Monday, 26 May, 2008

பாதை

http://fr.youtube.com/watch?v=ZeLvbpWrSow&feature=related
எனக்கு மேலே குறிப்பிட்ட காட்சியில் வரும் வசனம் நிரம்பப் பிடிக்கும். அதில் உள்ள வசனத்தை பொது நோக்கோடு மட்டுமில்லாமல் சில சமயம் நம் சொந்த வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். எனக்கு ஏன் திடீர் நினைவு ஏற்பட்டதுன்னு கேட்டீங்கன்னா, நேற்றைக்கு காலையில் எங்களின் flatஐ விட்டு வெளியே வந்து செடிகளுக்கு தண்ணீர் இட்டுக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது எங்களின் பக்கத்து வீட்டம்மா(அவர்கள் tunisseeஐ சேர்ந்தவர்கள்) வெளியே வந்தார்கள்.வழக்கம் போல் என்னிடம் மிக அன்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களுடைய கோடை விடுமுறை திட்டங்களை பற்றி கேட்டார்கள். பின்னர் தாங்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார்கள். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் வருடா வருடம் கோடையில் இரண்டு மாதங்கள் அவ்வாறு செல்வது வழக்கம். அப்பொழுதான் தாங்கள் நிரந்தரமாக செல்வதாக கூறினார்.எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏனென்றால் அது அவர்களின் சொந்த flat அதோடு அவர்கள்தான் எங்களுடைய கட்டடத்தின் guardien ஆக இருப்பவர்கள். அனைத்து காரியங்களிலும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்பவர்கள். என்னிடம் மிக மிக அன்பாகப் பழகி வந்தவர்கள். கொஞ்சம் நாட்களாக அவருடைய கணவர் மிக இளைத்தும் சோர்வாகவும் காணப்பட்டதை கவனித்திருந்தாலும், அவருக்கு புற்று நோய் எனக் கூறியவுடன் அதிர்ந்து விட்டேன்.

இதை படிக்கும் சிலருக்கு overreact செய்கிறேனோ எனத் தோன்றலாம். ஆனால் மொழித் தெரியாத தேசத்தில் நாம் முதலில் பழகும் அல்லது நம்மிடம் முதலில் அன்போடு பழகும் அன்னியரைக் கூட நாம் நம் வாழ்வின் ஒரு இன்றியமையாத அங்கமாக சேர்த்துக்கொள்வோம். இது தமிழகத்திலிரிந்து ஆங்கிலம் பேசாத நாட்டிற்கு செல்பவர்கள் நிதர்சனமாக உணரலாம். அவர்கள் எனக்கு அப்படிப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர் பிரிந்து செல்கிறார் அதுவும் ஒரு சோக நிகழ்விற்காக எனும்பொழுது அறிவும் மனதும் சேர்ந்து உணர்ச்சிவயப்பட்டது. அப்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் என் மனதுள் கிளப்பிய எண்ணங்கள், புரிதல்கள், நன்றிகள் ஏராளம். தனக்கு உள்ள மொழிப்பிரச்சினயாலும், கணவருடைய திடீர் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத பொருளாதார நெருக்கடியாலும் தான் இவ்வாறு முடிவெடுத்ததாக கூறினார். மேலும் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என்றால் தனக்கு கல்வியறிவு மிக குறைவு என்றார்.

அச்சமயம் என்னையுமறியாமல் மேலே குறிப்பிட்ட வசனம்தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு முதுகலை பட்டதாரி. என் தாயும் ஒரு முதுகலை பட்டம் பெற்றவர். ஆனால் நாங்கள் இந்த நிலையை எவ்வாறு அடைந்தோம் எனப் பார்த்தால், அந்நிலையை நோக்கிய என் தாயின் பயணத்தை ஒப்பிட்டால் என்னுடைய பயணம் ஒன்றுமே இல்லை. என் தாத்தா பெண் பிள்ளைகள் படிக்கவே கூடாது என்னும் பழமையானக் கொள்கையில் அவ்வளவு உறுதி கொண்டவராம். அப்பொழுதைய காலக்கட்டத்தில் அது சாதாரணமானது என்றாலும், கணவன் சொல்லை, அது மடமையின் உச்சபட்ச கருத்தாக இருந்தாலும், பின்பற்றாத மனைவிக்கு என்ன அவப்பெயர்கள் ஏற்படும் என்பதும், நமக்கெல்லாம் தெரியும். எனினும் என் பாட்டி அக்காலக் கட்டத்திலும் தன் ஐந்து பெண் பிள்ளைகளையும் அரும்பாடுபட்டு படிக்க வைத்தாராம். அதற்கு உதவிய ஆசிரியர்களை இப்பொழுதும் என் தாய் நன்றிப்பெருக்கோடு நினைவு கூறுவார்கள். எவ்வளவு அவமரியாதை செய்தாலும், ஊரிலேயே மிகப் பெரிய மனிதர் அவரை பகைத்துக் கொள்கிறோமே என்ற பயப்பட்டாமல் இவர்கள் வீட்டுக்கே வந்து கற்பித்தார்களாம். பின்னர் என் தாத்தா மனம் மாறி நல்ல பள்ளியில் படிக்க வைத்தபோதும் வீட்டில் படிப்பதற்கு சில வினோத இடையூறுகள் ஏற்படுமாம்.

சிலகாலத்திலேயே தாத்தா தேர்ந்த முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொண்டாலும், அன்று எந்த நேரடிப்பயனும் பெறமாட்டோம் எனத் தெரிந்தும் முதல் முக்கிய முயற்சியை எடுத்த என் பாட்டியும், அதற்கு அச்சமில்லாமலும் கூச்சலிடாமலும் தங்களின் உறுதியான உதவியை அளித்த ஆசிரியர்களும் தான் என் தலைமுறையில் நான் எதிர்கொண்ட மகிழ்வான பயணத்துக்கு எளிதான பாதையை அமைத்துக்கொடுத்தவர்கள். என் தாயின் காலக் கட்டத்தில் படித்து பட்டம் பெற்ற நிறையப் பெண்களின் பாதை இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கமும் எதிர்கால சந்ததியின் நலன் ஒன்றையே லட்சியமாகக் கொண்டவர்களினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை நாம் மறக்கவே கூடாது.

இன்றியமையாதத் தருணங்களில் கல்வி நமக்கு தரும் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏராளம். அதற்குக் காரணமானவர்களை, எந்தப் பயணையும் எதிர்பார்க்காத, தன் மரத்தின் கனிகளையே சுவைக்காத வேர்களை, அவர்கள் ஏற்படுத்தித் தந்த பாதையை, நாம் முடிந்தளவில் போற்ற வேண்டும்.

