Sunday, 22 June, 2008

மக்களே, பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?

எண்ணக் காரணத்தாலோ தமிழ்மண ப்ளாகர் பதிவுப்பட்டை செயலிழந்தமையால், மறுமுறை உங்கள் பார்வைக்கு இதனை வைக்கிறேன். பெண்கள் ஏன் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்? முதலில் பொதுவான சிலக் காரணங்களை பட்டியலிட்டுவிட்டு பின்னர் சிறிது வித்தியாசமானக் காரணத்தைக் காணலாம்.

முதல் காரணம், அவை பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றது. சரி, ஆனால் இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்? அது அடுத்த காரணத்தை நோக்கி நம்மை செலுத்துகிறது. இரண்டாவதுக் காரணம் பெண்களுக்கானத் திரைப்படங்கள் குறைந்து போயின. சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.

தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது. அதனால் பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன். இவ்விடத்தில் தயவுசெய்து யாரும் வீட்டில் ஒரு டிவி தானே இருக்கு, வேறுவழி இல்லாமல் பார்க்கிறேன் எனக் கூறவேண்டாம். பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்.

இந்த இடத்தில் நான் சீரியல் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் குறை கூற முயலவில்லை. எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்?

இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? சரி விடுங்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா? இன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் வன்முறை நிறைந்திருக்கிறது. எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன. வெகுஜனப் பொழுதுபோக்கு என்பது அனைவரையும் சார்ந்து இருப்பது. இதில் பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாளிகளாகிறார்கள்? வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நாங்கள் ஆலோசைகள்தான் கூறினோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதெல்லாவற்றையும் விடுங்கள், நான் மேற்கூறிய கடைசிக் காரணத்திற்கு வருவோம்.என்னுடைய தாயார் பொதுவாக நகைச்சுவை தன்மையுள்ள நிகழ்ச்சிகளையே பார்க்க விரும்புவார்கள், அத்தன்மையுள்ளவற்றையே படிக்கவும் விரும்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பிக்கும் சீரியல்களை மட்டுமே விரும்பினார்கள். நானும் அப்பொழுதுதான் பிரபலமானவை வரும் நேரம் என்பதால் அவ்வாறு செய்கிறார் என நினைத்தேன். ஆனால் தான் பார்த்து வந்த தொடரின் நேரத்தை மாற்றினாலும் சரி, அந்த சமயத்திற்கு வேறொரு சீரியல் வந்தாலும் சரியென அவர்களின் போக்கு வித்தியாசமானதாக இருந்தது. அந்தச்சமயம் நான் கல்லூரிக்கு(வெகு தொலைவில் இருந்தது) சென்றுகொண்டிருந்த காரணத்தால் சீக்கிரம் தூங்கப் போய்விடுவேன்.

அவர் தொடர்கள் பார்க்கும் பொழுது தூங்கித் தூங்கி வழிவார். பார்க்கின்ற தொடர்களை பற்றியும் மிக எரிச்சலுடனே குறிப்பிடுவார். சீக்கிரம் தூங்கச் சொன்னாலும் செல்ல மாட்டார். எந்த விதத்திலும் தனக்கு பிடிக்காத ஒன்றை இவர் எதற்காகச் செய்கிறார் என எனக்கு கவலை மேலோங்க, ஒரு நாள் வற்புறுத்தி கேட்டபொழுது, "நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்.

இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மனைவிக்கு தான் விரும்புகிற அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற போக்கு தவறானது என்பதை அவருக்கு சிறிது சிறிதாக விளக்கி பிரச்சினையின் வேரை சரிசெய்தோம். பின்னர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாகியது. என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?

என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம். ஏனென்றால் நாம் விரும்பிச் செய்யும் விஷயங்களை நாம் பெரும்பாலான நேரங்களில் மறப்பதில்லை. ஆனால் நிறையப் பேர் முக்கால்வாசி தொடர்களின் கதையை(கதை இருக்கானு கேக்கக்கூடாது) கூட ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)

ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள். ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? அப்படியே ஊர் சுற்றினாலும் எதற்காக சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லவே(பல சமயம் பார்ப்பதற்கு பெண்கள்தான் அவ்வாறு விரும்புவதுபோல் தோற்றமளித்தாலும் எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை. மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள்) விரும்புகிறார்கள்? நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?

நாம் நூறுதடவை ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்கிறோம், அதனால் அதனை 101வது தடவை கண்டிப்பாக சரியாகச் செய்வோம் என்ற உறுதியுண்டா? பின்னர் பெண்கள் மட்டும் எப்படி திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டபடியால் அனைத்தையும் மிகச் சரியாக செய்ய முடியும்?

இதெல்லாவற்றையும் விட எரிச்சலான விஷயம், பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". இதென்ன யுத்தக் களமா இல்லை போட்டித் தேர்வா, நம் புத்திசாலித்தனங்களை காட்ட என நான் கூற வரவில்லை. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் முழுமையாகத் தெரியாததால் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது நடத்து கொள்ளச் சொல்வது சரி. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானப் பின்னும் பல குடும்பங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதின் காரணம், ஆண்கள் தாங்கள் முட்டாளாக்கப்படுவதை மிகவும் விரும்புகிறார்களா இல்லை நானாக உன் விருப்பங்களுக்கு செவிமடுக்க மாட்டேன், நீயாக உன் மூளையை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள் என்னும் மனப்பாங்கா? ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?

இதை படிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் எரிச்சல் வரும். நான் என் சொந்த அனுபவத்தை பொதுக் கருத்தாக்க முயல்வதாக குற்றம் சாட்டுவர். இது அவரவரின் மனசாட்சியை பொறுத்த விஷயம். நான் கூறும் விஷயம் வேறெங்கும் நடப்பதே இல்லை என்றால், இவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. இன்னும் இவ்வகை குறைகள் இல்லாத சில ஆண்கள் நான் அப்படி இல்லையே எனக் கூறுவர்.இவர்களுக்கு என் பதில், அப்படிஎன்றால் மிகவும் நல்லது.இதில் குறிப்பிடப்படும் வகையைச் சேராதவர் நீங்கள். உங்களின் துணை நிறைவாக வாழ்வார் என்பதாகும்.மொத்தத்தில் இந்தப் பதிவு, தான் செய்வது தவறென்றே உரைக்காமல் தவறு செய்யும் ஆண்களுக்காகவும், தன் துணையிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகம் என்பதை உணராத ஆண்களுக்காகவும்தான். நாங்களும் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிற ஆண்களா, தாராளமாக நீங்களும் உங்கள் வலைபதிவில் தெரிவியுங்கள். நான் ஒரு பெண், அதனால் எங்களின் பிரச்சினைகளை கூறுகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் நீ ஏன் இவற்றை குறித்து மட்டும் எழுதுகிறாய் என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் என வேண்டுகிறேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இவ்விஷயத்தில் இன்னும் பல முக்கிய கூற்றுகள் இருந்தாலும் பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு மற்ற பிரச்சினைகளை வேறொரு சமயம் விவாதத்திற்கு எடுக்கலாம் என இத்துடன் முடிக்கிறேன்.

54 comments:

பரிசல்காரன் said...

மிக அருமையான ஒரு தலைப்பை எடுத்துள்ளீர்கள்.
//தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது//

உண்மை! அந்த நேரத்தை சீரியல் தயாரிப்பாளர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஓ மைகாட் .. ராப் இது சீரியல விட நீளம்.. ஆனா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. விசயம் என்னன்னா நீங்க பதிவுக்கு வாங்கன்னு தனியா கூப்பிட அவசியம் இல்லாமலே இந்த பதிவை வாசிக்க வந்திருப்பேன்... இந்த இடத்தில் சொல்லிக்க விரும்புவது நான் சீரியல் பார்ப்பதில்லை கடைசியாக பார்த்தது மெட்டி ஒலி அது ரொம்ப யதார்த்தமா போனதால் பார்த்தேன்...
ஆனா உங்க அம்மா தூங்கி தூங்கி பார்ப்பது போலவே தான் எங்க அம்மா மாமியார் எல்லாரும் பார்ப்பாங்க.. திட்டிக்கிட்டே.. ஆனா நான் காரணம் அறிய விட்டுவிட்டேன்.. நீங்க ரொம்ப நல்ல பொண்ணு .விசாரிச்சிருக்கீங்க..

பரிசல்காரன் said...

//இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது//

நிஜம்! பாலச்சந்தரின் சீரியலகள், விடாது கருப்பு, மர்மதேசம், ரமணி vs ரமணி இதெல்லாம் எங்கே போனது?

