விசிலடிச்சான் குஞ்சாக தினமும் ஒரு முறை சென்று விடுவேன்.

K for குமுதம்.காம், கல்கிஆன்லைன், அதேப்போல Keepvid.com, என்னுடைய பேவரிட் பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கு அடிக்கடி செல்வதுண்டு.

L for Le Monde, பிரெஞ்சு தினசரி, எங்கு இருந்தாலும் அவ்விடத்தில் உள்ள அம்மொழி தினசரியை படிக்க வேண்டும் (மொழிப் பிரச்சினை என்றால் குறைந்தபட்சம் பார்க்கவாவது வேண்டும்) என்பது என் கொள்கை.

M for Marian Keyes, என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை அவ்வளவு நகைச்சுவையோடு சொல்லும் இவர் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. இவருடையக் கதாநாயகிகள் பாத்திரம் பல சமயம் என்னைப் போலவே செயல்படும், பிற பாத்திரங்களும் என்னைச் சுற்றி இருப்பவர்களை ஞாபகப் படுத்தும். இவர் தன் வலைப்பக்கத்தை அடிக்கடி அப்டேட் செய்ய மாட்டார் என்றாலும் நான் தினமும் ஒரு முறையேனும் செல்வேன்.
Meteo paris வானிலைக்காக தினமும் சென்று பார்ப்பேன்.
அதேப்போல Marie Claire ரொம்பப் பிடிக்கும்(சந்தா என் மாமியார் கட்டிவிடுவார்). இதற்கும் Elle காரணமேதான்.

N for ndtv தான். இதில் கூடுதல் நல்ல விஷயம் என்னவென்றால் சேனலயே லைவாக பார்க்கலாம் என்பது தான்.

O for ஆர்குட்.

R for Radioclassique தான். சில சமயம் rediff மெயில் செல்வேன்

S for Sify, Suryan FM, என்னுடைய மற்றொரு பேவரிட் எழுத்தாளர் Sophie Kinsella வலைத்தளம்( Marian Keyes அவர்களின் கதைகள் போலவே மிக மிக நகைச்சுவையாக இருக்கும். இவருடைய shopaholic series என்னுடைய ஆல் டைம் பேவரிட்) . smashits.com நான் அடிக்கடி செல்லும் தளம்

T for Techsatish.net, தமிழ்மணம்.
V for Visual dictionary, Vikatan முதலியவை .
W for Wikipedia,Watch movies முதலியவை .
Y for Youtube, Yahoo முதலியவை.

அடுத்து நான் அழைக்கப் போவது, என்னை, ஜம்புலிங்கம் போன்றவர்களை ப்ளாகர் ஆகத் தூண்டிய அம்பி அண்ணன்(மாட்டிக்கிட்டீங்களா).
விடுமுறையில் செல்வதாகக் கூறிவிட்டு, எல்லாரையும் விட ஜாஸ்தி பதிவுகளை போடும் நண்பர் மோகன் கந்தசாமி.
தினமும் வற்றாத நகைச்சுவை நக்கலோடு பதிவுகள் இடும் நண்பரும், எங்கள் மன்றத்தின் துணைத் தலைவருமான ச்சின்னப் பையன்.

வழிநெறி:தலைப்பு :: ஏ ஃபார் ஆப்பிள்அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்கஇன்னும் மூணு பேரை பிடிங்க .. எழுத வைங்க

Tuesday 15 July, 2008

கண்ணீர் அஞ்சலி!!!!!!!!!!!!!!!!!!!!!!

சில சம்பவங்கள் மட்டும் நமக்கு அப்படியே மனசுல பதிஞ்சு கனக்கச் செய்து மறக்க முடியாம பண்ணிடும் இல்லைங்களா, என்னை அந்த மாதிரி பாதித்த ஒரு சம்பவம் நடந்த நாள் நாளைக்கு வருது. எனக்குன்னு இல்லை பலருக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன், ஆனால் எனக்கு அந்த சம்பவம் குறித்து கூறிய நபரால் மேலும் மனஅழுத்தம் ஏற்பட்டது.

நாளைதான், கும்பகோணம் விபத்தில் கருகிய அழகு மொட்டுக்களின் நினைவுநாள். எல்லோரும் நாளை கல்வி நிலையங்களில், பொது இடங்களில், அரசு அலுவகங்களில், மத ஆலயங்களில் என முடிந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவோம். ஆனால் தங்களின் கனவை, பொக்கிஷத்தை ஓரிரு நிமிடங்களில் பறிகொடுத்த அந்த பெற்றோருக்கும், தங்களின் ஆத்ம நண்பர்களை பறிகொடுத்த உடன் பிறப்புகளுக்கும் எப்படி இருக்கும். இயற்கை சீற்றத்தின் போது பறிகொடுக்கும் உயிர்களின் உறவுகளுக்காவது ஒரு சிறு ஆறுதல் மிஞ்சுகிறது, ஆனால் இப்படி மொத்தமாக பிறரின் அலட்சியத்தால், இல்லை நம்முடைய கையாலாகாத்தனத்தால், கோரமாக உயிர் துறக்கும் போது அந்த காயம் வடுவாகக் கூட மாறுவதில்லை.

எனக்கு முதலில் விஷயத்தை கூறியது என்னுடைய அக்காளின் மூன்று வயது மகன், தன் மழலை கூட மாறாதவன், பள்ளியில் திடீரென மழலை பிரிவுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட போது கூறப்பட்ட காரணத்தினை என்னிடம் கூறினான். நல்லவேளை தொலைக்காட்சியில் என் தந்தை முன்பே பார்த்ததால், அவன் அதை பார்ப்பதை தவிர்த்தார்.

இப்போழுதுக் கூட தெரியாமல் தீயில் விரலை சுட்டுக்கொள்ளும்போது கூட, நமக்கே இப்படி என்றால், தப்பிக்க கூட வழியில்லாமல் மாட்டிக்கொண்டு கதறி உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு எப்படி இருந்திருக்கும், என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு கொஞ்சமும் குறைவில்லாத சோகம் தீயின் நாக்குகளில் மாட்டியும் தப்பித்த குழந்தைகளின் நிலை. சில வீடுகளில் பெற்ற இரண்டு குழந்தைகளையும் இழந்தப் பெற்றோர், சில வீடுகளில் தம்பியை காப்பாற்றப் போய் முடியாமல் படுகாயமடைந்த சகோதரி என பரிதாபமான காட்சிகள்.

இதற்கு யாரை குறை சொல்வது? வேறுவழியில்லாமலும், விழிப்புணர்ச்சி இல்லாமலும் இந்தப் பள்ளியில் படிக்க வைத்த பெற்றோரையா, பொறுப்பில்லாமல் ஆடிவெள்ளிக்கு கோவிலுக்கு சென்று புண்ணியம் கட்டிக் கொள்ள முயற்சித்து இந்த துரோகத்தை செய்த ஆசிரியப் பெருமக்களையா, பெற்றோரின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி செயல்பட்ட பள்ளித் தாளாளரயா, அனைவருக்கும் கல்வியை கிடைக்கச்செய்யும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தும், சோம்பலாலும், பணத்தாசயாலும் இந்தக் கேட்டிற்கு துணைபோன கல்வித்துறை அதிகாரிகளையா, இல்லை உலகிலயே சுறுசுறுப்பான புத்திசாலி வந்தாலும் நிர்வாகம் செய்து மக்களுக்கு நன்மை செய்ய முடியா வண்ணம் இருக்கும் நம் அரசு இயந்திர அநியாய குளறுபடிகளையா?

ஆண்டாண்டுகாலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது இவ்விஷயத்தில் ஏற்க முடியாது. குறைந்தபட்சம் இனியாவது இதைப் போன்ற விபத்துக்கள் நடக்கா வண்ணம் அனைவரும் தங்களின் குறைகளை திருத்திக் கொண்டால் மட்டுமே அந்த பெற்றோருக்கும், தங்களின் உயிர் நண்பர்களை இழந்து இந்தப் பிஞ்சு வயதிலேயே அத்தகைய கொடூர அதிர்ச்சியை தாண்டி வந்திருக்கும் அப்பள்ளியை சேர்ந்த பிற குழந்தைகளுக்கும் சிறிதளவு ஆறுதலாவது ஏற்படும். பிறர் மீண்டாலும் அவர்கள் ஒவ்வொரு ஜூலை பதினாறும் இந்த சம்பவத்தை வாழ்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.

மலராமலே உயிர்விட்ட அந்த மொட்டுகளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!!!!!

Sunday 13 July, 2008

சந்தேகங்கள்

எனக்கு சில சந்தேகங்கள் இருக்குங்க, யாராவது கொஞ்சம் தீர்த்து வைங்களேன்.

ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில பண்ற தவறுகள பெரிதுபடுத்தி பாக்குற சமூகம், ஏங்க அவங்களே பொது வாழ்க்கையில பண்ற தவறுகள கண்டுக்கறதே இல்ல?
தனிப்பட்ட வாழ்க்கையில நல்லவங்களா இருக்கிறவங்க பொது வாழ்க்கையில தப்பான கருத்துக்களே வெச்சிருக்க மாட்டாங்களா?

ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்தால் ஏற்படுற பாதிப்பு ஒரு சிறிய வட்டத்தை தான் பெரும்பாலும் பாதிக்குது, இன்னும் அதில் சில விஷயங்களுக்கு பரிகாரம் செய்வதின் மூலம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கலாம். ஆனா இதுவே பொது விஷயத்தில் செய்யும்போது பெரும்பான்மையாக பாதிக்கப் படுபவர்களுக்கு பல சமயங்களில் எந்தப் பரிகாரமும் செய்ய முடிவதில்லை, அப்படி இருக்கும்போது இதற்கு கொஞ்சமாவது கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா வேண்டாமா?

நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் பலருக்கும், பல விஷயங்களுக்கும் பொருந்தினாலும், இன்னைக்கு நம்மளோட தலையாய பிரச்சினை அணு ஒப்பந்தம் பற்றியும், அதை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஆதரிக்கும் சாராரைப் பற்றியும்தான். இவர்கள் சொல்லுவதிலேயே முக்கியமானக் காரணம் மின்சாரத் தன்னிறைவாம்.

சரிங்க நான் இதை எதிர்க்கறேன்னா, எனக்கென்ன தெரியும் அடிப்படை தேவையான மின்சாரத்தைப் பற்றியும் அந்தப் பற்றாகுறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்? எனக்கு இது பற்றி ஜாஸ்தி தெரியாதுதான், ஆனா ஒரு விஷயம் சுய புத்தி உள்ள எல்லாருக்குமே தெரியும், அது என்னன்னா, மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்.

தெரியாமத்தான் கேக்குறேன், பாதுகாப்பு பாதுகாப்புன்னு பேத்துறீங்களே, நாட்ல நூறு வகையான அணு ஆயுதங்களை வெச்சுகிட்டா எல்லாரும் பயந்துடுவாங்களா, அழிக்க நினைக்கறவன் கையில் ஒண்ணிருந்தாலும் நூறிருந்தாலும் அதே விளைவுதானே. சரி இதை எதிர்க்கிறவங்களாவது கொஞ்சம் ஒழுங்கான காரணத்தை முழுசா சொல்லி எதிர்க்கிறாங்களா, அதுவும் இல்லை. நாம எப்படி அமரிக்காகிட்ட அடிமயாகலாம்னு எதிர்த்து பல வாதங்கள எழுப்புறவங்கக் கூட அணு உலைகளால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் அதனை சார்ந்துள்ள உயிரினங்கள், விவசாயம், இவ்விரண்டையும் நம்பியுள்ள அனைத்து வகை தொழில்கள்னு எல்லாமே பயங்கர மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்கிற உண்மையான, அதி முக்கியமான வாதத்தை ஏன் வைக்க மாட்டேன் என்கின்றனர்.

நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள்(அது அமெரிக்க உதவியினாலாகட்டும், இல்லை பிரான்சு உதவியினாலாகட்டும் இல்லை நாமே யார் உதவியும் இன்றி ஏற்படுத்துபவைகளாகட்டும்) அமைப்பதனால் நாட்டின் எதிர்காலமே சூனியமாகாதா?

நாம் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தானே முடிவெடுக்க வேண்டும். அதிலும் இறந்த காலத்தில் பிற நாடுகளில் செய்தவற்றை வைத்து எப்படி நம் நாட்டிற்கு நிகழ்கால மற்றும் எதிர்கால முடிவுகள் எடுக்க முடியும்? இந்த விஷயத்திற்கு எப்படி பிரான்சை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும், இப்பொழுது பிரான்சுலேயே சில அணு உலைகளை பொதுமக்களின் எதிப்பினால் மூடி விட்டார்களே, மேலும் பல ஆண்டுகளாக அணு உலைகள் புதிதாக அமைப்பதில்லயே, ஏன்?

