Tuesday, 21 April 2009
Happy Earth Day :(:(:(
Thursday, 9 April 2009
கிலோ என்ன விலை?
பொதுவா, ஸ்டேட்போர்ட் சிலபஸ் எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்னாலும் துரதிஷ்டவசமா எங்க வீட்டுப்பக்கத்தில் அப்போ தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இல்லாததால, நான் மெட்ரிக்ல சேர்ந்தேன். அதோட எங்கம்மா வேற தான் பியூசில பிராக்டிகல்ஸ்ல தனிச்சு விடப்பட்டதால ஸ்டேட்போர்டு வேணாம்னுட்டாங்க. அதிருக்கட்டும், ஆனா இன்னிவரை ஒருவேளை அதுல படிச்சிருந்தா நான் அடிப்படைகளில் இன்னும் வலுவா பலப் பாடங்களில் இருந்திருப்பேனோன்னு தோணும். இங்க நான் வெறும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பத்தி தெரிஞ்சதை முதல்ல எழுதறேன்.
எங்கப்பா சென்னையில் இருக்கிற ஒரு பிரபலமான அரசு உதவிப்பெறும் பள்ளியில் வேலைப்பார்த்தவர். சென்னையோட வியாபார மற்றும் பொருளாதார இதயம்னு சொல்லலாம். எந்த ஏரியாவில் எந்த நகைக்கட, துணிக்கடை, உணவகம் அது இதுன்னு போனாலும் எங்க வீட்ல எல்லாருக்கும் சிறப்பு கவனிப்பு கொடுக்கறாப்போல குறைந்தபட்சம் அந்த பள்ளி மாணவர் ஒருத்தராவது இருப்பார். இன்னும் சொல்லனும்னா, ஷங்கர்ல ஆரம்பிச்சி, அஜீத் விஜய்னு ரெண்டுபேரையும் வெச்சி உலகமகா தொம்மைப்படமெடுத்த சவுந்தர்லருந்து, நம்ம பவர் பாண்டியன் வரை எல்லாரும் அந்தப் பள்ளிக்கூடத்தோட முத்துக்கள்தான். இந்தப் பள்ளிக்கூடம் இப்போ ஓரளவுக்கு அதோட கரஸ்பாண்டென்டால ஒகேவாகிக்கிட்டிருக்குன்னாலும் மத்த பல பள்ளிகளோட நிலைமை இப்டி இருக்கறதால இதை உதாரணமா வெச்சிப்போம். எல்லாப் பள்ளிக்கும் தெய்வநாயகங்கள் பிறந்து வர்றதில்லையே.
மேலே குறிப்பிட்டவங்கல்லாம் எங்கப்பாவை மரியாதையா ஐயாங்கும்போது ஜாலியாயிருக்கிற எனக்கு, அதேப்பள்ளியோட (அதாவது 1992-2002 காலகட்ட)ஜூனியர் மாணவர்கள் மட்டும், வினோதமா ஜயான்னு விளிக்கும்போது கடுப்பாகிடும். இவங்க இப்டி எழுதனும்னு அவங்களுக்கொன்னும் வேண்டுதல் இல்ல. அந்தளவுல அவங்களோட பள்ளியில் கல்வியின் தரம் இருக்குன்னு அப்புறம்தான் புரிஞ்சது.
அப்போல்லாம் அப்பா திருத்த வீட்டுக்கு கொண்டுவர்ற பேப்பர்கள எடுத்துப் படிச்சுப்பாத்து சிரிக்கிறது எனக்கும் எங்கக்காவுக்கும் பெரிய பொழுதுபோக்கு. அப்பா ஸ்கூலுக்கு போனா, பிரேக் சமயத்துல வேணும்னே பெரிய கிளாஸ் பசங்க கிட்ட போய் நக்கல் விடறதுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கறதுதான் பொதுவாழ்வுன்னு இருப்பேன். அவங்க பொதுவா ராவிடுவாங்கன்னாலும், தவ்ளூண்டுக்கிட்ட என்னாத்தப் பேசறதுன்னு விட்டிருவாங்க. டீல எச்சத் துப்பித்தர்றத்துக்கு நான் அப்ப டீயும் குடிக்கமாட்டேன்:):):)
இப்டியாக அப்பா கண்ல படாம நிம்மதியா ஓடிக்கிட்டிருந்த பொதுவாழ்க்கை, ஒரு நாள் பட்டு, பட்டுட்டேன் அறிவுரைகளால.
இத்தனைக்கும் இந்த பள்ளியோட ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள விட பசங்கக்கிட்ட நெருக்கமா இருப்பாங்க. பசங்கக் கிட்ட டீ வாங்கி வர சொல்றது உண்மைதான்னாலும், அதே பசங்களுக்கு வீட்ல கஷ்டம்னா தானே எக்சாம் பீஸ்லருந்து எல்லாத்தையும் அலட்டாம கட்டிருவாங்க. வருஷாவருஷம் பள்ளி மாணவர்களுக்கு தாங்களே காசைப்போட்டு சரவணபவன்லருந்து விருந்து ஏற்பாடு பண்ணிடுவாங்க. பசங்களுக்கு ஒண்ணுன்னா, ஹைகோர்ட் வக்கீல்களாட்டம் அப்டியே பொங்கி எழுவாங்க. எல்லாம் சரிதான், ஆனா அவங்களாட்டமே (நான் சொல்ற காலக்கட்டத்துல) தங்களோட இன்னொரு முக்கிய கடமையான கல்விப்புகட்டுதலை மறந்துட்டாங்க.
ரெண்டாங்கிலாசு படிச்சிட்டிருந்த நானு எட்டாங்கிலாசு ஒம்பதாங்கிலாசு பசங்க பேப்பரை படிச்சு கேலிப்பண்ற ரேஞ்சில இருந்திச்சுன்னா எப்டி? நான் கொழுப்பெடுத்து பண்ண வேலையாவே இருக்கட்டும், அவங்கள்ள பலர் அசாதாரண சூழல்ல படிக்கிறாங்கன்னே இருக்கட்டும், சரவணா ஸ்டோர்ஸ் குலக்கொழுந்துகள் கஜக்கர்ன சூர்ணமாகவே இருக்கட்டும், அதுக்காக அந்தளவுலையா வெச்சிருக்கறது?
இது எதுவும் புதுமையான சூழல் கெடயாதே. முன்னையும் இதே சூழல்ல இருக்கத்தானே செஞ்சாங்க? அப்போ இதே பள்ளில நல்ல வசதியான குடும்பத்து பசங்களும், முக்காவாசி ஆசிரியர்களோட பிள்ளைகளும் படிச்சதால ஒழுங்கா நடத்த முடிஞ்சதுன்னா, அப்புறம் இப்போ மட்டும் ஏன் முடியல?என்னத்த பெருசா நகரங்கள்ல கல்வி வாழுது?
அதெப்படி போதுமான ