Showing posts with label கொசுவத்தி. Show all posts
Showing posts with label கொசுவத்தி. Show all posts

Thursday, 25 June 2009

கேசட் கால தல

இசையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும், ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் சிலப் பல 'தல'கள் இருந்தாலும், கேசட்களின் கடைசி கட்டத்தில் உலகை(அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு), கட்டிப்போட்டவர்.

எங்கக்கால்லாம் அப்டியே செம பேன்ஸ். அவங்க செட்டோடல்லாம் சுத்தறத்துக்காகவே இப்டி பல வித இசை கலைஞர்களின் இசையை கேக்க ஆரம்பிச்சு நமக்கும் புடுச்சுப் போச்சு.

நாங்கெல்லாம் பாப் ம்யூசிக்கை வெச்சு அபீஷியலா டார்ச்சர் கெளப்பக்கூடிய காலக்கட்டம் வரப்போ, அது சிடிக்களின் காலக்கட்டம். ஜாக்சன் கிரேஸ் பயங்கரமா கம்மியான காலக்கட்டம்.

எங்கக்காவ அப்போல்லாம் பயங்கரமா பழிவாங்கறதுண்டு, சின்ன சண்ட போட்டாக் கூட. ஒருத்தங்கள செம எரிச்சல் படுத்தனும்னா அவங்க சாப்பாடு, புக்ஸ் இல்லைன்னா இசை கலெக்ஷன்ல கை வெச்சா போதும்ங்கற உன்னத அறிவு அப்போவே வந்தாச்சு. அதால, அவங்க வாங்கி வெச்சிருக்க லேட்டஸ்ட் கேசட்சை எடுத்து, அதுல கண்றாவியான எதையாவது பாடி வெக்கிறது, இல்லை அம்மாப்பா கிட்ட போயிடும்னு பயமிருந்தா, அன்னைக்கு பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு டப்பா பாட்டை, எவ்ளோவுக்கெவ்வளவு கர்ண கொடூரமா கத்த முடியுமோ அப்டி கத்தி அந்த கேசட் முழுக்க ரெக்கார்ட் பண்ணி சைலண்டா வெச்சிடறது.

அதுக்கப்புறம் நடக்கறத சொல்லித்தான் தெரியனுமா என்ன? இப்டி பண்ணி ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு சொந்தக்கார பசங்க மத்தியிலும் புகழ் பரவி, எக்கச்சக்க நட்புகள் கெடச்சிது.

இந்த பாட்டு நான் மறக்கவே முடியாது. இது இருந்த கேசட்டை நான் 'யசோத நந்த கோபாலனே' பாடி அழிச்சிட்டு, சும்மா ஜம்முன்னு உக்காந்த ஞாபகம் வருது. அப்போ இந்த பாட்டிற்கு இருந்த பக்தர்களுக்குத் தெரியும் நான் செஞ்சது எவ்ளோ கொடூரம்னு.





அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!!!!!!!!

என்னுடைய இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளுக்கு உதவியது அவரின் இசை, அடுத்த பிறவியிலாவது அவருக்கும் ஒரு இனிமையான குழந்தைப் பருவம் அமைய வேண்டுமென ஆசை.

இவர் தோன்றுவதற்கு முன்பே ஆலமரமாகி உச்சபட்ச வெற்றியை ஈட்டிய ஆப்பிரிக்க அமெரிக்க பாப் ம்யூசிக் இசைக்கு, இவர் காலக்கட்டங்களில் ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கமே நடந்துச்சி, மாற்று இசைக் கலைஞர்களால், அப்டின்னு கேள்விப்பட்டிருக்கேன்(உண்மை இல்லைன்னா, சுட்டினால் திருத்திவிடுகிறேன்).
அனைத்தையும் தாண்டி இவர் வந்தது நல்ல விஷயம்.

என்னளவில் என்னுடைய ஆல்டைம் பேவரிட்ஸ் இவை மூன்றும்.





இது போனஸ்.