சரி அணு உலைகள் அமைக்கிறோம் பின்னர் அதன் கழிவுகளை என்ன செய்வது? பிரான்ஸில் மற்றும் ஜப்பானில்(பிரான்சின் உதவியால் கட்டப்பட்டது) உள்ள அணுக்கழிவு ரீசைக்கிளிங் ஆலைகள்தான் இதற்கென வடிவமைக்கப் பட்டவை. ஆனால் இவ்விரண்டில் ஒன்று முற்றிலும் செயலிழந்து விட்டதென்றும், மற்றொன்றில் குவியும் கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் அவ்வாலையிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றும் படிக்கின்றோமே, நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்?

சரி இன்றில்லாமல் போகலாம் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குள்ளாக மாற்று ஏற்பாடை கண்டுபிடித்து விட மாட்டார்களா என்றால், இந்த விஷயத்தை பொறுத்த வரை பாதிப்பு கழிவினால் மட்டுமில்லை, உற்பத்தியினாலேயே உள்ளது, அதன் உபயோகத்தினாலேயே உள்ளது. என்னுடைய மிக நெருங்கிய உறவினர் என்ன ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்றால், புற்று நோயிற்கு(குறிப்பாக மார்பக புற்று நோய்) அளிக்கப்படும் சிகிச்சையின்போது சில சமயம் பாதிக்கப்பட்டவரும், சில சமயம் சிகிச்சை அளிப்பவருமே கதிர் வீச்சின் மோசமான பாதிப்புக்குள்ளாகின்ற காரணத்தால், அதன் வீரியத்தை குறைப்பது அல்லது இந்த சிகிச்சயிலேயே சிறியளவில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்ப்பது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது இன்றைய முன்னேற்றத்திற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று எப்படி கேட்பது? முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்க ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகள் வேண்டாமா?

ஓரளவிற்கு சட்டத்தை ஞாயமாக செயல்படுத்தும் நாடான பிரான்சிலயே அனைத்து பாதுகாப்புகளும் செய்த பின்னரும் நிறைய நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே, சாயப் பட்டறைகளின் அத்துமீறலை கூட சரியாக தட்டிக் கேட்காத நம் நாட்டின் நிலை என்னவாகும்? நாம் ஒரிஸ்ஸா கடற்கரையில் உள்ள தோரியத்தை வைத்து அணு உலைகள் அமைக்கலாமே எனச் சிலர் கூறுகின்றனர். அந்த அணு உலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? பாதுகாப்பு, மின்சாரம் எனக் கூறும் நாம் ஏற்கனவே அணு உலைகள் அமைந்த பகுதிகளில் என்னன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், கசிவு ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்று. இதை தவிர வேறொன்றும் இல்லை. அணு உலைகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள வயல்களின் விவசாயப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்ற சட்டம் சில நாடுகளில் உள்ளது. ஏன் அங்குள்ள புற்களை உண்ணும் ஆடுகளை கூட உண்ணக் கூடாதென்கின்றனர். இவ்வளவு முக்கியமானப் பிரச்சினையில் வழ வழா கொழக் கொழா பதில்கள் சரிவருமா?

சரி எல்லாவற்றையும் விடுங்கள், பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா?

நம்முடைய முக்கிய ஆதார தொழிலான விவசாயம் முற்றிலும் அழிவுப்பாதையில் சென்றுவிடாதா? இதனால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடாதா? அனைத்து தொழில்களும் பலவீனமடயாதா? இன்றைய நிலையில் சாதாரண நோய்களுக்குக் கூட மருத்துவ வசதியின்றி பலர் வாழ்வு கேள்விக்குறியோடுள்ளது, நாளை இதன் பாதிப்புகளால் ஏற்படும் புதிய நோய்களுக்கும், அதற்கு தேவையான மருத்துவத்திற்கும் எங்கு செல்வீர்கள், பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தி சந்ததிகளையே பாதிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த இதனை நாம் போற்றித்தான் ஆக வேண்டுமா?

