Tuesday 25 November, 2008

நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)

தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)

இன்னைக்கு முடிஞ்சது என் பணி.

வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)

Monday 24 November, 2008

என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)

வாரணம் ஆயிரம் நானும் பார்த்துட்டேனே:):):) அதால நானும் விமர்சன ஜோதில ஐக்கியாமாகுறேன். இங்கயே சொல்லிடறேன், எனக்கு சூர்யாஅவர்களையும் பிடிக்காது, கௌதம் சாரையும் பிடிக்காது. அதால பதிவு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும்.

எனக்கு படத்தோட மொதோ அஞ்சு நிமிஷம் பிடிச்சது. அது ஒரு அழகான செல்ப் பில்ட் அப்பா பத்தின படம்னு நெனக்க வெச்சுது. ஆனா அப்புறம் தான் எங்கப்பாவை பத்தி என்னை உணர்வுப்பூர்வமா சிந்திக்கவெக்கப்போற படம்னு புரிஞ்சது. எப்டின்னு கடசீல சொல்றேன்.

எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது. அடுத்தது படம் முழுக்கபல காட்சிகளில் cliché தூவிட்டா போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ, செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

அப்பாவை இவர்(பையன் சூர்யா) நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. திடீர்னு பாத்தா ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். இதுக்கு 'யாரடி நீ மோகினி'ல தனுஷ் செஞ்ச ஒரே நைட் கோடிங் அளப்பரயே பரவாயில்ல. போதைக்கு அடிமயானப்புறம் பாடற அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.

என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே. இன்னும் சொல்லப்போனா, இவங்க புரிதலை நமக்குப் புரியவெக்கிறேன் பேர்விழின்னு, தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா, அவர் ஹிந்திப்பாட்டை ரசிக்கிறது, பீட்டர் புத்தகம் படிக்கிறது, மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.

சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம், இப்டி படம் முழுக்க அதை ஒருவித அவஸ்தையோட சொல்லிருக்கவேணாம். சூர்யா கெட்டப் சேஞ் ஓகே, ஆனா அவங்க ரிலீஸ் பண்ண புகைப்படங்கள்ல இருந்த பிரம்மிப்பு படம் பார்த்தப்போ ஏற்படலை:(:(:(

சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது. திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.

'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.

பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.

கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல. என் கிளாஸ்மேட் ஒரு பையன், நேவில சேர எக்கச்சக்கமா உழைச்சான், அந்த எக்சாம்கு அவ்ளோ படிச்சான். இதுல சர்வ சாதரணமா எல்லாம் முடிஞ்சிடுது. பிளஸ், வயசு, கணக்குல கொஞ்சம் இடிக்குது. சரி, நான் ஜாஸ்தி சொல்லமுடியாது, ஏன்னா அது ஒரு பெரிய துறை, எனக்கு நெறைய விஷயம் தெரியாம இருக்கும்.

நானெல்லாம் நாலு மணிநேர படம்னாக் கூட ஒழுங்கா இருந்தா பாப்பேன்(வேலையா வெட்டியா:):):)) .அப்டிப்பட்ட என்னயே அரைமணிநேரத்துல கடிகாரம் பாக்க வெச்சுட்டாங்க.

பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?

பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.

முதல்ல சொன்ன விஷயம், இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.

Tuesday 18 November, 2008

உண்மைத்தமிழன் அவர்களுக்கு போட்டியாக...

என்னை இந்தத் தொடருக்கு அழைத்த கார்க்கி அவர்களுக்கு ரொம்ப நன்றி.
எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது. காரணம் அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே, அப்போதானே அடுத்த புக்கை எடுக்க முடியும். அதேப்போல புது புத்தகங்களும் பிடிக்காது. காசு ஒரு காரணம்னாலும், இது 'ஆகி வந்த புக்குங்கர' பீல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்பென்சர் எதிர்லையும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல இறங்கி சூளை சைட்ல போனீங்கன்னா இருக்கிற பழைய புத்தகக்கடக்காரங்கக்கிட்டயும்(இவங்கக் கிட்ட எல்லா புது புக்சும் இருக்கும்) என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்(இத வெச்சு தாராளமா நக்கல் பண்ணுங்கப்பா:):):)).