Monday, 11 May 2009

கல்லூரிச் சாலை - 2

டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க, 'சுயகழிவிரக்கம், இப்போ இதுலருந்து என்ன சொல்ல வர்றே' போன்ற எண்ணங்களே தலைதூக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்(அது வழக்கம்தானேன்னு இறுமாப்போட வர்றவங்க வாங்க). இப்டியாக ஒண்ணுமில்லாதத வெச்சி சீன் போட்டிருக்கும் என் கலைத்திறமையை நினைச்சு ஆச்சர்யமா ஆயாசமா இருந்தாலும், இதைப் படிச்சு முடிக்கும்போது உங்களோட 'இதுக்கு கோலங்களே பாத்திருப்பனே', மனநிலையை எண்ணி ஆனந்தப்படுகிறேன்.

அது இப்போ இருக்க மாதிரியே ஒரு கிரைசிஸ் டயம். ஒய்டுகே முடிஞ்சு, பாய்சன பாயாசமா நெனச்சு சப்டவங்கல்லாம் சர்வசாதாரணமா கதையல்ல நிஜமாகிட்டு இருந்தாங்க. நான் பிளஸ்டூ ஆரம்பிக்கும்போதே சனியன் சகடை கணக்கா எங்க டிபாட்மென்டை பாத்தவங்க நெறயப் பேர்(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்).

ரிசல்ட் வர்றதுக்கு முன்னயே நாங்களா முடிவு பண்ணி, பிரபு சம்பந்தி சேலத்துல வெச்சிருக்க காலேஜ்ல உத்தமமா சேர முடிவுப் பண்ணியாச்சு. அது ஏன் அந்த காலேஜுக்கு போனோம்னா, அந்த டைம்ல சேலம் சைட் காலேஜ்களில்தான் ஐந்து வருட எம்எஸ்சி கோர்ஸ் இருந்திச்சி (கல்யாண பத்திரிக்கைக்காக இல்லாட்டாலும், ஒரேடியா, சேந்திட்டா அஞ்சு வருஷம் பிரச்சினயில்லாமப் போகும்னு). ஆனா, ரிசல்ட் வந்தப்புறம் பாத்தா, தங்கபாலுவோட காலேஜ்லருந்து, வாரியார் சொந்தக்காரங்க கல்லூரி வரை, பொறியியல் கல்லூரிகள் பலது சீட் கொடுக்க போட்டி போடுற கலிகாலம். எங்க செட்லருந்து, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்னு அறிவிப்பு வேற. திமுககாரங்களா இருந்திட்டு, எதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தனும்னு யோசனையில் இருந்தேன். ஆனா, அதுக்கு இடம்கொடுக்காதளவுக்கு இவங்க நக்கலும் ஓவரு, அந்த காலேஜுக்கே இசிஇ தரமாட்டேன்னு அடம்.

இவங்கல்லாம் திடீர் மானஸ்தனுங்கன்னு புரிஞ்சு, சரி ஒரு மாஸ்டர் டிகிரியாவது, டிகிரி காப்பி கணக்கா சுளுவா கெடைக்குதேன்னு சேலம் போகலாம்னு இருந்தப்போ, இங்க எங்க காலேஜ் பத்தி அக்கா நண்பர்கள் மூலமா தெரிய வந்துச்சி, அதே எம்எஸ்சி சென்னைப் பல்கலைக்கழகம் கீழ புதுசா வருதுன்னு.

கிண்டில போய் பீசெல்லாம் கட்டிட்டு, அட்மிஷன் சம்பந்தமா எதையோ வாங்க காத்திருந்தா, எங்கண்ணனோட நண்பர் வந்து எதிர்ல காட்சிக் கொடுக்குறார். அவருதான் ஆடிட்டிங் பாக்குறேன்னு சொன்னதால, எங்கப்பா, எப்டிப்பா காலேஜ் ஒகேவான்னா, 'என்ன சார் இங்கயா சேத்தீங்க, அந்த காலேஜ் ஊருக்குள்ள ஒன்றர கிலோமீட்டர் நடந்தால்ல கண்ல தட்டுப்படும், அதுவும் ஒரு பஸ்சும் அங்க நிக்காது, காலேஜும் ஆரம்பிச்சு, நாலு வருஷம்தான் ஆகுது, இப்டி பண்ணிட்டீங்களேன்னு' கபீர் கெளப்புறார்.