மின்சாரத் தன்னிறைவடைஞ்சு மென்பொருள் ஏற்றுமதி செஞ்சு ஈட்டுற அன்னியசெலாவனிய மருத்துவத்துக்கும், நஷ்ட ஈடுக்கும் தாரைவார்க்கப் போறோமா? இல்ல இந்த உலைகளை பாதுகாக்கும் பொருட்டு செலவிடப்போறோமா? மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை? பல பயன்பாடுகளில் ஏற்கனவே நாம் அணுசக்தியை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம், அதனை எதுவும் செய்து தடுக்க முடியாது, உள்ள உலைகளை எல்லாம் மூடிவிடுவதும் தீர்வாகிவிடாது. ஆனால் மேலும் பல உலைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதே இங்கு கூறப்படுகிறது.

நான் ஆரம்பத்தில் கேட்ட சிலக் கேள்விகள் இந்தப் பிரச்சினையிலும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குரியது. ஏனென்றால் மக்கள் ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை யாரும் தவறாக மட்டுமல்ல பொறுப்பில்லாமலும் பயன்படுத்தக் கூடாது. அது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பாடுபடுவதாய் கூறும் அனைத்து துறையினருக்குமே பொருந்தும்.

Tuesday 8 July, 2008

கமலுக்கு உலகநாயகன் பட்டத்தை உறுதி செய்யும் அதி முக்கிய பதிவு

டிஸ்கி 1: ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள் மன்னிக்கவும். இந்தப் பதிவை பார்த்து நான் கமல் ரசிகை என யாரும் எண்ண வேண்டாம். நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.


டிஸ்கி 2: வழக்கமாக எல்லோரையும் கைல கால்ல விழுந்தாவது ஒரு பின்னூட்டம் போடுங்க சாமின்னு கேக்குற நானு, இந்தப் பதிவுக்கு கேக்கல(அவங்களை தர்மசங்கடப்படுத்த வேண்டாமேன்னுதான்)


டிஸ்கி 3: ஏன் இந்த கொழுப்பெடுத்த வேலைனு திட்ட நினைக்கிறவங்க தாராளமா திட்டலாம், ஏன் எங்க பதிவெல்லாம் சூடான இடுகைல வரணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா?ஆமாங்க ஆமாம், அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் பதிவு.


நான் நேற்று மாலை வழக்கமாக செல்லும் பால் ரெஸ்டாரெண்டில் (பாரிஸ், லக்ஸம்பெர்க், gibert ஜோஸப் புத்தகக் கடை அருகில் உள்ள கிளை, மிகப் பிரபலமான லேண்ட்மார்க்).நான் சென்றபோது உணவகத்தில் ஒரே வெளிநாட்டினர் மயம்(ஏன்னா இது அவங்க ஊர்). சிலருடன் பேச்சுக் கொடுத்தேன். முதலாமவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெண் தோழியின் முதுகில் கைகளால் கோலம் போட்டுக்கொண்டே சிரித்தமுகத்துடன் ஹலோ சொன்னார்(எனக்கு நாகரிகம் இல்லைனா, அவருக்குமா இருக்காது? பின்ன அவரு கடல போடும்போதுப் போய் மூக்க நொழைக்க தனி அநாகரிகச் சிந்தனை வேணும்ல). நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் அங்குள்ள அல்டெனா எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும் தான் தற்போது சுவிசர்லாந்தில் உள்ள cern லேபில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) என்றும் சொன்னார். சரி விசயத்துக்கு வருவோம் என்று ”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா" என்றேன். பேந்தப் பேந்த முழித்தவர் சொன்ன பதில், “நான் நிறைய ஆராய்ச்சியாளர்களை சந்திப்பவன், அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதேயில்லையே”. மருத்துவரான அவரது தோழியும் தோள்பட்டையை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி “தெரியவில்லை” என்று உடல்மொழியால் சொன்னார். சரி உங்களுக்குபிடித்த ஒரு க்ளாசிகல் ஆராய்ச்சியாளர் பெயரை சொல்லுங்கள் என்றேன்.. 'professor andrew wallard' என்று சொன்னார். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.சரி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரயாவது தெரியுமா என்றேன், அதற்கும் உதட்டை பிதுக்கினார். சரி மூடர்களுக்கென்ன தெரியும்னு அடுத்து நின்ன ஜப்பான் நாட்டு கப்பல் கேப்டனிடம், உங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் தெரியுமா எனக் கேட்டேன், கொழுப்பப் பாருங்க, அவரும் உதட்டைப்பிதுக்கினார். அவனவன் இங்கே 100 கோடி, 1000 படம், என்று ஒரே டெசிமல் நம்பர்களாகபுகழும் இவர்களுக்கா இந்த சோதனை என்று வேதனைப்படலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள் ஏதோ மனநலம் பிழன்றவள் எனக் கருதி போலிசை கூப்பிட ஆயத்தமாவதை பார்த்ததால் அங்கிருந்து வெளியேறினேன்.