புத்தகம் வாசிக்கும் பழக்கம்ங்கறது எனக்கு ரொம்பச் சின்ன வயசுல இருந்தே உண்டு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் என்னுடன் விளையாடக் கூடிய வயதில் யாருமில்லையாதலால், இந்தப் பழக்கம் வந்துச்சி. எங்க வீட்டை வீடுன்னு சொல்றதவிட சிறிய சமையலறையும் படுக்கைகளும் கூடிய நூலகம்னு சொல்லலாம். எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).

எங்கப்பா தமிழாசிரியர்ங்கரதாலயும், திமுக அனுதாபிங்கரதாலையும் சின்ன வயசுல முக்காவாசி தமிழில்தான் இருக்கும். அப்புறம் எங்கக்கா ரொம்ப நல்ல மாணவிங்கரதால அப்போ இருந்த ஸ்கூல் ஹெச்எம் சிஸ்டர் அவங்களே நெறைய நல்ல ஆங்கில புத்தகங்களை தருவாங்க. சோ, எனக்கு இவங்க ரெண்டு பேரோட புத்தகங்கள் பிரச்சினையே இல்லாமக் கிடைச்சிடும். அப்புறம் எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பல ஆங்கில மாத இதழ்களுக்கு சந்தாதாரரா இருந்தார். பல புத்தகங்கள் வந்தாலும் அவற்றில் என்னை ரொம்ப கவர்ந்தது, சோவியத் யூனியன் மேகசின் ஒன்று. அதில் அந்தந்த மாதத்தில் உலகத்தில் நடந்த முக்கியமான சமூக, அறிவியல் நிகழ்வுகள் படங்களோட வரும். அதை நான் தனியா சேமிச்சு வெச்சு, எங்க குடும்ப நண்பர் ஒருத்தங்களோட தீசிஸ்கு கொடுத்திட்டேன்:):):) முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன். அதெல்லாம் இப்போக் கூட என்கிட்டே இருக்கு.

நான் நாளிதழ்கள் படிக்கிறதை கணக்குல சேர்த்துக்கலை, மத்தபடி ஆனந்த விகடன், குமுதம், முத்தாரம் இதெல்லாம் ஒன்னாங்கிலாசுலே இருந்தே படிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல பிஞ்சுல பழுத்த குரங்குக் குழந்தையா இருந்ததுக்கு இதுவும் காரணும்னு நினைக்கிறேன். நாலாங்கிலாசு போனப்புறம் எல்லா தொடர்கதைகளையும் படிப்பேன். நானும் எங்கக்காவும் எப்டின்னா காலையில் எழுந்ததில் இருந்து டான்ஸ் கிளாசு, பாட்டு, வீணை(எங்கக்கா மட்டும்), வயலின், ஹிந்தி, டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேன்ட்(எங்கக்கா மட்டும்) இப்டி கால்ல ரெக்கயக் கட்டிக்கிட்டு திரிவோம், அப்டி இருந்தப்போ இந்தப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்தான் எங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு.எனக்கு தமிழில் இப்படி எழுத்தாளர்களின் அனுபவங்கள், சுயசரிதைகள், கட்டுரைகள் இவற்றை படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகளும் பிடிக்கும். ஆனா நாவல்கள் படிக்கவே பிடிக்காது. அதே ஆங்கிலத்தில் சுயசரிதைகள் மற்றும் நாவல்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகள், கட்டுரைகள் இதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கப் பிடிக்காது. காரணம் தெரியல.

நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான். இன்னிவரைக்கும் என்னோட பேவரிட்னா இதுதான். திமுக குடும்பங்கரதால திராவிட எழுத்துக்கள் குவிஞ்சிருக்கும். பெரியாரோட எழுத்துக்களை படிச்சப்புறம்தான் பலத்தில் எனக்குக் கொஞ்சமாவது என்ன எதுன்னு விடைகள் கிடைச்சுது. இதற்கு முன்னர் அண்ணாவோட கட்டுரைகள் படிச்சிருக்கேன். கதைகள் சிலதும் படிச்சிருக்கேன். குமரிக்கோட்டம் படிச்சிட்டு என்னடாது அண்ணா அவர்கள் இப்டி ஒரு மேட்டர் கதை எழுதிருக்காரேன்னு நெனச்சேன். அதை எப்படி பார்க்கணும், புரிஞ்சுக்கணும்னு சொல்லிக்கொடுத்தது பின்னர் படிச்ச பெரியாரின் கட்டுரைகளும், எழுத்துக்களும்தான்.

எங்க வீட்ல இல்லாத இலக்கிய இலக்கண புத்தகங்களே இல்லை.எனக்கு கவிதைகள் ஒன்னுமே புரியாது, அதனால் பிடிக்காது. ஆனா எங்க அப்பா ஒரு கவிஞர்:):):) எங்கக்காவும் சூப்பரா கவிதை எழுதுவாங்க, ரசிப்பாங்க.
சோ அவர்களோட பல நாடகங்களின் புத்தக வடிவம் படிச்சிருக்கேன். வேலன் சார் சொன்னா மாதிரி ஒரு காலத்தில் சூப்பரா இருந்தது, இப்போ சப்பையா தெரியுங்கரத்துக்கு இவர் ஒரு வாழும் உதாரணம். கல்கி அவர்கள் காலத்து கட்டுரைகள் கூட எங்க பாட்டி(அப்பாவோட அம்மா) சேர்த்துவெச்சிருந்தது எங்க வீட்ல இருக்கு. அவரோட கட்டுரைகள் கல்கில வருதே, அதுல பலதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். இது மட்டுமில்லாம ஐம்பதுகளில் இருந்து எண்பதுகளின் இறுதிவரை வந்த வாரயிதழ்களிலிருந்து பலக் கட்டுரைகள், கதைகள், திரைப்பட விமர்சனங்கள் எல்லாத்தையும் எங்கப்பா சேர்த்து வெச்சிருக்கார். நான் எல்லாத்தையும் ஜாலியா படிப்பேன்.

இப்போ வலையில் ஜெயமோகன் அவர்களோட அனைத்து படைப்புகளையும் படிப்பேன். அனைத்திலும் இவர் வல்லவர் எனினும், இவரோட பகடி, நகைச்சுவை வகை எழுத்துக்களுக்கு நான் அடிமை:):):) சுஜாதா அவர்களோட பல்சுவை கட்டுரைகள் பிடிக்கும். ஆனா சிலசமயம், தொடர்ந்து வித்தியாசம் இல்லாம இவரோட கட்டுரைகள் வரும்போது போரடிக்கும். பயணக் குறிப்புகளையும் அது சார்ந்த விஷயங்களையும் இப்டி சுவாரசியப் படுத்த முடியுமா என வியக்க வைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் எழுத்துக்களின் கலெக்ஷன் என்னிடம் உண்டு. சுந்தரராமசாமி அவர்களோட படைப்புகள் படிச்சதில்லை, ஆனா அவரோட கடிதங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுவே ஒரு தனி அனுபவம். எங்கக்காவோட கடிதங்களுக்கு அவர் பல சமயம் பதில் எழுதி அதனால் கிடைத்த அறிய அனுபவம்.

