Monday 26 May, 2008

பாதை

http://fr.youtube.com/watch?v=ZeLvbpWrSow&feature=related
எனக்கு மேலே குறிப்பிட்ட காட்சியில் வரும் வசனம் நிரம்பப் பிடிக்கும். அதில் உள்ள வசனத்தை பொது நோக்கோடு மட்டுமில்லாமல் சில சமயம் நம் சொந்த வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். எனக்கு ஏன் திடீர் நினைவு ஏற்பட்டதுன்னு கேட்டீங்கன்னா, நேற்றைக்கு காலையில் எங்களின் flatஐ விட்டு வெளியே வந்து செடிகளுக்கு தண்ணீர் இட்டுக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது எங்களின் பக்கத்து வீட்டம்மா(அவர்கள் tunisseeஐ சேர்ந்தவர்கள்) வெளியே வந்தார்கள்.வழக்கம் போல் என்னிடம் மிக அன்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களுடைய கோடை விடுமுறை திட்டங்களை பற்றி கேட்டார்கள். பின்னர் தாங்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார்கள். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் வருடா வருடம் கோடையில் இரண்டு மாதங்கள் அவ்வாறு செல்வது வழக்கம். அப்பொழுதான் தாங்கள் நிரந்தரமாக செல்வதாக கூறினார்.எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏனென்றால் அது அவர்களின் சொந்த flat அதோடு அவர்கள்தான் எங்களுடைய கட்டடத்தின் guardien ஆக இருப்பவர்கள். அனைத்து காரியங்களிலும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்பவர்கள். என்னிடம் மிக மிக அன்பாகப் பழகி வந்தவர்கள். கொஞ்சம் நாட்களாக அவருடைய கணவர் மிக இளைத்தும் சோர்வாகவும் காணப்பட்டதை கவனித்திருந்தாலும், அவருக்கு புற்று நோய் எனக் கூறியவுடன் அதிர்ந்து விட்டேன்.

இதை படிக்கும் சிலருக்கு overreact செய்கிறேனோ எனத் தோன்றலாம். ஆனால் மொழித் தெரியாத தேசத்தில் நாம் முதலில் பழகும் அல்லது நம்மிடம் முதலில் அன்போடு பழகும் அன்னியரைக் கூட நாம் நம் வாழ்வின் ஒரு இன்றியமையாத அங்கமாக சேர்த்துக்கொள்வோம். இது தமிழகத்திலிரிந்து ஆங்கிலம் பேசாத நாட்டிற்கு செல்பவர்கள் நிதர்சனமாக உணரலாம். அவர்கள் எனக்கு அப்படிப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர் பிரிந்து செல்கிறார் அதுவும் ஒரு சோக நிகழ்விற்காக எனும்பொழுது அறிவும் மனதும் சேர்ந்து உணர்ச்சிவயப்பட்டது. அப்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் என் மனதுள் கிளப்பிய எண்ணங்கள், புரிதல்கள், நன்றிகள் ஏராளம். தனக்கு உள்ள மொழிப்பிரச்சினயாலும், கணவருடைய திடீர் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத பொருளாதார நெருக்கடியாலும் தான் இவ்வாறு முடிவெடுத்ததாக கூறினார். மேலும் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என்றால் தனக்கு கல்வியறிவு மிக குறைவு என்றார்.