ஏற்கனவே பிரபு சம்பந்தி, பொண்ணு கல்யாணத்துக்கு பந்தி செலவுக்கு சேத்து வெக்கனும்னு எங்கக்கிட்டருந்து அம்பதாயிரம் மொய் வாங்கினதால, இங்கக் கெரகம் கரகம் ஆடட்டும்னு விட்டுட்டோம்.

இது நடந்தது, ஜூன் மாசம், அப்போதான், வீட்ல பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகியிருந்தன. நாங்க கட்ட ஆரம்பித்திருந்த புதிய வீடு பற்றினக் கவலை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். எங்க கல்லூரிக்கு போயிட்டு வர சர்வசாதாரணமா, ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் ஆகலாம், என்கிற திகில் தகவல். அக்காக்கு குழந்தை பிறந்தால் எப்டி வளக்கிறதுன்னு பயம். படிச்சு முடிச்சாலும் கணினித்துறையில் எதிர்காலமுண்டா என்று பயப்பட வைத்த காலக்கட்டம். எங்க ஏரியாவில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம். என் மார்க் வெச்சு அப்பா சைட்ல எல்லா சொந்தக்காரங்களும் ஏகத்துக்கும் நக்கலடிச்சு வெறுப்பேத்துற வேலைய, சொந்த வேலய விட அதிகமாப் பாத்தாங்க. இப்டி ஒன்னு பத்தாகி, பத்தே பரமசிவமானக் ('தல'யோட பரமசிவம் பாத்தா கணக்கான்னு கூட வெச்சுக்கலாம்)காலக்கட்டம்.

ஒரு சனிக்கிழமை காலைல வீல்னு ஒரு சத்தம், அம்மாதான். என்னமோ ஏதோன்னு பதறி எழுந்தா, அப்பா டிவியப் பாருங்கறார். கலைஞர் கைது பத்தின செய்திகள்.

அன்னைக்கு சாயந்திரம் டிவியப் பாத்துகிட்டே எங்கம்மா சீரியஸா சொல்றாங்க, 'நீ என்னைக்கு அஞ்சு வருஷம் படிச்சு முடிக்கிறது, அதிமுக ஆட்சி போறது, வீட்டை கட்டி முடிக்கிறது, குழந்தைக்கு அஞ்சு வயசாகுறது, மத்த பிரச்சினைகள் சரியாகுறதுன்னு'. அந்த டைம்ல நான் இருந்த ஒரு மனநிலைக்கு வாழ்க்கையில் என்றுமே திரும்பக் கூடாதுன்னு இன்னிவரைக்கும் நெனைக்கிறதுண்டு.

ஆனால் எப்டி விக்கிரமன் படத்துல, ஒரு லாலாலாவுல எல்லாம் சரியாகிடுமோ, அதாட்டமே எல்லாம் பாசிடிவ்வா மாறுச்சின்னு இப்போ வரைக்கும் எனக்கு அதிசயமா இருக்கும்.

இதோட என் பேஜாரு ஒப்பாரி முடிஞ்சு, அடுத்த பாகத்திலிருந்து நிஜக் கல்லூரிக் காலம் தொடரும்.

Monday, 9 March 2009

கல்லூரிச்சாலை

கல்லூரிச் சாலைன்னு பேர் வெச்சாலும், எங்க கல்லூரிக்கு வர்ற சாலையை நான் சேர்ந்த ரெண்டாவது வருஷம்தான் போட்டாங்க.

ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.

இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.

நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.

காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.

நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.

'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.

இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.

சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.

இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.

இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?

அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.

நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.

இப்டியாப்பட்ட நிலமையில...............................