கலைஞரோட சட்டமன்ற அனுபவங்களின் தொகுப்பகளை கொண்ட புத்தகங்களை அவர் எங்கக்காவுக்கு பரிசா கொடுத்தார். அவர் கையெழுத்தோட இருக்கிற அந்தப் புத்தகம் என்னோட பேவரிட். இவரோட கடிதங்கள் அருமையோ அருமையா இருக்கும். அதேப்போல ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றி சோனியா அவர்கள் எழுதின புத்தகத்தையும் அவரோட கடிதத்தோடவும் கையெழுத்தோடவும் அனுப்பி வைத்தார்கள். அது தெரியாம இவ எனக்கு வரலைன்னு சொல்லவும், இன்னொரு புத்தகமும் அனுப்பினார்கள். அப்போல்லாம் எங்கக்கா காலேஜ் லீவில் தான் வருடம் முழுதும் படித்த எழுத்துக்களைப்பற்றி, அதன் ஆசிரியருக்கும் அதில் கூறப்பட்டவர்கள் இப்பொழுது இருந்தால் அவர்களுக்கும் தான் உணர்ந்ததை பற்றி கடிதங்களையும் விமர்சினங்களையும் அனுப்புவார். அதில் முக்காவாசிப்பேர் தன் கைப்பட பதில் எழுதுவார்கள். அப்படித்தான் பல விலைமதிப்பற்ற கடிதங்கள், புத்தகங்கள் எங்கள் வீட்டில் அப்பொழுது சேர்ந்தது. எழுத்துக்கள் அவர்களின் எண்ணங்களை பிரதிபலித்தாலும் கடிதங்கள் அதுவும் அழகான நீண்ட கடிதங்கள் அவர்களின் வேறொரு சுவாரசியமான உலகை நமக்கு திறக்கும்ங்கர்த்து என்னோட அனுபவம்.


archie பிடிச்சாலும் மத்த படக்கதை வடிவங்கள் அதனளவு கவர்ந்ததில்லை. லிட்டில் ரெட் ரைடிங் ஹுட்ல இருந்து சிந்த்பாத் தி சைலர் வரை எல்லாமே புத்தக வடிவில்தான் படிச்சிருக்கேன். அப்புறம் ஆறாங்கிலாசுலருந்து ஸ்டார் டஸ்ட் சினி பிளிஸ் ஆரம்பிச்சு படிக்காத சினிமா இதழ்களே கிடையாது.அப்பால எட்டாங்கிளாசு டீனேஜ் வயசு,கேக்கனுமா, பெண்களின் சரோஜாதேவியாகிய mills & boon, harlequinல ஆரம்பிச்சு எல்லாத்தையும் படிப்போம். அப்புறம் எல்லா நடிகைங்களும் படிக்கிறாங்களேன்னு சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் புக்ஸை படிக்க ஆரம்பிச்சேன். இவங்களோட பிளஸ் என்னன்னா, நாவலோட தீம் சப்பையா இருந்தாலும் முக்கிய மேட்டர் நல்லா இருக்கும். விடாது கருப்பு ஆரம்பிச்சவுடனே ஸ்பிலிட் பர்சனாலிட்டின்னு கண்டுபிடிச்சதுக்கு சிட்னி ஷெல்டன் தான் காரணம்:):):)

அப்புறம் கல்யாணக் கனவு ஆரம்பிக்கிற சீசன்ல டேனியல் ஸ்டீல் நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன். முதல் நாவல் ஓகே, அப்புறம் நான் இதை படிக்கிறதுக்கு டிவி சீரியலே பார்ப்பேனேன்னு தோணிடுச்சி. அப்புறம்தான் நான் john grisham, michael connelley மாதிரியானவர்களின் நாவல்கள் படிக்கும் பழக்கம் ஆரம்பிச்சுது. இவங்கெல்லாம் மினிமம் கேரண்டி ஆளுங்கல்லையா:):):)

