டிஸ்கி 1: ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள் மன்னிக்கவும். இந்தப் பதிவை பார்த்து நான் கமல் ரசிகை என யாரும் எண்ண வேண்டாம். நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
டிஸ்கி 2: வழக்கமாக எல்லோரையும் கைல கால்ல விழுந்தாவது ஒரு பின்னூட்டம் போடுங்க சாமின்னு கேக்குற நானு, இந்தப் பதிவுக்கு கேக்கல(அவங்களை தர்மசங்கடப்படுத்த வேண்டாமேன்னுதான்)
டிஸ்கி 3: ஏன் இந்த கொழுப்பெடுத்த வேலைனு திட்ட நினைக்கிறவங்க தாராளமா திட்டலாம், ஏன் எங்க பதிவெல்லாம் சூடான இடுகைல வரணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா?ஆமாங்க ஆமாம், அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் பதிவு.
நான் நேற்று மாலை வழக்கமாக செல்லும் பால் ரெஸ்டாரெண்டில் (பாரிஸ், லக்ஸம்பெர்க், gibert ஜோஸப் புத்தகக் கடை அருகில் உள்ள கிளை, மிகப் பிரபலமான லேண்ட்மார்க்).நான் சென்றபோது உணவகத்தில் ஒரே வெளிநாட்டினர் மயம்(ஏன்னா இது அவங்க ஊர்). சிலருடன் பேச்சுக் கொடுத்தேன். முதலாமவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெண் தோழியின் முதுகில் கைகளால் கோலம் போட்டுக்கொண்டே சிரித்தமுகத்துடன் ஹலோ சொன்னார்(எனக்கு நாகரிகம் இல்லைனா, அவருக்குமா இருக்காது? பின்ன அவரு கடல போடும்போதுப் போய் மூக்க நொழைக்க தனி அநாகரிகச் சிந்தனை வேணும்ல). நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் அங்குள்ள அல்டெனா எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும் தான் தற்போது சுவிசர்லாந்தில் உள்ள cern லேபில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) என்றும் சொன்னார். சரி விசயத்துக்கு வருவோம் என்று ”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா" என்றேன். பேந்தப் பேந்த முழித்தவர் சொன்ன பதில், “நான் நிறைய ஆராய்ச்சியாளர்களை சந்திப்பவன், அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதேயில்லையே”. மருத்துவரான அவரது தோழியும் தோள்பட்டையை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி “தெரியவில்லை” என்று உடல்மொழியால் சொன்னார். சரி உங்களுக்குபிடித்த ஒரு க்ளாசிகல் ஆராய்ச்சியாளர் பெயரை சொல்லுங்கள் என்றேன்.. 'professor andrew wallard' என்று சொன்னார். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.சரி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரயாவது தெரியுமா என்றேன், அதற்கும் உதட்டை பிதுக்கினார். சரி மூடர்களுக்கென்ன தெரியும்னு அடுத்து நின்ன ஜப்பான் நாட்டு கப்பல் கேப்டனிடம், உங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் தெரியுமா எனக் கேட்டேன், கொழுப்பப் பாருங்க, அவரும் உதட்டைப்பிதுக்கினார். அவனவன் இங்கே 100 கோடி, 1000 படம், என்று ஒரே டெசிமல் நம்பர்களாகபுகழும் இவர்களுக்கா இந்த சோதனை என்று வேதனைப்படலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள் ஏதோ மனநலம் பிழன்றவள் எனக் கருதி போலிசை கூப்பிட ஆயத்தமாவதை பார்த்ததால் அங்கிருந்து வெளியேறினேன்.
இத்தோட விட்டேனா, வீட்டிற்கு வந்ததும் முதலில் அமரிக்க டாக்டரான எங்கக்கா கணவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் "உங்களுக்கு கமல்ஹாசன் என்ற நடிகரை தெரியுமா" என்றேன். அவர் உடனே, "தெரியுமே, தசாவதாரம் நேத்துதான் ரெண்டாவது முறை எல்லாரும் பார்த்தோம்" என்றார். அவரின் பெற்றோருக்கு(கணவர் பெரிய வீட்டலங்கார சாமான் மற்றும் பர்னிச்சர் கடை வைத்திருப்பவர், மனைவி சமூக சேவை மையத்தில் வாலண்டரி சர்வீஸ் செய்பவர்) போன் செய்தேன். அவர்களும் அதையே கூறினர். அடுத்தது பிரெஞ்சுக்காரர்களான என் மாமியார் வீட்டிற்கு(மாமனார் ஆர்க்கிடெக்ட், மாமியார் ஹோம் மேக்கர்) போன் செய்தேன். அவர்களும் 'சென்ற வாரம் பாரிஸ் வந்தப்போ எல்லாரும் சேர்ந்து தியேட்டரில் பார்த்தோமே தசாவதாரம், அதில் நடித்து சாதனை புரிந்த கமல்தானே' என்றனர், நான் ஆமாம் எனவும், அவரைப் போய் எங்களுக்கெப்படி தெரியாமல் இருக்கும் எனக் கோபப்பட்டனர். சரி என அவர்களை சமாதானப்படுத்திவிட்டு விஞ்ஞானியான என் கணவரிடம் அதே கேள்வியை கேட்டேன், 'வேற வேலை இல்லைனா வழக்கம்போல ப்ளாக் எழுதி மொக்கப் போடறதுதான, இன்னைக்கு நான்தானா கெடைச்சேன்னு' கடுப்பானவர கூல் பண்ணி அதிமுக்கிய கருத்துக்கணிப்புக்காக கேக்கிறேன்னு சொல்லவும், 'கமலைத்தான, நல்லாவேத் தெரியும், கேட்டுக்க, அவரோட முதல் படம் களத்தூர் கண்ணம்மா, முதல் மனைவி வாணி கணபதி, இப்போதய கேர்ள் பிரண்டு கௌதமி, மகள்கள் பேரு சுருதி, அக்ஷரா. ஷூட்டிங் பார்த்திடாத இங்கிலாந்து ராணி முதல் முதலா பார்க்க ஆசைப் பட்டது இவரோட பட ஷூட்டிங்கைத்தான். இப்போதைக்கு இதப் பத்தி நீ கண்டிப்பா ஒரு பதிவ போடுவ, ஏன்னா இன்னைய தேதிக்கு எக்கச்சக்க பிரபலமான ப்ளாகர் ஆகணும்னா, அவரைப் பத்தி ஒரு வரி எழுதினாப் போதும்' அப்படீன்னு அடுக்கிட்டே போறாருங்க. எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆகிடுச்சி. சரி இப்படி உலகத்தில் உள்ள விஞ்ஞானி, ஆர்க்கிடெக்ட், லங் ஸ்பெஷலிஸ்ட், பெரிய பிசினஸ்மேன், சமூக சேவகி, இல்லத்தரசின்னு எல்லாப் பிரிவினரிடையும் பயங்கர அறிமுகத்தோட இருக்கும் கமல் ஒரு பட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானவர். அது என்னன்னா,
உலகநாயகன்
கடைசி டிஸ்கி: இந்தப் பதிவில் நான் என் குடும்ப பேக்ரௌண்டை சொல்லி பீத்திக்கிரேன்னு நினைச்சீங்கன்னா, ரொம்ப சரியா கணிச்சிருக்கீங்க. இப்பல்லாம் அதுதான் டிரன்ட். இதை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன், :):):)
Showing posts with label வெட்டிப்பொழுது. Show all posts
Showing posts with label வெட்டிப்பொழுது. Show all posts
Tuesday, 8 July 2008
Subscribe to:
Posts (Atom)