Sunday, 25 May, 2008

Paris பதிவுகள்-2

என்னங்க எல்லார்க்கும் சஸ்பென்ஸ் தாங்க முடியலையா, மீதி பிளேட போடாமயா இருப்பேன்.இதோட முதல் பாகம் படிக்கணும்னா இங்க போங்க- http://vettiaapiser.blogspot.com/2008/05/paris.html

சரி நான் எனக்கு காரணம் தெரியும்னு சொன்னா முழிப்பாருன்னு பாத்தா,இவர், ஹப்பானு நிம்மதிப் பெருமூச்செல்லாம் விட்டுட்டு, அப்டின்னா eiffel towerக்கு போக வேண்டாம்தானேங்கராறு. எனக்கு கடுப்பாயிடுச்சி,சரின்னு வேற வழியில்லாம தோல்வி ஒரு வீராங்கனையின் வாழ்க்கையில் சகஜம்னு அவர்கிட்டயே காரணத்தை கேட்டேன். காரணம் என்னவாம்னா, நாம எப்டி சென்னைல அண்ணா சமாதி,எம்.ஜி.ஆர் சமாதி எல்லாம் சுத்தி பாக்க போறத பட்டிக்கட்டுத்தனம்னு நெனைச்சு, அவாயிடு பண்ணுவோம்ல( இல்லைன்னா இந்த புனித பூமியோட நாற்றமிகு சிடிசன்ஸ் இல்லைன்னு மத்தவங்க நெனைச்சுப்பாங்கலே) அந்த மாதிரி தான் இவங்கல்லாம் eiffel towerஅ சும்மா சுத்தி பாக்க அதுவும் ஜனவரி மாசக்குளிருல போனா கேவலமா பீல் பண்ணுவாங்களாம்.

ஒரு கணவன் தன்னோட நிலமைய இப்படி தெளிவா எடுத்துச் சொன்ன பிறகு ஒரு மனைவியோட கடமைய நான் கண்டிப்பா செய்யணும் இல்ல. அதனால அவர்கிட்ட இன்னைக்கு என்னை eiffel tower கூட்டிட்டு போனாத்தான் ஆச்சின்னு அடம் பிடிச்சி கூட்டிட்டு போயிட்டேன். பின்ன இந்த அளவுக்கு கூட அவர் உணர்வுகளுக்கு நான் மதிப்பு குடுக்கலயின்னா எப்படிங்க, அதான் என்னால முடிஞ்ச, சின்ன அளவுல அவரை humiliate பண்ணேன். இல்லைனா நான் என்னங்க அவருக்கு பொண்டாட்டி.

சரி இப்டியாக இன்னும் எல்லா எடமும் சுத்தி பாத்தாச்சா, இந்த போட்டோஸ் பாத்து வீட்ல இருக்கிறவுங்க சந்தோஷம்தானே படணும், ஆனா எங்க வீட்ல அப்டி இருந்தாத்தான் கோளாறுன்னு பயப்படணும். இப்போ இவங்களுக்கு என்ன பிரச்சனைன்னா இவங்களோட அருமை பெருமையான மாப்பிள்ளைய மிரட்டி எல்லா எடத்துலயும் நானே போட்டோல நின்னுக்கிட்டேனாம்.நான் என்னத்தங்க சொல்றது இந்த கொடுமைய, இவர ஒரு போட்டோ எடுக்கிறேன்னாலும், இவரு நின்னாத்தானே(அதே அண்ணா சமாதி ரீஸன்தான்).

நானும் இவர டயானா கார் அக்சிடென்ட் ஆன இடத்திலேருந்து அது இதுன்னு கேட்டு டார்ச்சர குடுத்தேன். அப்டியே ஒரு ஆறு மாசம் ஜாலியா இவர கொடுமப்படுத்திட்டு வாழ்க்கை ஆனந்தமா போச்சு.

இப்போல்லாம் நானே இவர மாதிரி ஆகிட்டேன். இன்னைய தேதிக்கு மட்டன் பிரியாணியும், தயிர் வடையும் சேர்த்து குடுத்தாலும் போட்டோ எடுத்துக்க ஒரு ப்ளேட்டுக்கு ரெண்டு ப்ளேட்டு சேர்ந்து யோசிக்கிறது.

Saturday, 24 May, 2008

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ஆண்கள் கிட்ட ஒரு வேலைய செஞ்சுக்குடுக்க கேட்டா அதை அவங்க எப்டி செய்வாங்கன்னு பாப்போம். முதல்ல அவங்களை ரெண்டு வகையா பிரிச்சிக்கலாம். சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு தன் சுயபுத்திய சுத்தமா உபயோக படுத்தாதவங்க ஒரு வகைன்னா, சொன்னதுக்கு மேல ஓவர் உற்சாகமா செயல்பட்டு இவங்களை ஏன்டா செய்யச் சொன்னோம்னு குமுற வெக்கறவங்க இன்னொரு வகை. இதை ஒரு சின்ன உதாரனத்த வச்சு நான் விளக்கறேன்.

இப்போ நீங்க அவங்களை மார்க்கெட்டுக்கு போக சொல்றீங்கன்னு வச்சுக்கங்க, நீங்க ஒரு லிஸ்ட் எழுதி குடுப்பீங்கள்ள, அதுல முதல் வகைய சேர்ந்தவங்களுக்கு என்ன பிராண்ட்னு கூட எழுதி குடுக்கணும். இவங்க என்ன செய்வாங்கன்னா போய் அதே பிராண்ட, சொன்ன அதே வகைல வாங்கிட்டு வருவாங்க. சரி இதுல என்ன பிரச்சினை இவளுக்குன்னு யோசிக்கறீங்களா? பாக்க நல்லவிதமா தெரிஞ்சாலும், இதுல காண்டு கெளப்புற விஷயம் ஒண்ணு இருக்கு. என்னன்னா, இப்போ நீங்க சக்தி சிக்கன் மசாலா வாங்கிவர சொல்றீங்கன்னு வச்சுக்கோங்க, கடையில ஆச்சி சிக்கன் மசாலா தான் இருக்குன்னா இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா எதுவுமே வாங்காம திரும்பிடுவாங்க. கூட இன்னொரு கொடுமையான காமடியும் செய்வாங்க, என்னன்னா பால் பாயசம் செய்யலாம்னு பாலும் சக்கரையும் கேட்டா, நீ லிஸ்ட்ல எழுதுன ஆரோக்யா பால் இல்ல, அதனால் வெறும் சக்கரை மட்டும் தான் வாங்கிட்டு வந்துருக்கேன்னு அப்பாவியா சொல்லுவாங்க. இவங்ககிட்ட கோச்சுக்கவும் முடியாது, நம்ம எரிச்சல அடக்கவும் முடியாது.