இப்போ காலேஜ் வந்தாச்சு. இப்போதான் என்னோட நண்பர்களான பழைய புத்தகக் கடைக்காரங்க அறிமுகமானாங்க. என் ரங்கமணி சில சமயம் இவங்கக்கிட்ட படிப்பு சம்பந்தமா சிலப் பொக்கிஷம் இருக்குன்னு அள்ளிக்கிட்டுப் போவார். ஆனா நான் அந்த லூசுத்தனமெல்லாம் செய்யாம, மத்ததைத்தான் வாங்குவேன். olivia goldsmithல இருந்து பல ரொமாண்டிக் நாவல்கள், mad collections, பல பகடி வகை கார்ட்டூன் தொகுப்புகள், ஆர்.கே.நாராயணனோட பெரும்பான்மையான புத்தகங்கள், ஸ்ரீதர் சார்ல இருந்து பலப் பேரோட சுயசரிதைகள், கண்ணதாசன் அவர்களோட மனவாசம் படிச்சிருந்தாலும் வனவாசம் படிக்காததால ஒரு நிறைவே இல்ல, அதெல்லாம் இங்க வாங்கினேன். அவரோட கேள்வி பதில்கள் புக் ரொம்பப் பிடிக்கும். பாரதிதாசன் அவர்களோட நிஜஇல்லற வாழ்க்கையை பத்தின ஒரு சுவாரசியமான நூல் இங்கக் கிடைச்சுது, எங்கப்பாவே அசந்துட்டார்.

நான் காலேஜ் படிச்சப்போ the da vinci code படிக்கிறது செம ஹாட்டா இருந்துச்சி. ஆனா செம போங்கா எனக்கு தோணினதால பாதியிலயே விட்டுட்டேன். என் ரங்கமணி இத வெச்சு நிஜமாவே இருக்கிற எல்லாக் கதைகளையும் சூப்பரா சொல்வார், அதால் இதவிட இவரோடது நிஜமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

இப்போ என்னோட ஆதர்ச எழுத்தாளர்கள் Madeleine Wickham/Sophie Kinsella, nick hornbyமற்றும் marian keyes. இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger, candace bushnell, jennifer weiner,Cecily Von Ziegesar,helen fielding இப்டி நெறயப் பேர். இவங்கெல்லாம் பொதுவா ரொம்ப நல்லா விமர்சிக்கப் படுறதில்லை. ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏன்னா இவங்களோட கதையில் இருக்கிற ஒரு சாதாரண கேரெக்டர் மற்றும் அதிலுள்ள நிஜ வாழ்வில் சந்திக்கக்கூடிய மாந்தர்கள், அவர்களின் குணாதிசயங்கள், சூழ்நிலை, சின்ன சின்ன வித்தியாசங்கள், அவை கொண்டுபோகும் பாதைகள், மிக மிக பணக்காரத்தனமான சூழல், அவர்களின் எதிர்பாப்புகள், அவர்களின் சாதாரணங்களும் நியாயங்களும் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகின்றன இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். stephen clarke அவர்களோட merde novels சொன்னா மாதிரி வித்தியாசமான(அதாவது முக்காவாசி உண்மை, கால்வாசி உடான்ஸ்) பிரெஞ்சு வாழ்க்கை முறையை ஜனரஞ்சகமா சொல்றது கொஞ்சம் சுலபமா நமக்கு சில வாழ்வியலை புரியவைக்கும்னு எனக்குத் தோணும்.

இந்திய வேருடைய ஆங்கில எழுத்தாளர்கள் ஒரு தனி அழகான அணியைச் சேர்ந்தவர்கள். ரொம்ப ஜாஸ்தி பரிச்சியமில்லைன்னாலும் இவர்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது chitra banerjee divakaruni, preethi nair, anita desai(kiran desai அம்மா), anita nair, chetan bhagat இவங்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும். இவங்களோட முக்காவாசி நூல்களை படிச்சிருக்கேன். சிலது செக்கண்ட்ஸ்ல வர்றவரைக்கும் காத்திருக்கணும்:):):)

எப்பவுமே எனக்கு சரித்திர பின்னணிக் கொண்ட கதை, புதினங்களை விட, பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் மற்றும் வாய்வழி தகவல்கள் ரொம்பப்பிடிக்கும். இந்தக் கலெக்ஷன்ஸ் ஒரு பொக்கிஷம் மாதிரி என் ரங்கமணி வெச்சிருப்பார்.இப்போ நெட்லயும் கெடைக்காததே இல்லையே. science fiction எப்போவாவது படிப்பேன். பயணக் கட்டுரைகள் சிலப் பேரோடது நல்லா இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் புவியியல் பாடம் படிக்கிற மாதிரி ஒரு பீல் ஏற்படுத்திடுவாங்க. தன்னோட பார்வையில் அழகான நகைச்சுவையோட இல்லைன்னா எளிமையான வகையில் எழுதினவைகள் ரொம்பப் பிடிக்கும்.