இத்தோட விட்டேனா, வீட்டிற்கு வந்ததும் முதலில் அமரிக்க டாக்டரான எங்கக்கா கணவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் "உங்களுக்கு கமல்ஹாசன் என்ற நடிகரை தெரியுமா" என்றேன். அவர் உடனே, "தெரியுமே, தசாவதாரம் நேத்துதான் ரெண்டாவது முறை எல்லாரும் பார்த்தோம்" என்றார். அவரின் பெற்றோருக்கு(கணவர் பெரிய வீட்டலங்கார சாமான் மற்றும் பர்னிச்சர் கடை வைத்திருப்பவர், மனைவி சமூக சேவை மையத்தில் வாலண்டரி சர்வீஸ் செய்பவர்) போன் செய்தேன். அவர்களும் அதையே கூறினர். அடுத்தது பிரெஞ்சுக்காரர்களான என் மாமியார் வீட்டிற்கு(மாமனார் ஆர்க்கிடெக்ட், மாமியார் ஹோம் மேக்கர்) போன் செய்தேன். அவர்களும் 'சென்ற வாரம் பாரிஸ் வந்தப்போ எல்லாரும் சேர்ந்து தியேட்டரில் பார்த்தோமே தசாவதாரம், அதில் நடித்து சாதனை புரிந்த கமல்தானே' என்றனர், நான் ஆமாம் எனவும், அவரைப் போய் எங்களுக்கெப்படி தெரியாமல் இருக்கும் எனக் கோபப்பட்டனர். சரி என அவர்களை சமாதானப்படுத்திவிட்டு விஞ்ஞானியான என் கணவரிடம் அதே கேள்வியை கேட்டேன், 'வேற வேலை இல்லைனா வழக்கம்போல ப்ளாக் எழுதி மொக்கப் போடறதுதான, இன்னைக்கு நான்தானா கெடைச்சேன்னு' கடுப்பானவர கூல் பண்ணி அதிமுக்கிய கருத்துக்கணிப்புக்காக கேக்கிறேன்னு சொல்லவும், 'கமலைத்தான, நல்லாவேத் தெரியும், கேட்டுக்க, அவரோட முதல் படம் களத்தூர் கண்ணம்மா, முதல் மனைவி வாணி கணபதி, இப்போதய கேர்ள் பிரண்டு கௌதமி, மகள்கள் பேரு சுருதி, அக்ஷரா. ஷூட்டிங் பார்த்திடாத இங்கிலாந்து ராணி முதல் முதலா பார்க்க ஆசைப் பட்டது இவரோட பட ஷூட்டிங்கைத்தான். இப்போதைக்கு இதப் பத்தி நீ கண்டிப்பா ஒரு பதிவ போடுவ, ஏன்னா இன்னைய தேதிக்கு எக்கச்சக்க பிரபலமான ப்ளாகர் ஆகணும்னா, அவரைப் பத்தி ஒரு வரி எழுதினாப் போதும்' அப்படீன்னு அடுக்கிட்டே போறாருங்க. எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆகிடுச்சி. சரி இப்படி உலகத்தில் உள்ள விஞ்ஞானி, ஆர்க்கிடெக்ட், லங் ஸ்பெஷலிஸ்ட், பெரிய பிசினஸ்மேன், சமூக சேவகி, இல்லத்தரசின்னு எல்லாப் பிரிவினரிடையும் பயங்கர அறிமுகத்தோட இருக்கும் கமல் ஒரு பட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானவர். அது என்னன்னா,


உலகநாயகன்


கடைசி டிஸ்கி: இந்தப் பதிவில் நான் என் குடும்ப பேக்ரௌண்டை சொல்லி பீத்திக்கிரேன்னு நினைச்சீங்கன்னா, ரொம்ப சரியா கணிச்சிருக்கீங்க. இப்பல்லாம் அதுதான் டிரன்ட். இதை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன், :):):)