பரிசல்காரன் said...

//இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? //

...............
(தலைகுனிந்து நிற்பதாக கற்பனை செய்து கொள்ளவும்!! )

பொதுவாக சொல்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் முன் புகைபிடிப்பதை எல்லொரிடமும் கண்டிப்பவன் நான். எனக்கு பு.ப.இல்லை! ஆனால் இரண்டாவது நீங்கள் சொன்ன --மனைவியை மட்டம் தட்டுவது -- நானும் செய்யும் ஒரு செயல்! அதை நான் திருத்திக்கொள்ள வேண்டும்!!

பரிசல்காரன் said...

முழுமையாக பின்னூட்டமிட நேரமின்மைக்கு வருந்துகிறேன்! இந்தப் பதிவை ப்ரிண்ட் எடுத்து நண்பர்களுடன் விவாதிக்க வைத்துள்ளேன்!

மொத்தத்தில் `நான் எழுதும் பதிவுகளில் பத்தில் ஒன்று கூட இப்படி ஒரு உருப்படியான பதிவாய் இருக்கிறதா' என்று என்னை எண்ண வைத்த ஒரு பதிவு!!

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

மற்றுமொரு சமூக மாற்றம் (சமூக போக்கு Social Drift) என்ன வென்றால் 1980களில் சினிமாவில் மற்றும் வெகுஜன இதழ்களில் இருந்த பாலச்சந்தர், ஆபாவாணன் போன்ற இயக்குனர்களும், பல எழுத்தாளர்களும் தொடர்கள் பக்கம் வந்தது.

திரைப்படம் என்பது மத்திய தர மக்களிடம் இருந்து (சீட்டு விலை உயர்வால்) அன்னியப்பட்டு திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதிலிருந்து ஆடம்பரமாக மாறியதும் ஒரு காரணம்.

இது குறித்து எனது பழைய இடுகையில் கோடிட்டு காட்டியிருக்கிறேன்.

திரையரங்குகளின் கட்டண உயர்வு என்பது கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தின் அளவு கோல்

துளசி கோபால் said...

வெட்டி ஆஃபீஸர்ன்னு பெயரை வச்சுக்கிட்டு இப்படி அட்டகாசமான ஒரு பதிவைப் போட்டால் எப்படி?

ஆழமாச் சிந்திக்க வைக்கும் பதிவு.

அதாவது ஆண்களை......

நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை.

செய்தி & காலநிலை மட்டும் பார்ப்பேன். அப்புறம் சில பயண நிகழ்ச்சிகள்.

சன் டிவி இப்ப இங்கே வருது. ஆனாலும் வேணாமுன்னு இருக்கேன்.

கோபால் ரிட்டயர் ஆனதும் போட்டுக் கொடுக்கணும்:-))))

அதான் ஆண்கள் டிவி இல்லாம இருப்பதிலையே:-))))

Udhayakumar said...

நல்ல அலசல்!!!

அதிஷா said...

என்னமா ஆராய்ச்சி பண்றீங்க
அதை இன்னும் தொடருங்க

சினிமா நிருபர் said...

//எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை//

நல்ல வரிகள்...! அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன் நண்பரே!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அன்பு தங்கை ராப்,

ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.வீட்டில் மனைவியிடம் பேசக்கூடாது என்று எந்த ஆண்களும் கங்கணம் கட்டிக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வருவது இல்லை. பொதுவாக ஆண்களின் வேலை காலையில் இருந்து யாருடனாவது எதற்காகவாவது அலுவல் நிமித்தம் நேரிலோ,ஃபோனிலோ பேசிக்கொண்டே இருப்பதாகத்தான் உள்ளது. சுமார் 8-10 மணி நேரம் இப்படி இருக்கும் ஒருவர் வீட்டிற்கு வந்தால் அமைதியாக இருக்கத்தான் தோன்றுமே தவிர பேசத் தோணாது. தற்போது பெண்களும் அதிகம் வேலைக்கு வரத் துவங்கி விட்டனர். நீ அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எப்படி இருக்கிறார்கள் என்பதை கவனித்துப்பார்.பெரும்பாலும் பேச்சைக் குறைத்து அமைதியாக இருப்பார்கள். உன் அம்மா போன்ற வீட்டில் இருக்கும் மனைவியரின் நிலை இந்த விஷயத்தில் உண்மையிலேயே கஷ்டம் தான். யாராரிடமோ பேசும் நாங்கள் மனைவியிடமும் தினமும் நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும் என்பதை எந்த Male chauvinism இன்றி ஒத்துக் கொள்கிறேன். மிகமிக அருமையான பதிவு. என்னைப் போல பதிவு போட வேண்டுமே என்பதற்காக கடனுக்கு எழுதாமல் தாமதமாகப் போட்டாலும் தரமான பதிவாக குடுக்கும் உனக்கு என் வாழ்த்துக்கள். கீப் இட் அப் தங்கை.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//துளசி கோபால் said...

வெட்டி ஆஃபீஸர்ன்னு பெயரை
வச்சுக்கிட்டு இப்படி அட்டகாசமான ஒரு பதிவைப் போட்டால் எப்படி?//

துளசி அம்மா ராப் வெட்டி ஆபிஸராக இருப்பதால் தான் வேற வேலை இல்லாமல் இப்படியெல்லாம் யோசிச்சு பதிவு போட முடியுது.
:-))

கீ - வென் said...

கொலை வெறி ஒண்ணும் அல்ல.. இந்த டிவி காரனுங்களை செருப்பால அடிக்கணும்.. பெரும்பாலான சீரியல் களில், பெண்களை வில்லிகளாக சித்தரிப்பது.. எவ்வளவு நூதனமாக கேவலப்படுத்தனுமோ .. அவ்வளவு கேவலப்படுத்துவது... அதனாலேயே நான் டிவி சீரியல்கள் பார்ப்பது இல்லை..

இன்னொரு விஷயம்.. 50 வயதுக்கு மேல் தூக்கம் வருவது சிரமம் தான்.. அதான் நான் என் மாமனாருக்கு wireless ஹெட் போன் வாங்கி கொடுத்து விட்டேன்.. ராத்திரி டிவி பாக்குறதுன்னா ஹெட் போன் ஐ மாட்டிக்குவாரு..

ambi said...

ம்ம், ரொம்ப டீப்பா சிந்திச்சு நல்ல பதிவா போட்டு இருக்கீங்க. வ்ரி குட்.


ஹிஹி, பிரஞ்சு டிவில மெகா சீரியல் ஏதும் வருதா? :p

rapp said...

//பொதுவாக சொல்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் முன் புகைபிடிப்பதை எல்லொரிடமும் கண்டிப்பவன் நான். எனக்கு பு.ப.இல்லை! ஆனால் இரண்டாவது நீங்கள் சொன்ன --மனைவியை மட்டம் தட்டுவது -- நானும் செய்யும் ஒரு செயல்! அதை நான் திருத்திக்கொள்ள வேண்டும்//கிருஷ்ணா, நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் நான் எத்தனையோ பேரை நேரில் பார்த்திருக்கிறேன். புகை பிடிப்பது அந்தக் குழந்தைக்கு புற்றுநோயை வரவழைக்கும் எனத் தெரிந்தும் தன் சிறு சந்தஷோத்தையும் சில மணித்துளிகள் கூட தள்ளிவைக்க விரும்பாத மனப்பான்மையைத் தான் இங்கு சுட்ட விரும்புகிறேன்.ஆனால் இப்படிப்பட்டவர்கள்(இத்தனைக்கும் இவர்களும் அனைத்தையும் கூடச் சேர்ந்து பார்க்கிறார்கள்) கூட பெண்கள் நெடுந்தொடர் பார்ப்பதை ஏதோ ஒரு தீயப் பழக்கம் போல் சித்தரிப்பதுதான் விநோதம்.

rapp said...