என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும். நமக்கு அந்த புக்கில் சொல்ற வெறியில்லையே, அவ்ளோ துணிவு இல்லையே, அசாதாரண சூழ்நிலைகள் இல்லையே, எல்லாம் நார்மலா இருக்கே, இப்டி வித விதமா தோணி ஒழுங்கா இருக்கிறவன் கூட முன்னேறாமப் போக வாய்ப்புண்டுன்னு தோணும்.

தெனாலிராமன், பீர்பால், முல்லா இப்படிப்பட்ட அத்துணை அப்பாவி அறிவுஜீவி கதைகளும் ரொம்பப்பிடிக்கும்.பக்திக்கதைகள், கட்டுரைகள் எனக்கு போரடிக்கும். பிலசாபிக்கள் நாவல்கள், நூல்கள் எல்லாம் எனக்கு பேத்தலா தெரியும். அன்றாட வாழ்விலிருந்தும், சாதாரண நூல்களிலிருந்தும் புரிஞ்சுக்காததயா இதுல சொல்லிடப் போறாங்கன்னு தோணும். பிளஸ் சிலப்பேர் இத படிக்கிற ஒரே காரணத்தால ரொம்ப அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)

இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்.

Wednesday 5 November, 2008

YES V CAN:):):)

டிஸ்கி: நான் இதனை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சில் எழுதவில்லை. என் மனவுணர்ச்சிகளின் அடிப்படையிலேயே எழுதுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே, திருத்திக்கொள்கிறேன்:):):)

நான் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், மத நம்பிக்கை இல்லாதவளாக இருப்பினும், இதனையெல்லாம் என் மூளையும் மனதும் உணரும் சந்தர்ப்பம் எனக்கு என் திருமண ஏற்பாடுகள் செய்யும்போதுதான் கிடைத்தது. என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும், கீழே குறிப்பிடும் விஷயம் எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் அளித்தது. எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிற தகவல் தெரிஞ்சு என் நெருங்கிய சொந்தக்காரர் தொலைப்பேசினார். அவர்தான் எங்க நெருங்கிய சொந்தங்களில் மிகப் பெரிய கோடீசுவரர், மிக நல்லப் பதவியில் இருந்தவர்(ஆட்சியர் பதவிக்கு இணையான பதவி). பதவி அவரை பண்படுத்தலைன்னாலும், அகம்பாவம் உண்டு. தொடர்ச்சியாக கேணத்தனமா கேள்விக்கேட்டுக்கிட்டு வந்தவர், கடைசியா கேட்ட கேள்விதான் அவ்ளோ மோசமானது. அது என்னன்னா, 'அவர் ஒரு கறுப்பர்(இவ்விடத்தில் அவர் உபயோகப்படுத்தியது ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தை) இல்லையே' எனக் கேட்டு என்னமோ இந்த நூற்றாண்டின் புத்திசாலித்தனமானக் கேள்வியக் கேட்டுட்டா மாதிரி சிரிச்சார்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை. நளதமயந்தியில் வரும் மாதவன் மாதிரியான சிந்தனை, நன்றாகப் படித்த நல்ல பொதுஅறிவுச்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இருப்பதின் காரணம் எனக்குப் புரியவில்லை.