ரெண்டாவது வகை எப்டின்னா, இவங்களுக்கு லிஸ்டெல்லாம் எழுதி குடுக்கக் கூடாது. அது இவங்களுக்கு பிரஸ்டீச் பிராப்ளம் ஆகிடும். கோவத்துல மார்க்கெட்டுக்கே போக மாட்டாங்க. சரினு நாம குருமா வைக்கத் தேவையான பொருட்களை சொல்லி வாங்கிட்டு வர சொல்லுவோம், இவங்கதான் லிஸ்டில்லாம போற புத்திசாலிங்களாச்சே, கோழியத்தவிர மத்த எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டு ஜம்பமா ஆயிரம் விளக்கம் சொல்லிட்டு ஈராக் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ண போற மாதிரி தலை தெறிக்க ஓடுவாங்க. சில சமயம் இன்னொன்னும் செய்வாங்க, இப்போ நாம அவசரத்துக்கு கொஞ்சம் வெங்காயமோ இல்ல தக்காளியோ வாங்கிட்டு வரச் சொன்னோம்னு வச்சிக்கங்க, இவங்களா கூட சேர்த்து உருளைகிழங்கு,கேரட்,பீன்ஸ்,கத்ரிக்கானு இஷ்டத்துக்கு கிலோ கிலோவா வாங்கிட்டு வந்துடுவாங்க. கேட்டா, "அதெப்படி வெறும் வெங்காயம் மட்டும் வாங்குறது, ஒரு மாதிரி இருந்தது,அதான்" அப்டின்னு சொல்லுவாங்க.கடைக்காரர் இவங்கள மதிக்க மாட்டாராம், வெறும் வெங்காயத்த வாங்கினா. இருக்கிற கூட்டத்துல அவருக்கு வெறும் வெங்காயம் வாங்கிரவங்களை கண்டு பிடிச்சு அவமரியாதை செய்யறதத் தவிர வேற வேலையில்ல பாருங்க. இதுல கொடுமை என்னன்னா நாம முத நாளுதான் இதெல்லாத்தையும் வாங்கி கழுவி சுத்தம் பண்ணி, கிளிக்கூண்டுல மயில அடைக்க படுற பாட்ட பட்டு எல்லாத்தையும் fridgeல அடுக்கி வச்சிருப்போம். நமக்கு எப்படி இருக்கும்.

யப்பா, இந்த பாட்டை படறத்துக்கு நாமே அந்த வேலைய செஞ்சு முடிச்சிடலாம். இந்த டார்ச்சர் குடுத்தப்புறம் நாம ஏன் அவங்க கிட்ட வேல சொல்லப்போறோம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

Thursday, 22 May, 2008

Paris பதிவுகள்

நான் பாரிசில் கால் வைத்தது 31 டிசம்பர் 2006 பகல்லதான். என் ரங்கமணியோட நிம்மதியா சேர்ந்து இருக்கலாம்னு ஜாலியா எக்சைட்டிங்கா இருந்தாலும், இனிமே வீட்டுக்கு போகணும்னா இப்ப பட்ட இம்சைய(flight travel தாங்க, பின்ன அன்னிக்குன்னு பாத்து air france flight 3 மணிநேரம் தாமதம்) திரும்பி படணும்னு நெனைச்சப்போ சோகமாவும், கடுப்பாவும் இருந்துச்சு. நாம இந்தியால என்ன நெனைக்கறோம், பாரிஸ்ல நியூ இயர்க்கு பயங்கரமா கொண்டாட்டங்கள் இருக்கும்னுதானே, அதான் இல்லே. நாங்க வந்து வீட்ல luggageஐ வச்ச உடனே இவர் சீக்கிரம் கிளம்பு, மார்க்கெட்டுக்கும் (நம்ம சந்தை மாதிரி) சூப்பர் மார்க்கெட்டுக்கும் போகலாம்ங்கராறு. ஏன்னா ஜனவரி 1 & 2 எல்லாமே மூடி இருக்கும்னு சொன்னாரு.சரின்னு அதையெல்லாம் முடிச்சுட்டு படுத்துத் தூங்கிட்டோம்.

கரெக்டா 12 மணிக்கு இவர் நண்பர் தொலைபேசியில வாழ்த்தினப்பதான், அடடா புத்தாண்டு பொறந்தாச்சானு எழுந்து உட்கார்ந்தேன். அப்புறம் வேற என்ன, கடமை என்னை வா வானு அழைச்சுது. வெளிநாடு போற புதுப்பொண்னோட கடமை என்னங்க? 3 மணிநேரம் தொடர்ந்து, கணவர்கள் கிட்டத்தட்ட returnticket எடுக்கிற நெலமைக்கு போற வரைக்கும் தேம்பி தேம்பி அழறதுதானே, அத செவ்வனே செஞ்சேன்.

காலைல முதல்ல eiffel towerஅ சுத்தி பாக்க போலாம்னு சொன்னா,இவரு இல்லை அப்புறம் போகலாம், இப்போ notre dame கத்தீட்ரலுக்கு போகலாம்னாரு. அங்க போனா ஒரு நூறு பேரு க்யூல நிக்குறாங்க. சரின்னு போனோம், அழகா பிரம்மாண்டமா இருந்தது.இதுக்கு மேல என்கிட்டே இருந்து வர்ணிப்ப எதிர்பாக்காதீங்க, என்னால historical placesஅ எல்லாம் இவ்ளோ தான் ரசிக்க முடியும். அப்புறம் வெளியில சாப்பிட்டு சும்மா பாரிஸ் தெருக்களை ரசிக்கலாம்னு பாத்தா எனக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு ஏதோ ஒரு தலைவர் புட்டுக்கிட்டு ஊரடங்கு உத்தரவு போட்டாப்போல் ஒரு ஜீவனையும் காணும். கத்தீட்றல்ல இருந்தது புல்லா டூரிஸ்ட்டாம். செரினு வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த நாளாவது eiffel towerஅ பாக்கலாம்னா இன்னிக்கும் Arc de Triomphe,Champs Elysées க்கெல்லாம் போலாம்ங்கரார். செரின்னுட்டு போனம். எல்லாம் நல்லா இருந்துது. இன்னிக்கு எனக்கொரு டௌட் ஸ்லைட்டா வந்திச்சி. இவரு ஏன் தொடர்ந்து eiffel tower கூட்டிட்டு போக மாட்டேங்கராருன்னு.

இப்போ உங்களுக்கொரு சந்தேகம் வரும்,நான் ஏன் eiffel டவர் பைத்தியம் புடிச்சு அலயரேன்னு. வேறோன்னுமில்லைங்க எங்க சொந்தக்காரங்கல்லாம் நான் அங்க நிக்கிறா மாதிரி போட்டோ அனுப்பலைனா நான் பாரிஸ்ல இருக்கிறதை நம்பாம, என் ரங்கமணிய பத்தி இல்லாத வதந்தி எல்லாம் கிளப்பி விடுவாங்க(ஏன்னா அவரு பிரன்ச்சுக்காரராமா) என்னாமோ நம்ம ஊர்னா அப்டியே நூத்துக்கு நூறு இவங்க கேரண்ட்டி மாதிரி. எல்லா எடத்திலயும் எல்லாமும் உண்டு. நம்ம நேரமும்,நெனைப்பும் சரியா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்னு நம்ப மாட்றாங்க.