//முழுமையாக பின்னூட்டமிட நேரமின்மைக்கு வருந்துகிறேன்//நீங்க நேரம் கிடைக்கும் போது வந்து ஒரு சின்ன பின்னூட்டம் போட்டா போதும். நான் ஏன் பின்னூட்டத்துக்கு முக்கியத்துவம் தருகிறேன்னா அப்போதான் தமிழ்மணத்துல வரும், இன்னும் நாலுப் பேர் வந்து படிப்பாங்க. இந்த மாதிரி சில பதிவுகள் நிறையப் பேரால விவாதிக்கப்படணும்னு நினைக்கிறேன். இல்லைனா யாருக்குமே இந்த பின்னூட்டத் தொந்தரவை தந்திருக்க மாட்டேன்.//மொத்தத்தில் `நான் எழுதும் பதிவுகளில் பத்தில் ஒன்று கூட இப்படி ஒரு உருப்படியான பதிவாய் இருக்கிறதா' என்று என்னை எண்ண வைத்த ஒரு பதிவு//அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கிருஷ்ணா, நீங்க சூப்பரா எழுதுவது உங்களுக்கே தெரியும். ஒவ்வொருத்தருக்கும் சில விஷயங்களை பற்றி பேச பிடித்திருக்கும், சிலவற்றை எழுதப் பிடித்திருக்கும், வேறு சிலதை படிக்கப் பிடிக்கும். இந்த முக்கியமான விஷயத்தை பலர் தொடாமல் விட்டதால் நான் எடுத்தேன், மற்றபடி நல்ல பதிவு உயர்ந்த பதிவென்று இதில் தரம் பிரிக்க தேவையே இல்லை.(ஆஹா பாத்தீங்களா என் பதிவு உயர்ந்தப் பதிவு, அப்டி இப்டின்னு நானே இஷ்டத்துக்கு சந்துல சிந்து பாடிட்டேன்)

rapp said...

// ராப் இது சீரியல விட நீளம்.. ஆனா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க//கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் மேடம். அதோட இன்னும் கூட எக்கச்சக்க பாயிண்ட்ஸ் இருக்கு இதில் விட்டுப்போனது.

rapp said...

//இந்த இடத்தில் சொல்லிக்க விரும்புவது நான் சீரியல் பார்ப்பதில்லை கடைசியாக பார்த்தது மெட்டி ஒலி அது ரொம்ப யதார்த்தமா போனதால் பார்த்தேன்//மேடம், பாக்கறதும் பாக்காததும் நம்ம தனிப்பட்ட விஷயம் இல்லைங்களா? சட்டத்துக்குட்பட்டு வயது வந்த ஒருவர் என்ன பார்க்கலாம், என்ன பார்க்கக்கூடாது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டுமேயல்லாமல் இன்னொருத்தர் நக்கலடிக்கிறார், இன்னொருத்தர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தறார்னு நாம ஒவ்வொன்னுத்தயா விட்டுக்கொடுத்திட்டா அப்புறம் இது எதில் முடியும்?அதற்குத்தான் மேடம்.
உங்களோட ஆதரவுக்கு நெம்ப நன்றி மேடம்.//நீங்க ரொம்ப நல்ல பொண்ணு//ஹி ஹி ஹி, ஒரே வெக்க வெக்கமா வருது. நெம்ப நன்றி மேடம்.

rapp said...

நெம்ப நன்றி புருனோ சார். நான் உங்க கருத்துக்களை வழிமொழிகிறேன். ஐம்பதுகளில் நாவல்கள், அறுபதுகளில் தொடர்கதைகள், எழுபதுகளில் சினிமா, எண்பதுகளில் தொலைகாட்சி,வீடியோ, டெக், தொன்னூறுகளில் தொடர்கள், இப்பொழுது நெடுந்தொடர்கள் மற்றும் கணினி இப்படியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அவற்றை ஆண்கள் ஏதோ தீண்டத்தகா ஒரு விஷயமாக உருவகம் செய்துவருவதுதான் வேதனை.

rapp said...

நெம்ப நன்றி துளசி மேடம். உங்களோட நெஞ்சம் திறந்த பாராட்டுக்களுக்கு நெம்ப நன்றி. எனக்கு இந்த விஷயத்தில் நெம்ப நாளாவே கடுப்பு. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் இங்கு பகிர்ந்துகிட்டு இருக்கேன். திரும்பவும் இன்னொரு முறை தொடருவேன். அப்பவும் உங்களோட ஆதரவு தேவை.

rapp said...

நெம்ப நன்றி உதயகுமார்.

rapp said...

நெம்ப நன்றி ஆதிஷா, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

rapp said...

நெம்ப நன்றி சினிமா நிருபர். அடுத்த பதிவின்போதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

rapp said...

அப்துல்லா,
வந்ததுக்கு நெம்ப நன்றி. சரி இப்ப நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கிறேன், நான் எப்ப எங்கம்மா வேலைக்குப் போகலன்னு சொன்னேன். எங்கம்மா ஒரு மிகப் பெரிய பிரபலமானப் பள்ளியில் ஏ.ஹெச்.எம். இன்னமும் அதே வேலையில்தான் இருக்காங்க. நான் நெம்ப தொலைவில் உள்ள காலேஜில் படித்ததால் என்னால் காலையில் பெரிதாக அவருக்கு உதவ முடியாது. என் தந்தை உதவுவார் என்றாலும் அவர் மிக மிக மெதுவாக ஒவ்வொன்றையும் செய்வார். அந்த வேகத்தில் அவர் உதவி செய்வதால் பல சமயம் என் தாயார் அவரிடம் உதவியே கேட்கமாட்டார். அதனால் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அவ்வளவு சமையல் வேலையும்(இதில் என் அக்கா பையனுக்கு சுத்தமா காரமே இல்லாமல் தனிச் சமையல்) செய்துவிட்டு காலை எட்டரைக்கு பள்ளிக்கு செல்லவேண்டும். சாயந்திரமும் வேலை சரியாக இருக்கும்.

இப்படி இடைவிடாமல் ஒரு வித நெருக்கடியோடு தொடர்ந்து செயல்பட்டதினால்தான் அவருக்கு தன் விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஒருவர் தேவை பட்டார். இதற்கு வாழ்க்கை துணை என ஒருவர் இருக்கும்போது அவர் ஏன் பிறரை நாட வேண்டும்? குழந்தைகளிடம் செலவிட பல தந்தைகளுக்கு நேரம் இருக்கும்போது,நண்பனுக்கு ஒதுக்க நேரம் இருக்கும்போது, ஏன் மனைவிக்கு மட்டும் இடம்தர இயலவில்லை?

தம்பதிகள் குழந்தை பேற்றை அடையும்போது அவர்களுக்கு பெற்றோர் என்ற கூடுதல் பொறுப்பு சேருகிறதே அன்றி கணவன், மனைவி என்ற ஸ்தானம் அப்படியேதான் இருக்கிறது. கூடுதல் பொறுப்பிற்காக உங்களின் ஆதார ஸ்தானத்தை இழப்பது எவ்வளவு முட்டாள்தனம்?

என்னால் இவற்றை நிறைவேற்ற முடியாதெனும்போது திருமணம் செய்யக் கூடாது, அப்படியே செய்தப்பின் தெரிந்தாலும் பின்னர் வாழ்க்கைதுணயிடம் குறையே கண்டுப் பிடிக்கக்கூடாது. அது முடியாதில்லையா, அப்படிஎன்றால் வேலைக்குப் போகின்ற மனைவியோ இல்லை செல்லாதவர்களோ ஆண்கள் காது கொடுக்கத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் எந்தவித சாக்குகளும், சமாதானங்களும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

rapp said...

கீவென், நீங்க பதிவை முழுசா படிக்கலைதானே? கண்டுப் பிடிச்சிட்டேன் பார்த்தீங்களா? ஏன்னா நீங்க சொல்லி இருக்கிற ஜாஸ்தி வன்முறை ஆபாசம் நெடுந்தொடர்களில் பரவக் காரணம் ஆண் பார்வையாளர்கள் அதிகமானதால் இருக்கலாம் என பதிவில் எழுதி இருக்கேனே!

rapp said...

வாங்க அம்பி அண்ணே, நெம்ப நன்றி வந்ததுக்கு. ஆமாம்ணே இங்கயும் எக்கச்சக்க சோப்கள் இருக்கு. இதைப் போன்ற சோப்களுக்கு அமெரிக்காதான் பெரியண்ணன். அப்புறம்தான் மற்ற நாடுகள் எல்லாம்.

மோகன் கந்தசாமி said...

பதிவு மிக அருமை.

தலைப்பை மாற்றி "ஆண்கள் கிரிக்கட் பார்ப்பது கொலைவெறிச் செயலா?" என வைத்து "சீரியல்", "பெண்கள்", "தாயார்" என வரும் இடங்களில் "கிரிக்கட்", "ஆண்கள்", "தந்தை" என இட்டு நிரப்பினால் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பதிவை எழுதிவிடலாம். ஒரே வித்தியாசம் அவ்வாறு எழுதும் பதிவு இப்பதிவைப் போன்று வரவேற்பை பெறாது. ஏனெனில் "சீரியல் பார்ப்பது அபத்தம்" என்ற கருத்து பரவலாக இருப்பது போல் "கிரிக்கட் பார்ப்பது அபத்தம்" என்று நாம் சொல்லுவதில்லை. என்னைப் பொறுத்தவரை கிரிக்கட்டே கதி எனக்கிடப்பது அபத்தமே. அதே நேரத்தில் சீரியல் பார்ப்பதும் மிக அபத்தம்தான். காரணம் அபத்தங்களின் சுவாரசியமான(?) தொகுப்புதான் சீரியல்.