Tuesday 1 July, 2008

கவித, டி.ராஜேந்தர், கும்ப்ளே, மாமி

டிஸ்கி 1: கிருஷ்ணா(பரிசல்காரன்), மங்களூர் சிவா, (யுகபாரதி வேற எழுதறார் இல்ல) இவங்களோட பதிவயெல்லாம் பார்த்திட்டு அத மாதிரியான கவிதைகள எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா இப்பவே கழண்டுக்கங்க, அப்பாலிக்கா ஏற்படுற பாதிப்புக்கு நான் பொறுப்பில்லீங்கோ.


டிஸ்கி 2: இந்தப் பதிவு என்னோட ஆசான்களான டி.ராஜேந்தருக்கும், பேரரசுவுக்கும் சமர்ப்பணம்.


இவங்க ரெண்டு பேரும் எனக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க. இனி இந்த எலியோட இம்சையான மலரும் நினைவுகள கேட்டு காண்டானீங்கன்னா, என் பதில் ஒண்ணுதான். வாயில வந்ததெல்லாம் (வாந்தியா இருந்தாக்கூட) கவிதைனு கற்பனை பண்ணிக்கிட்டு, பல மசாலா ஹீரோக்களோட வாழ்க்கைக்கு சூனியம் வெக்க வந்திருக்க பேரரசோட அழிச்சாட்டியத்த நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன். ரைமிங்கா பேசினாலே அதுக்குப் பேரு கவிதைனு ரெண்டு மூணுத் தலைமுறையயே நம்ப வெச்சு கழுத்தறுத்துகிட்டிருக்காரே டி.ராஜேந்தர் அவர நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன். இருங்க இருங்க, கவலைப்படாதீங்க, இப்படில்லாம் நான் சொல்லப்போறதில்லை, அரசன்(என் கதைல வர்ற பிரண்டு) என்னை அன்றே கொன்னுட்டான்(அப்ப நீ ஆவியானெல்லாம் கேட்டீங்கன்னா அப்புறம் தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா எழுதி மத்த பதிவுகள்ல போட்ட பிளேடத் திருப்பிப் போடுவேன்), அதாவது வன்முறையில் நம்பிக்கையில்லாதக் காரணத்தால்(தேவையான ஆப்பு அப்போதே வைக்கப்பட்டமையால்) இந்த பாதகத்தை நான் எப்பவோ நிறுத்திட்டேன், ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள என் ஆசான்களின் பாதிப்பு தமிழ்நாட்ட என்னமா ஆட்டிப் படைக்குதுன்னு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத்தான் இந்தப் பதிவு.


ஏற்கனவே என்னோட பேர்வெல் டே அனுபவங்களை இங்கே http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_06.html பதிஞ்சுருக்கேன். அதுல +2ல கொண்டாடின ஏனோத்தானோ பேர்வெல் டே பத்தி சொல்லிருந்தேன்ல, அந்த பேர்வெல் டேல, மரபு மாறாம சீனியர்களான எங்கள பழிவாங்க வழக்கம்போல சீட்டுக் குலுக்கிப் போட்டு, யாருக்கு எது வராதோ அதையே செய்யச் சொல்லி கட்டக் கடசியா இந்த ஜூனியர்ஸ் ரேக் பண்ணுவாங்கல்ல, அத மாதிரி எனக்கு ஆப்படிக்கறதா நெனச்சு அவங்க தன் சொந்தக் காசிலயே சூனியம் வெச்சுகிட்டாங்க.


என்னோட கவிதை அலர்ஜி கிட்டத்தட்ட எங்க பள்ளிக்கூடத்துல எல்லாருக்குமே தெரியும். இதை இந்த புத்திசாலிங்க பயன்படுத்திக்கிட்டு அதையே எனக்கு வரமாதிரி பாத்துகிட்டாங்க. நாங்க யாரு? விடுவமா, அங்கயே ஒரு கவிதைய எடுத்துவிட்டேன். அது என்னன்னா,


கும்ப்ளே

நீ ஒரு ஆம்பளே

உங்க அம்மா ஒரு பொம்பளே.