அடுத்த நாளும் வா gare du nord போலாம், உனக்கு தேவையான இந்தியன் பொருட்கள் எல்லாம் வாங்கிக்கலாம்ங்கராரு. செரின்னு போனோம்னு வச்சிக்கங்க, ஆனா எனக்கு சந்தேகம் உறுதியாகிடுச்சு. அடுத்த நாள் நான் ஏதோ சிஐடி வேலை பாக்கரோம்னு நெனைச்சு, நீங்க ஏன் அங்க போக தவிர்க்கரீங்கன்னு எனக்கு தெரியும்னு சொன்னா, நான் எதிபார்க்காத ரியாக்ஷன் காமிக்கராரு. அது என்னான்னு அடுத்த பதிவுல பாப்போம்.

ஏங்க காறி துப்பறீங்க, மொக்கை சீரியல்ல எல்லாம் சஸ்பென்ஸ் இதை விட கேவலமா வச்சாலும் வீட்ல இருக்கிறவங்களுக்காக பொருத்துக்கறீங்க இல்ல, அடுத்த நாளும் பாக்கறீங்க இல்ல, அப்டித்தான் இதுவும்,தினமும் வந்து பாருங்க.

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா

அது ஒரு மார்ச் மாதம். 1989 ஆம் வருஷம். நான் 2nd standard படிச்சிகிட்டு இருந்தேன்.அப்போ எனக்கு தெரியல அடுத்த 6 வருஷங்கள் என்னோட பொது வாழ்க்கை இருளப்போகுதுன்னு. யப்பா,வேறோன்னுமில்லைங்க இந்த ஹிந்தி க்லாசைத்தான் சொல்றேன். என்னை பலி ஆடு மாதிரி அங்க கொண்டு போய் சேத்தாங்க. எங்கக்கா அங்கதான் பிரவீன் வரைக்கும் படிச்சாங்க. அந்த சீசன்ல எப்பப் பார்த்தாலும் எங்கக்கா என்னமோ செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டு வந்த மாதிரி எங்க வீட்ல+குடும்பத்துல+ஸ்கூல்ல எல்லாத்துக்கும் கம்பேர் பண்ணி கொடுமை படுத்துவாங்க. இப்போ அங்கயும் ஆரம்பிச்சாங்க. எனக்கு ஒரு விஷயத்த செய்ய சொல்லி ரொம்ப stress பண்ணா சுத்தமா அதுல concentrate பண்ண முடியாது.

அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு பூராவும் இந்த மேனியா பரவிகிட்டு இருந்தது. எல்லா ஊர்லயும் தெலுங்குகாரங்களோ, மல்லுசோ அவங்க ஊர்ல படிச்ச ஹிந்திய வச்சி இங்க ஒரு பிரோபகண்டா பண்ணிக்கிட்டு இருந்தாங்க.என்னன்னா ஹிந்தி படிச்சாதான் இனிமே வேலை கெடைக்கும், ஹிந்தி படிக்கலைனா future கிடயாதுனு. இது எப்டியோ இங்க இருக்கிற எல்லா அம்மாங்க மனசுலயும் பதிஞ்சு போச்சு. முதல்ல PUC அப்புறம் 12th வரைக்கும்னு படிச்ச அக்காங்களை எல்லாம் கல்யாணம் ஆகி நார்த்ல(நமக்குத்தான் கர்நாடகாவை தாண்டினாலே நார்த் ஆச்சே) செட்டில் ஆனா உபயோகமா இருக்கும்னு சேத்து விட்டாங்க. அப்டி படிக்க போன அக்காங்க கூட துணைக்கு போன அம்மாங்களுக்கு நாம சும்மாத்தான இருக்கோம் நாமளும் பொண்ண பாக்க போறப்போ கைகொடுக்குமேனு படிக்க ஆரம்பிச்சாங்க(இந்த இடத்துல இன்னொன்னும் உண்டு. இவங்கல்லாம் கல்யாணுத்துக்கு முன்ன ரொம்ப நல்லா படிச்சிகிட்டு இருக்கறப்போ கல்யாணம்னு படிப்ப நிறுத்தி இருப்பாங்க. கூட சுமாரா படிச்ச சிலப் பேர் continue பண்ணி காலேஜ் முடிச்சு வேலைக்கு போயிட்டு இருக்கறத பாத்து கடுப்புல இருந்திருப்பாங்க)

இப்போ ஹிந்தி டியுஷன் எடுக்க ஆளுங்க ஜாஸ்தி, ஆனா படிக்க ஆளுங்க கம்மியாகிட்டாங்க. உடனே அவங்க பார்வை ஸ்கூல் பசங்க மேல பட்டுச்சி. அப்டி ஆரம்பிச்சதுதாங்க.இவங்க ஒரு காலத்துல பண்ண பந்தாக்கு அளவே கிடையாது.என்னமோ மேத்ஸ்,பிசிக்ஸ்,chemistry எல்லாம் படிக்கிறது சுத்த வேஸ்ட் மாதிரியும் ஹிந்தி படிச்சாதான் நாசால வேல குடுப்பாங்கன்னும் பீலா உட்டுகிட்டு இல்லாத உட்டாலக்கடி வேலைய செய்வாங்க. தீபாவளி,பொங்கலைத் தவிர எல்லா நாளும்(annual லீவு, சனி ஞாயிறு உட்பட) ஹிந்தி க்ளாஸ் இருக்கும். இவங்க வீட்ல எழவு விழுந்தா டியுஷன் பசங்களுகெல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். என்னவோ இந்தியாக்கு விடுதலை கிடைச்ச விஷயம் அப்போதான் தெரிஞ்ச மாதிரி திரிவாங்க.