சினிமா ஆணாதிக்கம் நிறைந்த ஒன்று, ஆனால் ஆண்களுக்கானது அல்ல. சீரியல் பெண்களுக்கானது, ஆனால் பெண்களின் ஆதிக்கம் நிறைந்ததல்ல. பாத்திரங்கள் தவிர அனைத்தும் ஆண்கள் தான். தாலிப்பிச்சை கேட்டு மிக நீண்ட வசனம் பேசி உயிரை மாய்த்துக்கொள்ளும் பெண் பாத்திரம் பெண்கள் இயக்கும் சீரியல்களில் இருக்காது என நம்புகிறேன். சிறந்த சினிமாக்கள் எவ்வாறு மிகக் குறைவோ அதுபோல் அபத்தங்களற்ற சீரியல்களும் மிக மிகக் குறைவு. பிற்போக்கான தற்கால சமூகத்தை சினிமா பிரதிபலிப்பது போன்று சீரியல்களும் எடுத்துகாட்டுகின்றன. எனவே சீரியல் பார்ப்பதை மட்டும் தவறான ஒன்றாக நாம் கருதத்தேவையில்லை.

உண்மையில் சீரியல் பார்ப்பது தவறாக கருதப்படுகிறதா? இல்லை, கிண்டலடிக்கப் படுகிறது, அவ்வளவே!. மற்றபடி சீரியல் பெண்களால் விரும்பப்படுவதற்கு நீங்கள் கூறும் பெரும்பாலான காரணங்கள் மறுக்கமுடியாதபடி உள்ளன.

இப்பதிவில் என்னைக் கவர்ந்த இடங்கள்:

///எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்?///

////குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா?////

////வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? //////

/////பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". /////

////ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?/////

இப்பதிவில், ஏற்றுக்கொள்வது பற்றி சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்:
////நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)////

பெண்கள் சீரியல் பார்க்க ஆண்களும் காரணமாயிருக்கலாம். ஆண்கள் மட்டும் தான் காரணமா? எட்டு வயது சிறுமி முதல் என்பது வயது முதியவர் வரை அனைவரையும் சீரியல் பார்க்க வைப்பது ஆண்கள் தானா? சீரியல் விரும்பிகளை மீட்டெடுக்க என்ன செய்தாலும் முடியாது என்பது என் கருத்து. அது போல் கிரிக்கட் பயித்தியங்கள் குணமாவது அவர்கள் கையில் தான் இருக்கிறது. நான் ஒரு குனமாகிவிட்ட பைத்தியம்.

rapp said...

//பெண்கள் சீரியல் பார்க்க ஆண்களும் காரணமாயிருக்கலாம். ஆண்கள் மட்டும் தான் காரணமா? எட்டு வயது சிறுமி முதல் என்பது வயது முதியவர் வரை அனைவரையும் சீரியல் பார்க்க வைப்பது ஆண்கள் தானா? சீரியல் விரும்பிகளை மீட்டெடுக்க என்ன செய்தாலும் முடியாது என்பது என் கருத்து. அது போல் கிரிக்கட் பயித்தியங்கள் குணமாவது அவர்கள் கையில் தான் இருக்கிறது. நான் ஒரு குனமாகிவிட்ட பைத்தியம்//
அப்படி இல்லை மோகன், குழந்தைகள் பெரும்பாலும் தங்களை படிப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளும் அத்தனை நேரமும் இப்பொழுதெல்லாம் டி.வியின் முன் செலவிட விரும்புகின்றனர். அப்பொழுது பெரியவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையே பார்க்கும் நிலை ஏற்படுகிறது. சரி பெரியவர்கள் ஏன் இதனை பார்க்கிறார்கள்? கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளிதான் காரணம். அவர்களுக்குள் புரிதல் இருந்தால் சதா இருபத்திநான்கு மணிநேரமும் டி.வியின் முன் அமர மாட்டார்கள். வெகு சிலர்தான் விரும்பியே அவ்வாறு இருக்கிறார்கள். பலர் வேறு வழி இல்லாமல்தான் அவ்வாறு இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். மேலும் நெடுந்தொடரோ கிரிக்கட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது சட்டத்திற்கு புறம்பானதில்லை எனும்போது நாம ஏன் இது மோசம் அது நல்லது எனக் கூற வேண்டும்? எதற்கும் அடிமையாகமல் இருப்பது நல்லதுதான், ஆனால் அவர்கள் எதன் பொருட்டு அதன் மேல் அவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை நாம் தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும் என்பது என் கருத்தாகும்.

rapp said...

//உண்மையில் சீரியல் பார்ப்பது தவறாக கருதப்படுகிறதா? இல்லை, கிண்டலடிக்கப் படுகிறது, அவ்வளவே//இங்குதான் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த ஒரு விதத்திலும் பரப்ப முடியாத கருத்துக்களும் நம்பிக்கைகளும் நகைச்சுவையின் மூலம் மிக மிக சுலபமாகச் செய்யலாம். ஒருவர் தினமும் ஒரு விஷயத்தை செய்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் அதனை முழுமையாக விட்டொழிக்கவேண்டுமேன்றால்(அது நல்ல விஷயமாகவோ, பழக்கமாகவோ இருப்பினும்) அவரை தொடர்ந்து அவ்விஷயத்தை வைத்து கிண்டலடித்துப் பாருங்கள், அவர் மிக விரைவில் அதனை விட்டு விடுவார். இதில் மிகச் சிலரே விதிவிலக்கு. நான் யாரும் எதையும் கிண்டல் செய்யக்கூடாது எனக் கூற வரவில்லை. ஆனால் சிகரட் பிடிப்பதை பற்றி இவ்வாறு ஜாஸ்தி செய்யாமல், பெண்கள் எதனை விரும்புகிறார்களோ அதனையே எக்கச்சக்கமாக கிண்டல் செய்வதின் உள்குத்தை சுட்ட விரும்புகிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

'பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?'

கொலைவெறிச் செயல் இல்லை சகோதரி.
ஆனால் வெறுமனே காலத்தை வீணாக்கும் செயலல்லவா?
சீரியல் பார்ப்பதனால் என்ன லாபம்?
மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பான சித்தி,மெட்டி ஒலி போன்ற சீரியல்களைத் தொடர்ந்து பார்த்தவர்களிடம் அந் நாடகங்களின் கதையென்ன என்று இப்பொழுது கேளுங்கள்.யாராவது முழுதாகச் சொல்கிறார்களா எனப் பார்க்கலாம்.

சீரியல் பார்ப்பதனால் எடுத்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் ஊடகங்களுக்கும் லாபமாக இருக்கலாம்.ஆனால் பார்ப்பவர்களுக்கு?

சமீப காலமாக மூளையை மழுங்கச் செய்யும் தொடர்களே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் சொல்வது போல தனிமைக்குத் துணையாகவே சீரியல்கள் பார்க்கப்படுகின்றன என்றால் அந்த நேரத்தை வேறு பயனுள்ள விடயங்களில் செலவளிக்கலாமே?

கார்த்திகேயன். கருணாநிதி said...

Rapp.. இது ஆதங்மா இல்லை கோபமா..
நீங்க சொல்ல நினைத்தது சீரியல் பார்ப்பது பத்தியதா
இல்லை, கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள புரிதல் பத்தியதா.

எந்த கணவனும்/ மனைவியும் தன்னோட மனைவி/கணவன்
அன்பாக, அறிவாளியாக இருக்கணும்னுதான் நினைபாங்க,
இதுல பிரச்சனை எங்கே ஆரம்பிக்குதூனா வாழ்க்கை ஆரம்பத்துல
"தான்" ஒரு அறிவாளினு இரண்டுபேரும் கட்டிகிட்டு பின்னாடி
உண்மை நிலவரம் தெரியும்போது.

// ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள்.//

இது எல்லா குடும்பைங்களிலும் உள்ள பொதுவான பிரச்சனைதான்..
குற்றம் பிள்ளைகளிடமும் , எப்போதும் நடுத்தர வர்க்க சிந்தனையுள்ள
கணவன்/மனைவி இடமும்தான்.

