Monday, 9 March, 2009

கல்லூரிச்சாலை

கல்லூரிச் சாலைன்னு பேர் வெச்சாலும், எங்க கல்லூரிக்கு வர்ற சாலையை நான் சேர்ந்த ரெண்டாவது வருஷம்தான் போட்டாங்க.

ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.

இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.

நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.

காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.

நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.

'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.

இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.

சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.

இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.

இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?

அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.

நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.

இப்டியாப்பட்ட நிலமையில...............................