நான் பாத்த முக்காவாசி வீடுகள்ல(எங்க வீடும்தான்) அப்பாங்களுக்கு இது புடிக்காது,மத்த விஷயங்களை போலவே எதுக்கு வம்புன்னு வழக்கம்போல அம்மாங்களுக்கு அடங்கி போய்டுவாங்க. சிலப்பேர் ஒரு படி மேல போய் சுத்த தமிழ்காரங்களா இருந்தாலும், அதை ஸ்பஷ்டமா நிரூபிக்க பசங்களை ஸ்கூல்ல செகண்ட் languageஆ தமிழ் படிக்க விடாம ஹிந்தி படிக்க வைப்பாங்க. "ஹைய்யோ இவளுக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு" ஒரு பொது இடத்துல சொல்லி கேக்க பெக்கனு இளிக்கரதுல நோபெல் பரிசு வாங்கின மாதிரி அவ்ளோ பெருமை இந்த அம்மாங்களுக்கு.அப்பா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில தீவிரமா இருந்திருப்பாரு,ஆனா வீட்ல ஜுரம் வந்தா கஷாயம் சாப்ட வைக்கிற மாதிரி சனிக்கிழமை அந்த பசங்களை கதறக் கதற ஹிந்தி படம் பாக்க வைப்பாங்க. சொந்தக்காரங்க வீட்டு புள்ளைங்க ஹிந்தி படிக்கலைனா இவங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். வெறுப்பேத்தியே ரெண்டு நாள்ல வீட்ட விட்டு துரத்திடுவாங்க. ஹிந்தி exam நடக்குறதுக்கு முன்னாடி, சொந்த பாட்டி செத்ததுக்கே ரெண்டு நாளு லீவு போட விடாதவங்க, ஒரு வாரம் லீவு போட வைப்பாங்க(இந்த சமயத்துல medical certificate குடுக்கன்னே ஒவ்வொரு ஊர்லயும் ஒரு பாவமான டாக்டர் இருப்பாரு) எதுக்குன்னா பசங்க கண்டிப்பா பாஸ் பண்ணனுமாம். இப்போ +2க்கு பண்ற எல்லா அட்டூழியமும் நடக்கும். பரீட்சையன்னைக்கெல்லாம் க்ரூப்புக்கு ரெண்டு அம்மாங்கன்னு டர்ன் போட்டுக்கிட்டு கட்டு சோறு கட்டிக்கிட்டு பசங்களுக்கு escortஆ கிளம்பிடுவாங்க.பிரவீன் முடிக்கிற வரைக்கும் இந்த கொடுமை தொடரும்.

ஒவ்வொருத்தரோட தலையெழுத்துக்கு ஏத்த மாதிரி இந்த 8 examஐயும் 4 வருஷத்துலயும் முடிக்கலாம் மேலயும் ஆகலாம். சிலருக்கு இதுக்கு இடைப்பட்ட காலத்திலயே ஞானம் கிடைச்சு நடுவுலயே நிறுத்திடுவாங்க. ஹூம் எனக்கு அது கிடைக்கலே. நான் 6 வருஷம் அனுபவிச்சேன். கடைசில இதனால ஒரு உபயோகமும் இல்ல. சரி ஹிந்திக்காரங்ககிட்ட ஹிந்தில பேசலாம்னா நம்ம ஹிந்திய மதராசி ஹிந்தின்னு சொல்லி நக்கலடிக்கறது(இவங்க பேசறது என்னமோ தேவ பாஷைனு நெனைப்பு, சேட்டுங்க சிலப் பேர் பேசிற தமிழ கேட்டு நாம ரசிக்கிறோம், என்னத்த சொல்றது) சரி ஹிந்தி படம் பாக்க உதவியா இருக்கும்னு பார்த்தா அதுல பத்து வார்த்தைக்கு மேல ஹிந்தில பேசறது இல்ல, புல்லா இங்கிலிபீஸ்தான். கரன் ஜோஹர் படத்துக்கு அந்த பத்து வார்த்தை கூடப் புரிய தேவையில்லை.

அடப்பாவிகளா இதுக்கா என்னை வருஷக்கணக்குல போட்டு வாட்டி எடுத்தீங்க. ஒரு பாக்யராஜ் படத்துல வர்றமாதிரி, பல சின்ன பசங்க வாழ்க்கைய இம்சைப்படுத்தின இந்த ஹிந்தி டீச்சருங்களை கல்ல விட்டு அடிச்சு, நாய விட்டு தொரத்தனுங்க. இந்தப்பதிவு யார் மனசையும் புண்படுத்த இல்லை, பட்ட கஷ்டம் பேச வைக்கிறது

Wednesday, 21 May, 2008

பீட்டர்

எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்னா full house னு ஒரு சீரியல் தான்.அது என்னமோ இந்தியால 10 வருஷம் கழிச்சுதான் போட்டு இருக்காங்க. ஆனா முதல் எபிசோட் பார்த்த உடனேயே ரொம்ப புடிச்சு போச்சு. சின்ன சின்ன அழகான கருத்துக்களை கடைசியா நமக்கு அறிவுரை மாதிரி இல்லாம மனசுல படற மாதிரி சொல்லுவாங்க. எல்லா எபிசோடுலேயும் அந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை சுற்றி ரெண்டு கதைங்க இருக்கும்,ஒண்ணு moral of the storyக்கும் இன்னொண்ணு சும்மா மொக்கயாவும் இருக்கும். அந்த 1/2 மணி நேரம் போவதே தெரியாது.

இதுல என்ன கதைனா ஒரு அப்பா தன் மனைவியின் திடீர் மறைவுக்கு பிறகு தன் மூன்று பெண் குழந்தைகளை தன் மைத்துனரையும் தன் பால்ய கால நெருங்கிய நண்பரையும் உதவிக்கு வைத்துக்கொண்டு மிக நன்றாக,தாய் இல்லாத குறை தெரியாமல் வளர்ப்பார். அதில் மைத்துனர்(john stamos) பயங்கர ஜொள்ளு பார்ட்டியாகவும், மிக நெருங்கிய நண்பர்(dave coulier) பிரபலமான காமெடியனாக முன்னேற துடிப்பவராகவும்,தந்தையாக(bob saget) தொலைக்காட்சியில் பணிபுரிபவராகவும் வருவார்கள்.இதில் தான் Mary-Kate Olsen, ashley Olsen இரட்டையர்கள் கைக்குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானது. பின்னர் மைத்துனர் திருமணம் செய்து இரட்டை குழந்தைகள் பெற்று தன் அக்காள் குழந்தைகளின் பால் உள்ள பாசத்தினால் அதே வீட்டில்(8 பேர் + 1 நாய்) தங்குவதுப் போல் அமைக்கப்பட்டு இருக்கும்.