கல்யாணம் முடிந்து ஒன்று / இரண்டு ஆண்டுகள் காமமுடனும்..
அடுத்த ஐந்து / ஆறு ஆண்டுகள் காதலுடனும் ..மிதியுள்ள அனைத்து
காலமும் பிள்ளைகள், பிரச்சனைகள் என்றே வாழ்கிறார்கள்..
காதலும் சரி காமமும் சரி காணாமல் போகிறது..
ஏன் அது திண்டதகாத செயல் ஆகிவிடுகிறது..

பிள்ளைகள் நாமும் அவர்களது தனிமைக்கு இடம் கொடுப்பது இல்லை.
எத்தனை கணவன்/மனைவி பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இரண்டாவது
தேன்நிலவு பத்தியோ அல்லது ஒரு "Jolly Trip" பத்தியோ நினைகிறார்கள்..

அடுத்து .. சீரியல் வெற்றிக்கு காரணம் எல்லோருக்கும் உள்ள "Fantasy" தான் காரணம்

கடைசியாக.. வாழபோற 40 /50 வருசத்துல ஒரு சக மனுசனைகூட காதலிக்க
தெறியலைனா வாழறது "Waste"

நிறைய சொல்லனும்மு தோணுது... சரி விடுங்க.. "BP" தான் ஏறும்..

"Life is all about Love as of I know....."

என்ன நிறைய யோசிக்க வச்சிட்டிங்க..
மிக மிக மிக மிக அருமையா பதிவு..
மனச தோட்ட பதிவும்கூட...

என்றும் அன்புடன்
கருணா கார்த்திகேயன்

rapp said...

அட என்னங்க ரிஷான், பதிவை படிச்சீங்களா,இல்லையா? நாம எப்படிங்க எந்த விஷயம் உபயோகமானது, எதை நீ பார்க்கனும்னு இன்னொருத்தரை(வயது வந்த) கட்டுப்படுத்த முடியும். சரி கிரிக்கட் விளையாடினா உடம்புக்கு நல்லது, பார்த்தா யாருக்கு பிரயோஜனம்? இதனால் நமக்கும் அண்டை நாடுகளுக்கும் வெறுப்புணர்ச்சி அதிகமாகுதுன்னு சொன்னா ஏத்துப்பீங்களா? சரி சினிமாக்கு போறமே அதனால என்ன உபயோகம்? அதில் காட்டாத சொல்லாத விஷயங்களா சீரியலில் காமிச்சிட்டாங்க? இப்படி விதண்டாவாதம் பண்ணிகிட்டே போகலாம். எல்லாத்துக்கும் எல்லா சமயமும் ஒரு காரணம் இருக்கணும்னோ, உபயோகம் இருக்கணும்னோ அவசியமில்லை. அதுவும் தனிப்பட்ட ஒருவருடைய பொழுதுபோக்கைப் பற்றி குறைகூறும் தன்மை நல்லதா? அது குளியலறையை எட்டிப் பார்ப்பது போலத்தானே.
மூளையை சீரியல் மட்டுமா மழுங்கச் செய்கிறது? வயது வந்த ஒருத்தர் தன் நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று இன்னொருவர் கூறுவது அல்லது கருத்தை திணிக்க முயற்சிப்பது எப்படி சரியான ஒன்றாக இருக்க முடியும்?

rapp said...

கார்த்தி, நான் சொல்ல வரும் விஷயம் சீரியல் பார்க்கும் பெண்களை பற்றியது. அவர்களை மூன்று வகையாகப் பார்க்கலாம். சிலர் இயல்பிலேயே உணர்ச்சிவசப்படும் சுபாவமோ அல்லது ஒரு சண்டை சச்சரவென்றால் பஞ்சாயத்து செய்வதுமாக இருப்பவர்களாவர். இவர்களுக்கு நிஜமாகவே சீரியல் பார்ப்பது பிடித்திருக்கிறது. அவர்கள் அதை விரும்பியே பார்க்கிறார்கள். இவர்களை பொதுவாக ஆண்கள் ஏதோ ஒருத் தீய பழக்கம் உள்ளவர்களை போல சித்தரிக்க முயல்கிறார்கள். அது மிகவும் தவறு என்கிறேன். அவரவர் விருப்பப்பட்டபடி யாருடைய சுதந்திரத்திற்கும் இடையூறாக இல்லாமல், தன் போக்கில் ஒருவர்(வயது வந்தவர்) இருந்தால் எண்ணத் தவறு? அவர்களை ஏன் அநாவசியமாகக் குறை கூறுகிறார்கள்?

இரண்டாவது வகைப் பெண்கள் இதில் என்ன இருக்கிறதென்று, சும்மா உட்காரும்போது, தனக்கு பிடித்த வேறொரு விஷயம் இல்லையெனும்போது பார்ப்பவர்கள். இவர்களை நான் மேற்குறிப்பிட்ட விமர்சனம் பாதிப்பதில்லை.

மூன்றாம் வகைப் பெண்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வேறு எவ்வாறு நேரம் கடத்துவது எனத் தெரியாமல், வீட்டிலுள்ளவர்களை நாடியும் பயனில்லாமல் ஒரு வித விருப்பமின்மையுடன் சீரியல் பார்க்கிறார்கள். இதில் இளைய தலைமுறையை குற்றம் சாட்டுவது எல்லா விதத்திலும் சரி வராது. வாழ்க்கை துணை என ஒருவர் இருக்கும்போது அவர் பகிர்ந்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்க வேண்டுமல்லவா? குழந்தைகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்ன பெற்றோரை பிடித்து தனித் தனி அறையில் அடைத்தா வைத்திருக்கிறார்கள். தன் வீட்டில்,தன் மனைவியிடம் மனம்விட்டுப் பேச, கலகலப்பாக இருக்க திடீர் என தயக்கம் வருவதேன்? பிடித்த விஷயங்களை செய்வதற்கு நேரம் காலம் ஒரு பொருட்டா? இல்லை மனைவி பிடிக்காத ஒருவராகிவிட்டாரா? மாற்றத்துக்கு மனதுதான் தேவை

எம்.ரிஷான் ஷெரீப் said...

// நாம எப்படிங்க எந்த விஷயம் உபயோகமானது, எதை நீ பார்க்கனும்னு இன்னொருத்தரை(வயது வந்த) கட்டுப்படுத்த முடியும். //

நம்மால யாரோ ஒருத்தரை அப்படிக் கட்டுப்படுத்த முடியாதுதான்.ஆனா சம்பந்தப்பட்டவங்க நம்ம பெற்றோராகவோ,உடன்பிறப்புகளாகவோ,சகதுணையாகவோ,நண்பர்களாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு முறையற்ற வழியில் செல்லும் போதோ,நேரத்தை வீணாக்கும் போதோ அதுபற்றிக் கேட்டு அறிவுரை பகிர்வது நம் கடமையல்லவா? அப்படியில்லாவிடில் அந்த உறவின் பெயர் சொல்லி உரிமை கொண்டாடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது?

// சரி கிரிக்கட் விளையாடினா உடம்புக்கு நல்லது, பார்த்தா யாருக்கு பிரயோஜனம்? இதனால் நமக்கும் அண்டை நாடுகளுக்கும் வெறுப்புணர்ச்சி அதிகமாகுதுன்னு சொன்னா ஏத்துப்பீங்களா? //

இதுபற்றிக் கருத்துச் சொல்லமுடியவில்லை.
நான் டீவி பார்ப்பதோ,கிரிக்கட் மேட்ச் பார்ப்பதோ இல்லை.

// அதுவும் தனிப்பட்ட ஒருவருடைய பொழுதுபோக்கைப் பற்றி குறைகூறும் தன்மை நல்லதா? அது குளியலறையை எட்டிப் பார்ப்பது போலத்தானே.//

அப்படியில்லை சகோதரி..அது தவறான ஒரு பொழுதுபோக்காக இருந்தால் தட்டிக்கேட்கத்தானே வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒருவரின் பொழுதுபோக்கு நீலப் படங்களின் சீடி சேகரிப்பதும்,அவற்றின் புகைப்படங்களைச் சேகரிப்பதும்..
தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.ஒரு உதாரணத்திற்கு இதே பொழுதுபோக்கை உங்கள் மகன் செய்தால் தடுக்காமல் இருப்பீர்களா? இல்லை அது அவருடைய குளியலறைக்குள் எட்டிப் பார்ப்பது போன்று என்று பேசாமல் இருப்பீர்களா?

//மூளையை சீரியல் மட்டுமா மழுங்கச் செய்கிறது? //

இதற்கான பதிலை நண்பர் நிர்ஷனின் http://puthiyamalayagam.blogspot.com/2008/03/blog-post_31.html இந்தப் பதிவு கூறும் என எண்ணுகிறேன்.