இன்று ஒபாமா அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் (என் பார்வையில்) மெதுவாக மறுபடியும் தலைத்தூக்க ஆரம்பித்திருந்த ஒரு சமூகக் கேடு கிள்ளி எறியப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எழுபதுகளின் இறுதியிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கையூட்டும் சமூக மாற்றம், இரண்டாயிரத்து ஒன்றில் இருந்து வீழ்ச்சிப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இது என்ன ஒரு தேசத்து அதிபர் தேர்தல் அனைத்தையும் மாற்றிவிடுமா என்றால், நாம் ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும், அமெரிக்காவின் நிலைப்பாடையே பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அங்கு கறுப்பினத்தவரை ஆதரிப்பதுதான் கூல் ஆட்டிட்யூடாக கருத ஆரம்பித்த போதுதான், ஐரோப்ப்பாவிலும் அது பரவியது. பின்னர் அழகாக மலர ஆரம்பித்தது. அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.

சரி, இது மட்டுமா? குடியரசுக்கட்சியின் கொள்கைகளை பார்த்தால், அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கட்சியினை சார்ந்ததா என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கின்றன. gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். இங்கு கூறப்பட்டவைகள் சொற்பமெனினும் கிட்டத்தட்ட அனைத்துமே சோகக் காமடி வகையைச் சேர்ந்தவைகளாகவே இருந்தன.

வயதான கௌபாய் ஆக மெக்கெயினை காண்பித்தார்கள் என்றால், துணை ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் அவர்களின் ஆணியப்போக்கு என்னை எரிச்சல் படுத்தியது. சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட தகுதியே இல்லாத ஒருவர் மட்டும்தான் பெண்களின் சார்பாகக் கிடைத்த ஒரே வேட்பாளரா?

இந்தத் தேர்தலில் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு, ஒபாமா முழுமையாகக் கருப்பினத்தைச் சேர்ந்தவரில்லை, அவர் ஏன் தன்னை கிருஸ்துவராக வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எல்லாம், கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், இம்மாதிரி கலப்புத் திருமணக் குழந்தைகள் மேலும் இன்னல்களை அனுபவிப்பது நிதர்சனம். அதேப்போல இரண்டாவதிற்கும் இன்றைய அமெரிக்காவின் மோசமான நிலையையேக் காட்டுகிறது. மதச் சார்பின்மை எந்தழகில் இப்பொழுது உள்ளது என்பதின் வெளிப்பாடுதான் அது. நிலைமைமேலும் மோசமாகாமல் இருப்பதற்காகவாவது இந்த வெற்றி முக்கியமானது.

தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.

திருமதி மிஷல் ஒபாமா பல்வேறு வகைகளிலும் கவருகிறார். முதலில் அவருடைய நோ நான்சென்ஸ் லுக், தன்னை பெண்குலத்தின் பொன்விளக்கு ரேஞ்சில் வெளிக்காட்டிக்கொள்ளாத்தன்மை. பொதுவாக கணவர் ஜனாதிபதியாகத் தேர்வானவுடன் மேடையில், உலக அழகிப்பட்டம் வென்றவுடன் அந்த அழகிகள் செய்யும் டிராமாவயே இவர்களும் செய்வதை பார்த்து எரிச்சல்வரும். ஆனால் மிஷல் ஒபாமா இதனை கையாண்டவிதம் அவ்ளோ நேர்த்தி. பிஆர் கேர்ள் போல் தன்னை பிரசன்ட் பண்ணாமல் அவ்ளோ கம்பீரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.

மீடியாவும், கறுப்பின மக்களும் இன்னபிற சிறுபான்மையினரும், அவர்களின் நிதியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியத் தூண்கள் எனினும் இந்தத் தேர்தலில் மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களின் இந்த இமாலய ஆதரவில்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனக் கூறமுடியவில்லை.

மிக மிக அசாதாரணமான சூழ்நிலையில் ஜனாதிபதியாகி உள்ள ஒபாமா, சந்திக்க வேண்டிய சவால்கள் எக்கச்சக்கம். இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். ஆதலால் அனைவரும் அவர் வெற்றியடைய மனதார வாழ்த்துவோம்:):):)