இதில் துளி கூட ஆபாசமோ, தேவைல்லாத அழுகை காட்சிகளோ, அர்த்தமில்லாத நகைச்சுவயோ இருக்காது.இப்பொழுதும் என்னிடம் அதன் 8 seasonsஉம் உள்ளது.அந்த சமயத்தில் கிட்ட தட்ட இதே குடும்ப கதையமைப்பை கொண்ட பல hollywood படங்களும் serialகளும் வந்துள்ளன. இதை பற்றி முன்பொருமுறை படித்தபோது கிடைத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது Aids நோய் அங்கு பரவி வந்ததால்,மக்களிடையே ஒரு ஆரோக்கியமான மனமாற்றத்தை அவர்களறியாமலேயே ஏற்படுத்தும் பொருட்டு இவ்வாறு செய்தார்களாம். இது உண்மையா அல்லது கற்பனையா எனத் தெரியாது. ஆனால் எனக்கு இப்படிப் பட்ட தொடர்கள் மிகவும் பிடிக்கும்

Tuesday, 20 May, 2008

ஹோட்டல் சாப்பாடு

எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு ஐட்டம்னா தாளிச்ச தயிர் சாதம், மட்டன் பிரியாணி, தயிர் வடை. எங்கம்மா மூன்றயுமே நல்லா செய்வாங்க. இதுல இம்சை என்னன்னா அவங்க அப்டியே என்ன மாதிரி.நல்லா செய்யிற ஒரு விஷயத்த கூட நீங்க பாராட்டிணீங்கன்னா ஓவர் excitementலயும் டென்ஷன்லயும் அடுத்த தடவ கேவலமாக்கிடுவாங்க. பாரிஸ் வந்தப்புறம் நானே சமைச்சு நானே சாப்பிட்டு முடிக்கணும். கடைசி வார்த்தைய நோட் பண்ணிக்குங்க.இந்தக் கொடுமையாலே தாளிச்ச தயிர் சாதம் மட்டும் தான் செய்வேன்.மத்த ரெண்டையும் ஹோட்டல்ல சாப்டலாம்னு பாத்தா என்ன கொடுமைங்க இது? பிரியாணி கேட்டா காரம் கம்மியா spices ஜாஸ்தியா ஒரு தக்காளி சாதத்துல சிக்கனும் முட்டையும் வெச்சு தராங்க, தயிர் வடைனா சரியா அரைபடாத மாவுல பருப்பு போண்டா மாதிரி ஒண்ணுத்தை தராங்க.

ஆனா இங்க பரவாயில்லைங்க, போன தடவ சென்னை வந்த போது சரவண பவன்ல தயிர் வடை விலைய பாத்து மயக்கம் வராத குறைதான். ஏன்னா, பாரிஸ் விலையிலேயே விக்கறாங்க. அதிலயும் சென்னை பாரிஸ் கார்னர் சரவண பவன்லயும் அங்க இருக்க ரயில்வே ஸ்டேஷன் சரவண பவன்லையும் மட்டும்தான் சாப்பிட வர்றவங்களை மனுஷங்களா மதிக்கிறாங்க. மத்த கிளைகள்லேல்லாம் கஸ்டமர் சர்விஸ் ரொம்ப மோசம். (நம்ம ப்ளோக் நேம பார்த்திட்டும் இதுதான் பொழப்பானு கேக்கக் கூடாது) இதுல என் ரங்கமணிக்கு வெளியில சாப்டனும்னா சரவண பவனுக்குத்தான் போகணும். லஞ்ச் இல்ல டின்நெர் டைம்ல வெளியில இருந்தா "y dont v go to saravana bhavan" னு ஆரம்பிச்சிடுவாரு.

இவங்கதான் இப்படின்னா ஒரு முக்கிய விசேஷத்துக்காக சும்மா பந்தாவுக்கு குடும்பத்தோட தாஜ்(நுங்கம்பாக்கம்) போனோம். சிலர் பஃபேயும், மீதிப்பேர் ஆர்டர் பண்ணலாம்னும் முடிவாச்சு. அங்க பாஃபே நல்லா இருந்தது, ஆனா நாம மெனுல இருந்து ஆர்டர் பண்றதெல்லாம் படு கேவலமா இருந்துச்சு. பஃபேல வைக்கிற ஐட்டம் எல்லாம் ஏற்கனவே கையேந்தி பவன்ல செஞ்சு வாங்கிடுவாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் அவங்க chef நாம ஆர்டர் பண்ணும் போதுதான் சமைப்பாரு போல.இதுல அங்க இருந்த ஹெட் வெயிட்டர் ரொம்ப பெருமையா பஃபேனா சீக்கிரம் சாப்டலாம்,ஆர்டர் பண்ணீங்கன்னா ரொம்ப நேரம் ஆகும்கராரு. இந்த பஃபேங்கறது இப்போ பெரிய ஏமாத்து வேலையா ஆகிடுச்சு. எங்கே பாத்தாலும் அதுதான். அவ்ளோ ஐட்டம்ஸ் சாப்டாதவங்க காச கொள்ள குடுத்துட்டு பேக்கு மாதிரி ஒரு fried riceஉம் ஒரு மன்சூரியனும் சாப்பிட்டு வரணும். இங்க இன்னொரு கொடுமை என்னன்னா இவங்களுக்கு குடுத்தேயாகவேண்டிய பெரிய டிப்ஸ். எனக்கு டிப்ஸ் குடுக்கறது பிடிக்கும், என்னை பொறுத்தவரை யாரோ ஒருத்தருக்கு அவங்க திருப்தியா சாப்பிட உதவி பண்றது(அவங்க வேலயாவே இருக்கட்டுமே) பெரிய விஷயம்.ஆனா இங்க டூ மச்.

நான் எல்லா ஐந்து நட்சத்திர ஹோட்டல்லயும் இப்படின்னு சொல்லல. 3rd இயர் படிக்கும்போது புத்தாண்டிற்காக லீ மெரீடியனுக்கு பிரண்ஸோட போனேன். அங்கயும் பஃபேதான், ஆனா அங்க இருந்த ஹெட் வெயிட்டர்ல இருந்து எல்லாருமே ப்ளசண்டா இருந்தாங்க. இந்த மாதிரி ஹோட்டல் அனுபவங்கள் இருந்தா நீங்களும் பகிர்ந்துக்கங்களேன்.