லதானந்த் said...

அன்புள்ள ராப்

சீரியல்கள் தானே கொஞ்ச காலத்தில் வலுவிழக்கும். அதைப் பற்றி வருத்தப்படத்தேவையில்லை!

என்னுடைய சில கருத்துக்கள்.

என் மனைவி இரவு 8 மணிக்கு மேல் சீரியல் பார்ப்பதால் இரவு 10.30 வரை இடையூறில்லாமல் எழுத முடிகிறது.

உங்கள் கட்டுரை மிக நீளமாயிருக்கிறது. நிறையப் பகுதிகளை scroll செய்துவிட்டேன். sorry.

நீங்கள் எவ்வளவு காலமாய் பிளாக்கில் எழுதுகிறீர்கள்?

எழுத்துப் பிழைகளைக் குறைக்க முயலுங்கள்.
வாழ்த்துக்கள்!

rapp said...

என்ன ரிஷான், நான்தான் சட்டத்திற்குட்பட்ட விஷயங்கள்னு திரும்ப திரும்ப சொல்லிருக்கேன். நீங்க நீலப் படம்னு சொன்னா அது சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றா? அதேப்போல் வயது வந்த ஒருவரென்னும் போது அவர் இருபத்தொரு வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர். இதையும் நான் திரும்ப திரும்ப கூறியுள்ளேன் . என் மகன் சிறுவனாக இருக்கும்வரைதான் அவனுக்கு நான் நல்லது கெட்டதை சொல்லிப் புரியவைக்க முடியும்.இருபத்திரண்டு வயதில் நான் அந்த வேலையே செய்தால், கண்டிப்பாக குளியலறையை எட்டிப்பார்ப்பது போலத்தான். நீங்கள் வசதியாக நான் சொன்னவற்றை எல்லாம் புறம்தள்ளிவிட்டு வாதம் செய்யலாமா?

சரி கிரிக்கட், டி.வி பார்க்காத நீங்கள் சீரியல் பார்க்கிறீர்களா? இல்லை எனும்போது அதைப் பற்றி மட்டும் கருத்து கூறுகிறீர்களே? அது எந்த ஊர் ஞாயம்?

அதுமட்டுமன்றி சட்டத்திற்குட்பட்ட ஒரு பொழுதுபோக்கை சட்டத்திற்கு புறம்பான விஷயங்களோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும்.

உங்கள் தாயாகி விடுவதாலோ, மனைவியாகி விடுவதாலோ உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் உறவின் பெயரை சொல்லி அவர்களின் இந்த சிறு சந்தோஷங்களைக் கூட பறிப்பது ஆதிக்க மனோபாவம்தானே? ரெண்டாவது, பிரச்சினை உங்கள் தாயை பற்றியோ, என் தாயை பற்றி மட்டுமோ அல்ல, பெரும்பான்மையானவர்களை பற்றி.

rapp said...

நீங்கள் எழுதுவதற்கும் அவர்கள் நிறுத்துவதற்கும் என்ன சார் சம்பந்தம் இருக்கிறது? அப்படியே அவர் உங்களுக்காக பார்ப்பதை நிறுத்தி இருந்தால் அது மிகவும் அழகான விஷயம். இதனை நீங்களும் உணர்ந்து வேறொரு விஷயத்தை அவருக்காக விட்டுக்கொடுப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட தம்பதிகளாக இருப்பின், இந்தப் பதிவு உங்களைப் பற்றியது அல்ல. இங்கு பிரச்சினையே வேறு. என் பதிவில் தவறுகள் ஏற்பட முக்கிய காரணம் எனக்கு மிக மிக வேகமாக எழுதும் பழக்கம். அதனால் தட்டச்சு செய்யும்போதும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இன்னொருப் பிரச்சினை, எனக்கு நான் எழுதும் விஷயங்களை பார்க்கும்போது என் மனதிலுள்ளவைகள் தான் வரிகளாகத் தெரியும். இதனால் எழுத்துப்பிழைகள், சில சமயம் சந்திப் பிழைகளும் ஏற்படுகின்றது. இதனை போக்க முயற்சிக்கிறேன். நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

ஆழ்ந்து படித்தேன். நான் இதுபற்றி யோசித்திருந்தாலும் அடிப்படையில் நானும் ஓர் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதி என்பதால் முன்பு சில கோணங்கள் எனக்கு பிடிபடவில்லை. இதே போல் 50 வயதை தாண்டிய ஆண்கள் சிலர் கஷ்டப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன். பெண்கள் எல்லோரும் ராஜகுமாரனைத் தேடுகிறார்கள். குமாஸ்தாக்களை திருமணம் செய்ய நேரிடுகிறது. எல்லா ஆண்களாலும் ராஜகுமாரன் ஆக முடிவதில்லை. ஒரு ஆண் தன் மனைவியை மட்டும் சார்ந்து இருக்கும் 50+ வயதில் தன்னாலும் தன் குடும்பத்தாராலும் செய்யப்பட்ட தவறுகளுக்கு பழிவாங்கப்படுகிறான். அவர்கள் இலக்கற்று நூலகங்களிலும், பல வெளியிடங்களில் அலைவதைப்பார்த்திருக்கிரேன். அம்மாதிரி பெண்கள் செல்ல இயலாத சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான்.

(i will back after discussing with my wife)

கிரி said...

பதிவு மெகா சீரியல் மாதிரி இருக்கு..;-)

உங்களை கொஞ்சம் கேள்விகள் கேட்க வேண்டி இருக்கு..இருங்க கொஞ்சம் வேலைய முடித்துட்டு வந்துடுறேன் ..:-)

rapp said...

நெம்ப நன்றி முரளிக்கண்ணன் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.//பெண்கள் எல்லோரும் ராஜகுமாரனைத் தேடுகிறார்கள். குமாஸ்தாக்களை திருமணம் செய்ய நேரிடுகிறது. எல்லா ஆண்களாலும் ராஜகுமாரன் ஆக முடிவதில்லை. ஒரு ஆண் தன் மனைவியை மட்டும் சார்ந்து இருக்கும் 50+ வயதில் தன்னாலும் தன் குடும்பத்தாராலும் செய்யப்பட்ட தவறுகளுக்கு பழிவாங்கப்படுகிறான். அவர்கள் இலக்கற்று நூலகங்களிலும், பல வெளியிடங்களில் அலைவதைப்பார்த்திருக்கிரேன்//நீங்கள் கூறுவதை நான் வழிமொழிகிறேன்.ஆனால் அதேமாதிரி பெரும்பான்மையான ஆண்கள் மிக அழகான சிகப்பான ஒல்லியான நல்ல உயரமுள்ளப் பெண் தேவை என்றுதானே விரும்புகிறார்கள். இந்த வாசகம் இல்லாத மணமகள் தேவை விளம்பரங்களை நான் பார்த்ததே இல்லை எனலாம். ஆனால் இருபாலருமே பெரும்பான்மையாக உண்மையை உணர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். பின்னர் தான் இப்படிப்பட்டப் பிரச்சினைகள் ஆரம்பமாகிறது.

rapp said...

வாங்க கிரி, நேரம் கிடைக்கும் போது, பொறுமை இருக்கும் போது படித்தால் போதும். நான் அவசரப் படுத்தவில்லை. எண்ணக் கேள்வி கேட்கப் போகிறீர்கள், உனக்கு பெண்ணிய வாதப் பிரதிவாதங்களை தவிர வேறொன்னும் தெரியாதா என்றா? என்னை என்ன பண்ண சொல்றீங்க? அது என் ரத்ததிலயே ஊறிப்போன விஷயமாகிடுச்சி. பதிவின் நீளம் குறித்தும் உங்களுக்கு எரிச்சல் வரும். புரிகிறது, தவறு தெரிகிறது, ஆனாலும் சில சமயம் என்னால் எடிட் செய்யவே முடியவில்லை. என்னிடமுள்ள மிகப் பெரிய குறை. ஒத்துக் கொள்கிறேன்.

கிரி said...

//இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்?//

தற்போது தான் வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதுவரை வீட்டிலேயே இருந்து வந்தார்கள் வாய்ப்பு கிடைக்காமல். இதனால் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்கு வேற என்ன பொழுது போக்கு? அதுவே அவர்கள் பார்ப்பதற்கு காரணம். அதுவுமில்லாமல் ஆண்களை விட பெண்களுக்கு இந்த செண்டிமெண்ட் சமாச்சாரங்களில் ஆர்வம் அதிகம், ஆண்களை ஒப்பிடும் போது.

//சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.//

நான் அவ்வாறு கருதவில்லை. நம் சமூகத்தில் பெண்களுக்கான உயர்வை ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை கிடையாது. பெண்களை உயர்த்தி கூறி படமெடுத்தால் அதற்க்கு பெண்களே ஆதரவு தருவதில்லை. ஆண்களை பற்றி கேட்கவே வேண்டாம். புதுமை பெண், இந்திரா போன்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எத்தனை பெண்கள் இந்தியாவில் நடக்கு பெண்கள் கிரிக்கெட் க்கு ஆதரவு தந்து இருக்கிறார்கள்?

//தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது//

நீங்கள் சொல்வது சரி தான். இது தான் மனித இயல்பு. தனக்கு பிடித்த ஒன்று கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்கும் இடம் அல்லது ஓரளவு சமாதனம் அடைய கூடிய அளவுக்காவது உள்ள இடம் நோக்கி செல்வது. இது பெண்கள் மட்டும் இல்லை அனைவருக்கும் பொதுவான ஒன்று தான்.

//இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன்//

இதை நான் மறுக்கிறேன். ஆண்கள் பார்க்க ஆரம்பித்து சீரியல்களை மாற்றும் அளவுக்கு இன்னும் நிலைமை வரவில்லை, வரவே வராது என்று கூறவில்லை.

//பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்//

தவிர்ப்பவர்கள் எவ்வாறு தவிர்ப்பார்கள் கூறுங்கள்? ஒன்று அவர்கள் வீட்டில் இல்லாமல் வெளியே செல்ல வேண்டும். அல்லது வேறு எங்காவது தொலைக்காட்சி இருக்க வேண்டும், அல்லது நண்பர்களோடு ஊர் சுத்த வேண்டும் இல்லை என்றால் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வர வேண்டும். இந்த முறைகள் எதுவுமே குடும்பத்துக்கு நல்லது இல்லை.

//ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? //

பெரும்பான்மை மட்டுமே காரணம். ஒரு பெண்ணை ஆண் பார்த்தால் அவன் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறான் என்று ஏன் அனைவரும் முடிவு செய்கிறார்கள்? காரணம் பெரும்பான்மையானவர்கள். ஆண்கள் பார்ப்பவர்கள் அனைவரும் தவறான கண்ணோட்டத்தில்யே தான் பார்க்க வேண்டுமா? நல்ல எண்ணங்களை கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அதை போலவே தான் இதுவும். எண்ணிக்கை அதிகம் என்பதால் கண்ணோட்டமும் அவ்வாறாகி விட்டது. ஏன் அனைத்து பெண்களுமா சீரியல் பார்க்கிறார்கள்? எத்தனையோ பேர் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் இருக்கிறார்களே.

//எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? //

மட்டம் தட்டுபவர்கள் எந்த வழியிலும் மட்டம் தட்டுபவர்களே..இது மட்டுமே காரணம் இல்லை.

//குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? //

இவர்களை பற்றி எல்லாம் இந்த மாதிரி கேள்வி கேட்கவே தேவையில்லை. எனென்றால் இவர்கள் எல்லாம் எப்படி கூறினாலும் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்கள்.

//பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?//

நீங்க எதை நிறுத்தினாலும் குழந்தைகள் எதையும் நிறுத்த மாட்டார்கள்.. எனென்றால் காலம் அப்படி. இங்கே கிடைக்கவில்லை என்றால் வேறு இடம் பார்க்க துவங்கி விடுவார்கள்.

//எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன.//

உண்மை தான்.

//வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? //

நம் சமூகம் தான். காலங்காலமாக அப்படியே பழகி வந்தவர்கள் எப்படி உடனே மாறுவார்கள். மாறவும் முடியாது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள். சிறு உதாரணம் தற்போது புழங்கும் நைட்டி, ஜீன்ஸ், பெண்கள் வேலைக்கு போவது, பல நிலைகளில் சம உரிமை போன்றவை. இதை ஒரு விசயமாக கூறவில்லை. முந்தய காலத்தில் எப்படி இருந்தது இப்பொழுது எவ்வாறு மாறி இருக்கிறது என்பது. பல நூறு ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறியது உடனே மாற வாய்ப்பே இல்லை. இன்னும் பல பெண்களே நீங்கள் கூறுவதை கூறி கொண்டு இருக்கும் போது ஆண்கள் ஏமாத்திரம்.. எனவே மாற்றங்கள் வரும் ஆனால் தாமதாமாக. அதுவரை நீங்கள் கூறும் உரிமை பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

//எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்//

இதை போலவே பல பெண்களின் நிலை. இந்த காலத்து பெண்ணான உங்களுக்கே உங்கள் அம்மாவின் நிலை உடனே பிடிபடவில்லை, நீங்களும் அது வரை உங்கள் அம்மாவுக்கு ஆதரவாக அல்லது அவர்கள் மனது சந்தொசப்ப்படும்படி நடந்து கொள்ள்ளவில்லை என்பதை உணரவில்லை, என்று உங்கள் அம்மாவின் கூற்று சொல்கிறது. அப்படி இருக்க அனைவரின் மீதுமே தவறு இருக்கிறது.

//இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

பலரின் நிலை இது தான் இன்னமும். மனைவியின் ஆசைகளை எண்ணங்களை எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளாதவர்களாகவே பல கணவன்மார்கள் இருக்கிறார்கள்.

//வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?//

விதி தான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

//என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம்//

சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், இது தான் உண்மை.

//ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? //

அதற்க்கு எண்ணங்கள் உயர வேண்டும். அவை மிக மெதுவாக நடந்து கொண்டு இருப்பது கசப்பான உண்மை.

//புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ//

இதற்கும் காரணம் சமூகம் தான். ஏற்கனவே விரிவாக கூறி விட்டேன்.

-------------------------------------------------------------------------------------

நான் உங்களுக்கு கூறவிரும்புவது. பிரச்சனை ஆண்களிடம் இல்லாமல் இல்லை, ஆனால் ஆண்களை மட்டுமே குறை கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பெண்களும் இவ்வகை பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். உங்கள் பதிவுகளை மற்றும் பின்னூட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து வருகிறேன், நீங்கள் பெண்கள் மீது கொண்டுள்ள அன்பையும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், தவறாக தோன்றினால் கேள்வி கேட்பதும் நல்ல விசயமே. ஆனால் நீங்கள் எதிலும் கோபத்திலும் அவசரத்திலுமே பேசுவதாக எனக்கு தோன்றுகிறது. கோபம் வேண்டும், ஆனால் அது ஆராய்ந்த பிறகு நன்கு யோசித்த பிறகு வரும் கோபமாக இருக்க வேண்டும். அனைத்திற்கும் கோபப்பட்டால் அல்லது அவசரப்பட்டால் வாழ்வில் எதுவுமே தவறாக தான் தோன்றும். பிரச்சனை இல்லாத மனிதர்கள் யார்? தவறு செய்யாத மனிதர்கள் யார்? அனைத்தையுமே சரியாக செய்யும் மனிதர்கள் இருகிறார்களா? குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது, அந்த குறைகளையும் நிறைகளாக மாற்ற தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அது தெரியாதவர்கள் தன் நிலை கண்டு வருந்தி கொண்டே இருக்கிறார்கள்.

பின் குறிப்பு

பதிவு பட்டை சரி இல்லைன்னு மூன்று பதிவு பட்டையை போட்டு வைத்து இருக்கீங்க? :-))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ராப்
உன் பதிவினுடைய தொனி உங்கம்மா வேலைக்கு செல்லாதவரைப் போல் தோன்றியது.மன்னிக்கவும்.


//வேலைக்கு போகின்ற மனைவியோ இல்லை செல்லாதவர்களோ ஆண்கள் காது கொடுக்கத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் எந்தவித சாக்குகளும், சமாதானங்களும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.//

அடப்பாவமே! நான் எங்க சாக்குபோக்கு சொன்னேன்?
யாராரிடமோ பேசும் நாங்கள் மனைவியிடமும் தினமும் நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும் என்பதை எந்த Male chauvinism இன்றி ஒத்துக் கொள்கிறேன் என்று தானே சொன்னேன், இதுக்கு அப்புறமும் என்னை விரட்டி,விரட்டி துரத்துனா என்ன பண்றது?

rapp said...