இதெப்படி இருக்கு! இதக் கேட்டு அந்தப் புத்திசாலிங்களோட சேர்த்து பரீட்சை பயத்துல ஒரு மார்கமா இருந்த எங்கக் கிளாசு பசங்களும் (புத்திபேதலிச்சுப் போய்டுச்சோ இல்ல விட்டா அடுத்த கவிதைய ஆரம்பிச்சிடப்போறாங்கிற பயத்திலயோ) கன்னாமுன்னானு தட்டோ தட்டுன்னு(கையத்தாங்க) தட்டுறாங்க. கீழ எறங்கினா ஒரே பாராட்டுமழை. சிலப் பேர் சீரியஸா மூஞ்ச வெச்சுகிட்டு,"உன்னோட இந்தத் திறமைய இவ்ளோ நாள் ஏன் வீணாக்கினேனு" கேட்டுட்டாங்க.


விடுவனா நானு. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு வியூகம் வகுக்க ஆரம்பிச்சேன். பாராட்டுன அப்பாவிங்க அதோடப் போக வேண்டியதுதானே. ஒரு பலியாடு கடசீ பரீட்சை முடிஞ்சப்புறம் நேரா பலிப்பீடத்துக்கு(அதாவது என்கிட்டே) வர, என்ன ஏதுன்னு நானும் நல்லபுள்ளயாட்டமா கேட்டேன். அந்தப் பலியாடும் தன் கழுத்துல தானே மாலைப் போட்டுக்கறதப் பத்தின தெளிவில்லாம என்கிட்டே ஆட்டோகிராப் புக்க நீட்டப் போக, என்னோட கவிதை ஏவுகணைய ஏவினேன்.அதென்னன்னா


மேலப் பார்த்தா வானம்

கீழப் பார்த்தா பூமி

உங்கம்மா எல்லார்க்கும் மாமி


இப்படி எழுதி என் கையெழுத்தும் போட்டுக் குடுத்திட்டேன். அந்தப் பொண்ணும் ரோபோ படத்துக்கு முத நாள் முத ஷோ டிக்கட் கெடச்சா மாதிரி பெருமையாகி ஓடுனா. இங்க நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அந்தப் பொண்ணு பிராமண பொண்ணு. அவங்கம்மா எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுவாங்க. நாங்களும் அவங்கக்கிட்ட மாமி, மாமின்னு ரொம்ப ஒட்டுதலா இருப்போம். அத மனசுல வெச்சுத்தான் நான் அப்படி எழுதினேன். மாமாவோடப் பொண்டாட்டி மாமிங்கறது சுத்தமா மறந்துப்போச்சு. இதுப் புரியாதவங்க அந்தப் பொண்ணுகிட்ட நான் டபுள் மீனிங்க்ல அவள நக்கல் பண்ணிட்டதா போட்டுக் குடுத்துட்டாங்க(ஏன்னா அந்தப் பொண்ணு அப்பப்போ யாரையாவது லவ் பண்றேன்னு சொல்லி உளறுவா, ஆனா அவ இன்பாச்சுவேஷன்ல ஜாலியா சொல்றான்னு நாங்க யாரும் எப்பவுமே அதை சீரியஸா எடுத்துக்கலை)


அன்னிலேருந்து அவ செமக் காண்டா ஒரு மாசத்துக்குத் திரிஞ்சா, ஏன்னா அதுவரைக்கும் எனக்கு விஷயம் புரியவே இல்லை. கடசியா ஒரு நல்ல உள்ளம் என் ட்யூப் லைட்டுத்தனம் தாங்க முடியாம விளக்கப்போக, அப்புறம் என்னோட கவிதை ஆர்வத்தை தூக்கி குப்பைதொட்டிலப் போட்டுட்டு அவகிட்டப் போய் விளக்கம் சொல்லி சமாதானப்படுத்தினேன். ஏற்கனவே என் கலை மற்றும் கவிதையார்வத்தை பத்தி அவளுக்கு முழுசா தெரிஞ்சதால ஆப்பு அத்தோட முடிஞ்சுது. இன்னைக்கு அவளும் இந்தப் பதிவ படிச்சுக்கிட்டுருக்கா, இந்த மொக்கைய படிக்கறச்சே அவ முகம் எப்படி மாறுங்கறத உங்களோட கற்பனைக்கே விட்டுடறேன்.