செவ்வாய்க் கிழமை தூர்தர்ஷன் நாடகம் - 1

எனக்கு ஒரு விஷயம் சரியா புரிய மாட்டேங்குது, என்னன்னா, தாய்மொழியாம் தமிழ்மொழி பால் திடீர் பாசம் கொண்டவர்களை பற்றி.இந்தியால எனக்கு தெரிஞ்ச சிலப்பேர் அக்மார்க் தமிழ்னு ப்ரூவ் பண்ணுவாங்க, எப்டின்னா இப்போ ஒரு tableல தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் இருக்குன்னா, இவங்க நாம தமிழ் பேப்பர எடுத்தா என்னமோ ஒரு பெரிய தப்பு செஞ்சது மாதிரி பாப்பாங்க, சர்ச்ல தமிழ் சர்வீஸ்னா அந்த சர்ச்சுக்கு போக மாட்டாங்க, பொது இடங்கள்ல பாத்தா ஆங்கிலத்துல தான் பேசுவாங்க, தொலைக்காட்சியில ஆங்கில சேனல் தான் பாப்பாங்க. இப்படியேர்பட்டவங்க திடீர்னு தமிழ் மேல அக்கறை காட்டுறாங்க. எப்டீன்னா, நான் என் ரங்கமணிக்கு தமிழ் கத்து குடுக்கலயாம், அதனால எனக்கு தமிழ் பற்றே இல்லையாம்.இந்த கேள்விய தமிழாசிரியரான எங்கப்பா கேட்டா ஞாயமுண்டு. ஆனா அவர மாதிரி "மொழிப்பற்று இல்லாதவங்க" எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க,ஒரு மொழிங்கறது தகவல் பரிமாற்றதுக்குதான்னு. என்னை பொருத்தவரைக்கும் ஒரு மொழிய ஒருத்தர் கத்துக்கணும்னா (தாய்மொழியா இல்லாத பட்சத்தில்) அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒண்ணு அவங்களுக்கு அந்த மொழி மேலயோ அந்த மொழி சார்ந்த வரலாறு, பண்பாடு மேலயோ (இல்ல யாரையாவது கவர் பண்றதுக்கு) பயங்கர ஆர்வம் இருக்கணும். அல்லது இரண்டாவது காரணம் என்னன்னா அது அவங்களுக்கு அத்தியாவசியமா, முன்னேற்றத்துக்கு அவசியமானதா இருக்கணும். இது ரெண்டுலயும் சேர்த்தி இல்லைனா நாம யாரையும் கத்துகிட்டே ஆகணும்னு சொல்ல முடியாது. நீங்க என்னங்க சொல்றீங்க?


என்னங்க தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லையேனு பாக்கறீங்களா, செவ்வாய்க் கிழமை தூர்தர்ஷன் நாடகம் இப்படித்தானே சம்பந்தா சம்பந்தம் இல்லாம மொக்கை போடும்.

Sunday, 18 May, 2008

எதையோ ட்ரை பண்றேன், என்னான்னு புரியல

வாழ்கையில எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமான விஷயமுன்னு சில விஷயங்கள் இருக்கும்லே, அது நாம வெறுக்கிற/பயப்படற விஷயமா/நபரா இருக்கணும்னு இல்லை. உதாரணத்துக்கு எனக்கு எங்க மாமியார் வீட்டுக்கு போறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.அது மிக அழகான இயற்கைச் சுழலில் அமைஞ்ச வீடுந்கரதாலே மட்டுமில்லே, அங்க போனா, என் மாமியாரோட ஓவர் அன்பாலே சில சமயம் என் கணவர் படர அவஸ்தைய பாத்தா ஜோக்கா இருக்கும். எக்சாம்பிளுக்கு சின்ன வயசுல சில வகை உணவு பதார்த்தங்களை அவங்க கஷ்டப்பட்டு செஞ்சுட்டாங்களேனு இவர் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லப்போக, பையனுக்கு ரொம்ப பிடிக்கும்னு அந்தக் காமடிய திரும்பத் திரும்பச் செய்வாங்க. இவர் மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிக்கிரத பாத்தா எனக்கு சிரிப்பா இருந்தாலும், இவர் ஏன் அம்மா கிட்ட நேர்மையா சொல்ல மாட்டேங்கிராருன்னு கோவம் வரும்.இதுல எதுக்கு கோழைத்தனம்னு தோணும்.

எனக்கு ஜென்ரலா பூன்னா பிடிக்கும், அவ்ளவுதான். இங்க வந்தப்புறம் பூன்னா ரொம்ப ஆசை வந்துடுச்சி(ஏன்னா இங்கதான சான்ஸ் கிடைக்காது) அதனால நாங்க provence சைடுல டூர் போனா அங்க கிடைக்கிற நித்ய மல்லி, மல்லிப்பூ இதையெல்லாம் கட்டி வச்சிப்பேன், அப்புறம் தோட்டத்துல இருந்து அழகழகான ரோஜா பூக்களை பறிச்சு வச்சிப்பேன். இதையெல்லாம் மிகவும் இரசிக்கும் என் மாமியார் என்ன நெனச்சிட்டாங்கன்னா, நாம இந்தியால எல்லாப்பூவையும் தலையில வச்சிப்போம்னு நெனைச்சிட்டாங்க.

ஒகே ஒகே, புரியுது, என்ன இவ சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்காளேன்னு நெனைக்குறது புரியுது, வெயிட் ஏ நிமிட் பார் ஏ மினிட். நம்ம டைரக்டோரியல் டச் வருது.

இதிலே இருந்து அவங்க என் டிரஸ் கலருக்கு மேட்சா எல்லாப்பூவையும் பறிச்சு எனக்கு குடுப்பாங்க. இதுல வேடிக்கை என்னன்னா சில சமயம் செம்பருத்தி பூக்கள் இருக்கும்.அதையும் மிக மிக ஆசையோட பறிச்சு என் தலையில வெச்சு விடுவாங்க. அப்பா நான் பாக்க அசல் நவராத்திரி படத்துல வர்ற லூசு மாதிரியே இருப்பேன்(மத்த நேரத்துல எப்படின்னு கேக்க கூடாது). ஆனாலும் நான் அதை நாள் முழுதும் சந்தோஷமா வெச்சிட்டிருப்பேன்(தூக்கி போட சந்தர்ப்பம் கிடைத்தாலும்). அந்த சமயத்தில்தான் புரிஞ்சிச்சி ஏன் என் கணவர் அப்படி இருக்காருன்னு.

Indiana Jones

நேத்து இராத்திரி நம்ம பதிவ போட்டுட்டு போய் படுக்கிறேன், பத்து நிமிஷத்துக்கெல்லாம் போன் வருது, யார்னு பாத்தா நம்ம ஹாரிசன் போர்ட், என்னங்க என்னாச்சின்னு கேட்டா "ஏம்மா என் வாழ்கயோட விளையாடற, இங்க கேன்ஸ் பெஸ்டிவல்ல என் படத்தோட ஒபெநிங்குல இருந்து எல்லாரும் திடீர்னு எழுந்துப் போயிட்டாங்க, கேட்டா உன் ப்லோக நிம்மதியா படிக்கணுமாம், எனக்கு வாழ்க்கை குடும்மானு" ஒரே அழுகை..க்க்க்க்க்க்க்க்க்க்க்க். ஸ்டாப் இட்! துப்பினது போதும், ஆமாம் ஒத்துக்கிறேன், இராத்திரிலேருந்து என்குடும்பம், பிரெண்ட்ஸ் எல்லார்க்கும் என் ப்லோக பத்தி மெயில் அனுப்பிட்டு, ரெண்டு பேராவது வந்து பார்க்கராங்களானு வெயிட் பண்ணிட்டு, அப்புறம் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து செக் பண்ணி........... ஹும்ம்ம்ம்

சொந்தக் கதை(1)