அப்துல்லா, நான் உங்களை ஒன்றுமே கூறவில்லை. உங்களின் கருத்திற்கு எதிர் வாதம்தான் வைத்தேன். ஏன் வர்றவங்கல்லாம் மாற்றுக் கருத்து சொன்னாலே உங்களை தனிப்பட்ட முறையில் நான் தவறாக கூறிவிட்டதாக எண்ணுகிறீர்கள்? என் கருத்திற்கு நீங்கள் மாற்றுக்கருத்து வைப்பதை, பாத்தியா நம்ம அப்துல்லா, என்ன பேத்துரேன்னு சொல்றாருன்னா நினைச்சேன். எல்லா இடங்களிலும் வாதப் பிரதிவாதங்கள் இருக்கணும். அப்போதானே நிறையக் கருத்து பரிமாற்றங்கள் நடக்க முடியும்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அப்துல்லா, நான் உங்களை ஒன்றுமே கூறவில்லை. உங்களின் கருத்திற்கு எதிர் வாதம்தான் வைத்தேன்//

உன் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப்போன பின் அங்கு எதற்கு எதிர்வாதம் வந்தது? அதனால்தான் அப்படிக் கேட்டேன். எந்த இடத்திலும் என் கருத்தை எடுத்து வைக்க நான் தயங்குவதும் இல்லை. அதேபோல் பிறர் கருத்து என் கருத்தை விட சரியாக இருந்தால் ஒத்துக் கொள்ளவும் தயங்குவதும் இல்லை. இதையெல்லாம் தனிப்பட்ட விமர்சனமாக நான் எடுத்துக் கொள்வதும் இல்லை.

மங்களூர் சிவா said...

rapp இங்கயே வந்து எல்லா பின்னூட்டங்களையும் படித்தேன்.

நிறைய யோசிக்க வேண்டிய விசயங்கள்.

இருந்தாலும் பல விஷயங்களில் மனம் ஒப்பாமல் இருக்க என் வயதும் அதை சார்ந்த சிந்தனையும் காரணமாக இருக்கலாம் என என்னுகிறேன்.

அருமையான பதிவு.

rapp said...

//உன் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப்போன பின் அங்கு எதற்கு எதிர்வாதம் வந்தது? அதனால்தான் அப்படிக் கேட்டேன். எந்த இடத்திலும் என் கருத்தை எடுத்து வைக்க நான் தயங்குவதும் இல்லை. அதேபோல் பிறர் கருத்து என் கருத்தை விட சரியாக இருந்தால் ஒத்துக் கொள்ளவும் தயங்குவதும் இல்லை. இதையெல்லாம் தனிப்பட்ட விமர்சனமாக நான் எடுத்துக் கொள்வதும் இல்லை//அப்துல்லா எதிர் கருத்துன்னு சொல்றது எதிரான கருத்தில்லை, சில மாற்றங்களோட சொல்லப்படற(அதாவது உங்க கருத்துக்கு நான் முழுசா உடன்படலைனா, ஆனாலும் ஆதார கூற்று ஒண்ணா இருக்கும்) கருத்து. மாற்றுக் கருத்துங்கரதுதான் மொத்தமா வேற ஒரு வ்யூனு என்னைப் பொறுத்த வரைக்கும் இவ்வளவு நாளா நெனச்சிக்கிட்டுருக்கேன். நீங்க வேலைக்குப் போகும் பெண்கள் வீட்ல டயர்டாகி அமைதியா இருப்பாங்கன்னு சொல்லிருந்தீங்கள்ள, அதைத்தான் நான் முழுசா ஏத்துக்க முடியலனு சொன்னேன். நான் ஒரு பெண் என்பதால், என்னுடைய வீட்டில் எங்கப்பாவை தவிர எல்லோரும் பெண்கள், என் நண்பிகள் வட்டம், இன்னும் பொதுவான விதத்தில் பழகிய பெண்கள்னு பார்த்து, அனுபவப் பூர்வமாக உணர்ந்து சொல்றேன். அமைதியா இருக்கறதும், களேபரமா இருக்கறதும், ஜாலியா இருக்கறதும் முக்கால்வாசி அவங்களோட பொதுவான குணமாகத்தான் இருக்கும். இதற்கும் அவங்க வேலைக்கு போய் வரதுக்கும் சம்பந்தமே பெரும்பான்மையா இருக்காது. இது ஒன்னைத்தான் அங்க நான் சொல்ல வந்தேன். தெளிவா விளக்காதமைக்கு வருந்துகிறேன். நான் மாற்றுக் கருத்து வைக்கவில்லைங்க.அதோட நீங்க தனிப்பட்ட விமர்சனமா எடுத்துக்காதவர்னு தெரிஞ்சிகிட்டேன். நெம்ப சந்தோஷம். வேறு சிலர் அப்படி எடுத்துக்கறாங்க. நீங்க அப்படி எடுத்துக்கப் போறீங்கன்னுதான், தப்பா எடுத்துகாதீங்கன்னு சொன்னேன். மத்தபடி நீங்க வந்து கருத்து போட்டதுக்கு நெம்ப நன்றி. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாங்க.

rapp said...

சிவா நெம்ப நன்றி, நீங்க இதுல கூறப்பட்ட விஷயங்களில் ஒன்றை கூட ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நீங்க வந்து நேரத்தை செலவிட்டு இத்தனை பின்நூட்டங்களிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது வெறும் என்னோட கருத்துக்கள். உங்களின் பார்வைக்கு என்னோட கருத்துக்களை வைக்கிறேன். இவைகளை பார்த்து உங்களின் வாதங்களை வைத்ததற்கு நெம்ப நெம்ப நன்றி(அதுக்காக இனிமே ஒன்னோட நிறுத்திக்காதீங்க, நெறைய போடுங்க). இப்படி விவாதம் பண்ணாத்தான நாலு விதமான தரப்புகளின் கருத்துக்களும் நமக்கு வந்து சேரும். இந்த ஒரே காரணத்துக்காகத்தான் நான் பின்னூட்டங்களை விரும்புறேன். உங்களின் பங்களிப்புக்கு என் நன்றிகள்.

லேகா said...

தொலைகாட்சியை தொல்லைகாட்சி ஆக்குவதே இந்த தொடர்கள் தான்....கொலை,பழிவாங்கல்,சூனியம் வைத்தால் என அப்பப்பா...என ஒரு மட்ட ரக கற்பனை இவர்களுக்கு..அறிவியல் தொடர்கள் ,குழந்தைகளுக்கான அறிவுபூர்வமான மாயாஜால தொடர்கள் ஊக்குவிக்க பட வேண்டும்..உங்கள் அலசல் சரியானதே..பூனைக்கு மணிகட்டுவது யாரோ..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/

rapp said...

உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றிங்க லேகா

விஜய் said...

பெண்கள் ஏன் சின்னத் திரை சீரியல் அதிகம் பார்க்கிறார்கள் ஒரு புது அணுகுமூறை.

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

Sri said...

அக்கா இப்போதான் முதல்முதலா உங்க ப்ளாக்குக்கு வரேன்..மே மாதத்திலிருந்து நீங்க போட்ட எல்லாப் பதிவையும் (பின்னூட்டம் உட்பட)படிச்சேன். முதலில் எதை எழுதனு ஆரம்பிச்சு ரொம்ப அழகா முன்னேறி இருக்கீங்க..எல்லாப் பதிவையும் படிச்சிட்டு உங்க ஃபார் ஆப்பிள்‍ல மட்டும் பின்னூட்டம் போடலாம்னு நினைத்தவள் தலைல நல்லா கொட்டு வைத்தது இந்தப் பதிவு.முதலில் பதிவின் நீளம் பார்த்து அப்பறமா படிக்கலாம்னு நினைத்தேன்.. நல்லவேளை இப்போவேப் படித்தேன்.. இல்லையென்றால் ஒரு நல்ல பதிவை மிஸ் பண்ணியிருப்பேன். பதிவைப் படித்தப்பிறகு நீங்கள் இதை எழுதியதின் அவசியத்தையும், வலியையும் உணர்ந்தேன்.என் வீட்டில் நாங்கள் இருக்கும் வரை என் அம்மா சீரியல் பார்த்ததில்லை, இப்பவும் பார்ப்பதில்லை முடிந்த வரை அவர் தன்னை ஏதாவதொரு வேளையில் பிஸியாக வைத்துக்கொள்கிறார்.எந்த வேளையும் இல்லை என்றாலும் வேறு ஏதாவது பார்ப்பாரே ஒழிய சீரியல் பார்ப்பதில்லை.ஆனால் இப்பொழுதெல்லாம் டி.வி-ய தொடவே பயமா இருக்கு அவ்ளோ சீரியல்ஸ்..இதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு..!! :-(

சரவணகுமரன் said...

பயங்கரமான ஆய்வா இருக்குதே இது... :-)