Monday 15 December 2008

செருப்பும் தீவிரவாதமும்

இந்தத் தொடருக்கு என்னை அழைத்த முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே, திருத்தி விடுகிறேன்.


தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை. காரணங்கள் எப்பொழுதும் மக்களின் மனவோட்டத்தை பொறுத்தது. குஜராத், பம்பாய் என எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர். பல ஊடகங்களும் மிக வெற்றிகரமாகவே இந்தக் கூற்றுக்கு நெய் ஊற்றுகின்றன. உணர்ச்சிவசப்பட்டவனுடைய மூளையைச் சலவை செய்வதில் ஊடகங்களுக்கு இணையுண்டா? ஆதலால் இத்தகையக் காரணங்களைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை.


நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு. ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு, அப்படியும் முதல்வருக்கே டேக்கா கொடுத்த அரசு ஊழியர்களும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?


ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வெளிநாடு செல்ல தேவைப்படும் சிகப்பு முத்திரைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அரசு ஊழியர்கள் நொட்டாங்கை வேலை செய்ய வேண்டும். அது தேவைப்படுபவர் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அது பற்றியே சிந்தித்து ஊண் உறக்கமின்றி களப்பணி ஆற்ற வேண்டும். நடைமுறை கீழே:


தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) -> பதிவாளர் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.


மாதத்தில் பாதிநாள் சென்னையில் ஏதேனும் காரணம் சொல்லி தங்கிவிடும் மாவட்ட ஆட்சியர், அவர் சம்பந்தப்பட்ட கடிதப்போக்குவரத்துகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பிளஸ் கடிதங்களை டீல் செய்யும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து, அன்றே தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நெறுக்கும் இராணுவ அதிகாரி வரை அத்துணை விஷயங்களையும் அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர், உள்ளாட்சித் தேர்தலில் இருந்து, நில அளவுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிர்பந்தத்தயுடைய கிராம நிர்வாக அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு நிகரான பதவியில் உள்ளவர்கள். தரகரின்றி நெருங்கவே முடியாத கிட்டத்தட்ட கலவர பூமிபோன்ற தோற்றத்தை உடைய, காட்சிகளை பெற்ற பதிவாளர் அலுவலகங்கள். இவையனைத்தையும் தாண்டி செக்ரடேரியட்டில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியரின்(கடைநிலை ஊழியர் என்றால் பிளஸ்) உதவியின்றி சுறுசுறுப்பாக வேலை நடக்காத தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


எதற்கு இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடைமுறை? ஏன் இன்னமும் அனைத்து நிலைகளிலும் அத்துணை கடிதங்கள் எக்கச்சக்க ரெபரென்ஸ் எண்களோடு?
ஏன் எங்குமே வெளிப்படையான அணுகுமுறை இல்லை. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?
இதன் பலன்தான் என்ன? ஏன் எப்பொழுதுமே அனைத்து அரசு அலுவலகங்களிலும்மிக மோசமான அளவில் ஆள் பற்றாக்குறையுள்ளது? இந்தச் சூழலிலும் குறைந்தபட்ச மனசாட்சியோடு பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் செயல்பட்டாலும் எங்கும் எதிலும் அவப்பெயரே மிஞ்சுவதன் காரணமென்ன?இந்தப் பணிச்சூழலில் தானாக லஞ்சம் வரத்தானே செய்யும்? சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன? குமாஸ்தா டைப் வேலைகள் பெரியளவில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்காதுதான், ஆனால் இப்படி பத்தாள் வேலையை ஒருத்தர் மேலேயா சுமத்துவது?


அனைவரையும் விடுங்கள் கிராம நிர்வாக (அல்லது அதற்கு நிகரான)அலுவலகங்களிலே பணியாற்றுபவர்கள் என்ன தேவதூதர்களா அத்துணை காரியங்களை கவனிப்பதற்கு? இந்த சூழ்நிலையில் அவர்கள் வேறெப்படி செயல்படுவார்கள்? இதில் பல்வேறு விஷயங்களில் மாதத்திற்கொரு மாற்றம் என்று கடுப்பேத்துவது வேறு.


சமூக விரோதிகள் இந்த நடைமுறைகளால் லாபம்தானே அடைவார்கள்? தொல்லைகள் நிறைந்த இடங்களில் தொய்வுதானே ஏற்படும்? கடைசியில் யாரும் எதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
கமேண்டோக்கள் வருகையில் இருந்து, தரமான பாதுகாப்பு உடைகள் வரை அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டது பெரும்பான்மையாக நிர்வாக சீர்கேட்டினால்தானே?


ஒரே ராத்திரியில், குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் இறந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி, பெற்றோர்களே ஏழ்மையால் மற்றொரு பாரத்தை சுமக்க பயந்து ஒதுங்கி, ஒருவேளை பிழைத்தாலும் எட்டாக்கனியான மருத்துவத்தை அண்ணாந்து நோக்குவதையே தினப்படி வாழ்வாக ஏற்றுக்கொண்டு, இத்தனை ஏமாற்றங்களையும் சந்தித்த பின்னும் 'ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தால் பரவாயில்லை', என கெஞ்சும் மக்களை கொண்ட சமூகம் இது.
கிட்டத்தட்ட 'நாளை' எனும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ள இவர்களுக்கு குறைந்தபட்சம் இறப்புச் சான்றிதழ் பிரச்சினையின்றி கிடைக்க வேண்டும், சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக அதனைக் கூட திருடிச் செல்லும் மைத்துனர் அமையாதிருக்கவேண்டும்.


பனிரெண்டாம் தேதி கார்கரே அவர்களின் பிறந்தநாள், பதிமூன்றாம் தேதி நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுநாள். அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களின் எண்ணிக்கை:(:(:(


கார்கரே மனைவியால் ஒரு கோடி வேண்டாம் எனக் கூற முடியும், ஆனால் இறந்த கான்ஸ்டபில்களின் குடும்பத்தாரால் கூற முடியுமா? பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளா கிலோ என்ன விலை என்கின்றன நட்சத்திர விடுதிகள். கேட்டால், இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை, பாதுகாப்புத்துறையின் வேலை என்கின்றனர். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு அலுவலர்கள் இவர்களின் விடுதியை நாடுவதேன்? இங்கெல்லாம் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும் என்றுதானே? அண்டை நாட்டில் இதைவிட பயங்கர தாக்குதல் மற்றொரு விடுதியில் நடைபெற்ற போதே கொஞ்சமாவது உஷாராகியிருக்க வேண்டாமா? முன்பக்க வாசல் வழியாக வருவதற்கு அவர்கள் என்ன இவர்கள் வீட்டு மாப்பிள்ளையா? எப்படி தீவிரவாதிகளுக்கு அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட முடிந்தது என்ற கேள்விஎழும்போது, அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்படிஎன்றால் இங்கு இவர்களைப்போன்றவர்கள் இதே மாதிரி முஸ்தீபுகளுடன் தங்குவது சாதாரணம், என்ன இந்த முறை இங்கேயே தாக்குதல் நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது.


ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.