வணக்கம்,

நான் முதலில் எழுதப்போறது எங்கப்பவை பத்தி. அவர் ஒரு தமிழாசிரியர். மிகத்தீவிரமான தி.மு.க காரர்( எங்க வீட்டில் எல்லோரும் அப்டியே தான், even பிரெஞ்சுக்காரரான என் கணவரையே கலைஞரோட பேன் ஆ ஆக்கிட்டோம்னா பார்த்துக்கோங்க) அந்தக்கால பி.யூ.சி இல் மிக நல்ல மார்க் எடுத்தும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தீவிர அதரவாளரா இருந்ததால தமிழ் எடுத்துப் படித்தார். இவர்கள் பர்மாவில் இருந்து இரண்டாம் உலகப் போர் அப்போ இந்தியா வந்தவங்க. மிக வசதியா இருந்தாங்களாம், அங்கேருந்து வந்த எல்லா சொந்தக்கரங்களையும் இவங்கதான் பராமரிச்சாங்களாம். ஆனா தாத்தா திடீர்னு மாரடைப்புல இறந்துட்டார், அப்போ எங்கத்தை மூன்றாம் வருட மருத்துவம் படிச்சிட்டிருதாங்களாம், மத்தவங்களும் இவங்களை விட சின்னவங்க தான், தாத்தா எல்லாருக்கும் நல்லவரா இருந்தாலும் பாட்டிய மட்டும் பயங்கரமா கொடுமை படுத்துவாராம், அதனால பாட்டிக்கு சின்ன வயசுலேயே பி.பி சுகர் எல்லாம் இருந்துதாம், ஆனா அவங்க பட்ட கஷ்டம் பார்த்து தாத்தா இறந்தவுடன் சிலர் அத்தை மீதிப் படிப்பைத் தொடர உதவியுள்ளனர், பின்னர் அத்தை தனக்கு திருமணமான பின்னும் இவர்கள் தலையெடுக்கும் வரை உதவியுள்ளார், அதனால் என் தந்தைக்கு அவர் குடும்பத்தின் மேல் பயங்கர பக்தி, இதில் பிரச்சினை என்னவென்றால் அவர் வீட்டில் அனைவரும் வாய்க்கொழுப்பில் வல்லவர்கள்


எனக்கு ஒரு சந்தேகம், சிலப்பேர் நேருக்கு நேராவே மிக மோசமா ஒருத்தரோட உணர்வுகளை கிண்டல் கேலி என்ற போர்வையில் காயப்படுத்திவிட்டு, அதற்கு பாதிக்கபட்டவர் பதிலடி தந்தால் குய்யோ முய்யோவென அமர்க்களம் செய்வது, இல்லை என்றால் "உன்னால் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்பது". அவர்களைச்சேர்ந்தவர்களும் "அவன்/அவள் மனசுலே ஒன்னுமே கிடையாது, இப்டி பேசறது அவன்/அவள் குணம் என்று உனக்குத் தெரியாதா" என்பது. இதையே நீங்க ஏன் பின்பற்ற கூடாதுன்னு கேட்டா சம்பந்தம் இல்லாம பேசருது, இது அப்டியே எங்க வீட்ல நடக்கும், எங்கம்மாவையும் எங்களையும் அவங்க வீட்டு ஆட்கள் என்ன சொன்னாலும் அவரும் அவர்களை திருத்தமாட்டார், நாங்களும் ஒண்ணுமே சொல்லக் கூடாது, பார்பதற்கு சிறிய பிரச்சினையாக இருந்தாலும், இதனால் பலப் பிரச்சனைகள் எழுந்தன, இக்குணத்தின் காரணமாக இன்று வரை நாங்கள் அவரிடம் மனம் விட்டு பேச முடிவதில்லை.


இதைத் தவிர ஒரு சின்ன குறை கூட அவரிடம் இல்லை, எங்கம்மா கல்யாணமாகி வரும்போது வெறும் பி.ஏ பி.எட் தான், ஆனா அவங்களை மேல டபுள் எம்.ஏ எம்.எட் படிக்க வச்சார், இத்தனைக்கும் எங்கம்மா பிரைவேட் ஸ்கூல்ல தான் வேலை பார்த்தாங்க, இதனால அவருக்கு எந்த பொருளாதார முன்னேற்றமும் கெடயாது, என்னையும் எங்க அக்காவையும் கூட எவ்ளோ வேணா படிக்க சொன்னார். நாங்க ரெண்டு பேரும் எது கேட்டாலும் உடனே கிடைக்கும், இன்னி வரைக்கும் எனக்கு எந்த பொருள் மேலையும் அதீத ஆசை வந்ததில்லை, காரணம் என்னுடைய ஞாயமான அனைத்து ஆசைகளையும் நிறைவேத்தி வைத்திருக்கிறார், தேவயில்லாத ஆசைஎன்றால் அதை மிக அழகாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பார், இன்று வரை எனக்கு தேவைகள் பற்றிய ஒரு தெளிவு உண்டென்றால் அது அவரால் தான்.

அதேப் போல நாங்கள் என்ன தவறு செய்தாலும் என் தாயும் சரி தந்தையும் சரி அப்பொழுது கோபிக்கவே மாட்டார்கள், பின்னர் அந்த பிரச்சனை முடிந்த பின் அதனை மிக அழகாக சுட்டிக்காட்டுவார்கள்.

இன்னொரு விஷயம், அது கார் ஆகா இருந்தாலும், கிரையிண்டராக இருந்தாலும், செருப்பு தைப்பதாக இருந்தாலும், அதை அவ்ளோ நேர்த்தியாக சரி செய்வார், இதன் காரணமாகவே எனக்கு இந்த திறமை இல்லாத ஆண்களை கண்டால் கொஞ்சமும் பிடிக்காது. என் கணவர் என்னை கவர்ந்ததில் இதற்கு முக்கியப்பங்குண்டு

இப்படி நான் பார்த்து பழகிய முதல் ரியல் லைப் ஹீரோ எங்கப்பாதான்

Wednesday, 14 May, 2008

முதல் முதலாக

எல்லாருக்கும் வணக்கம்பா ,
எனக்கு ஒன்னும் தல காலே புரியலே, நானும் ப்ளோக் போட ஆரம்பிச்சிட்டேன், ஓகே பிரதேர்ஸ் அண்டு சிச்டேர்ஸ் ஒரே ஜாலியாகீது, நம்பள பத்தி சொல்றதுக்கு பெர்சா ஒன்னும் லேதுப்பா, நான் ஒரு வெட்டி ஆபிசர், காலைலேந்து என்னோட ரங்கமணி வர்றவரைக்கும் எல்லா ப்லாக் படிக்கிறதுதான் வேலை, எல்லோரும் அதரவு கொடுக்க வேண்டி கேட்டுக்கறேன்