அச்சமயம் என்னையுமறியாமல் மேலே குறிப்பிட்ட வசனம்தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு முதுகலை பட்டதாரி. என் தாயும் ஒரு முதுகலை பட்டம் பெற்றவர். ஆனால் நாங்கள் இந்த நிலையை எவ்வாறு அடைந்தோம் எனப் பார்த்தால், அந்நிலையை நோக்கிய என் தாயின் பயணத்தை ஒப்பிட்டால் என்னுடைய பயணம் ஒன்றுமே இல்லை. என் தாத்தா பெண் பிள்ளைகள் படிக்கவே கூடாது என்னும் பழமையானக் கொள்கையில் அவ்வளவு உறுதி கொண்டவராம். அப்பொழுதைய காலக்கட்டத்தில் அது சாதாரணமானது என்றாலும், கணவன் சொல்லை, அது மடமையின் உச்சபட்ச கருத்தாக இருந்தாலும், பின்பற்றாத மனைவிக்கு என்ன அவப்பெயர்கள் ஏற்படும் என்பதும், நமக்கெல்லாம் தெரியும். எனினும் என் பாட்டி அக்காலக் கட்டத்திலும் தன் ஐந்து பெண் பிள்ளைகளையும் அரும்பாடுபட்டு படிக்க வைத்தாராம். அதற்கு உதவிய ஆசிரியர்களை இப்பொழுதும் என் தாய் நன்றிப்பெருக்கோடு நினைவு கூறுவார்கள். எவ்வளவு அவமரியாதை செய்தாலும், ஊரிலேயே மிகப் பெரிய மனிதர் அவரை பகைத்துக் கொள்கிறோமே என்ற பயப்பட்டாமல் இவர்கள் வீட்டுக்கே வந்து கற்பித்தார்களாம். பின்னர் என் தாத்தா மனம் மாறி நல்ல பள்ளியில் படிக்க வைத்தபோதும் வீட்டில் படிப்பதற்கு சில வினோத இடையூறுகள் ஏற்படுமாம்.

சிலகாலத்திலேயே தாத்தா தேர்ந்த முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொண்டாலும், அன்று எந்த நேரடிப்பயனும் பெறமாட்டோம் எனத் தெரிந்தும் முதல் முக்கிய முயற்சியை எடுத்த என் பாட்டியும், அதற்கு அச்சமில்லாமலும் கூச்சலிடாமலும் தங்களின் உறுதியான உதவியை அளித்த ஆசிரியர்களும் தான் என் தலைமுறையில் நான் எதிர்கொண்ட மகிழ்வான பயணத்துக்கு எளிதான பாதையை அமைத்துக்கொடுத்தவர்கள். என் தாயின் காலக் கட்டத்தில் படித்து பட்டம் பெற்ற நிறையப் பெண்களின் பாதை இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கமும் எதிர்கால சந்ததியின் நலன் ஒன்றையே லட்சியமாகக் கொண்டவர்களினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை நாம் மறக்கவே கூடாது.

இன்றியமையாதத் தருணங்களில் கல்வி நமக்கு தரும் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏராளம். அதற்குக் காரணமானவர்களை, எந்தப் பயணையும் எதிர்பார்க்காத, தன் மரத்தின் கனிகளையே சுவைக்காத வேர்களை, அவர்கள் ஏற்படுத்தித் தந்த பாதையை, நாம் முடிந்தளவில் போற்ற வேண்டும்.

5 comments:

ambi said...

சரியா சொன்னீங்க. கல்வி தான் ஒருவருக்கு மிக பெரிய சொத்து. உங்க பாட்டியின் தொலை நோக்கு பார்வையை நினைத்து பிரமிக்கிறேன்.

pudugaithendral said...

சரியா சொன்னீங்க. கல்வி தான் ஒருவருக்கு மிக பெரிய சொத்து.


ரிப்பீட்டூ............

ambi said...

Linked in valai saram:

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_30.html

கோவை விஜய் said...

பென் கல்வியின் அவசியத்தை இதைவிட அருமையாய் சொல்ல முடியாது.
உங்கள் பாட்டி உண்மையில் ஒரு பெண் பாரதியார் தான்.

தமிழ்க் கவிஞன் பாரதிதான் பெண்கல்வி பற்றி முழங்கியுள்ளான்.
திவிஜய்
http://pugaippezhai.blogspot.com

கோவை விஜய் said...

//இன்றியமையாதத் தருணங்களில் கல்வி நமக்கு தரும் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏராளம். அதற்குக் காரணமானவர்களை, எந்தப் பயணையும் எதிர்பார்க்காத, தன் மரத்தின் கனிகளையே சுவைக்காத வேர்களை, அவர்கள் ஏற்படுத்தித் தந்த பாதையை, நாம் முடிந்தளவில் போற்ற வேண்டும்.//

அருமையான வார்த்தைகள்.

நமது முன்னேற்றத்திற்கு உழைத்திட்ட நல்ல உள்ளங்களை வணங்குவோம்.
அவர்தம் தியாகத்தை போற்றுவோம்.


தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com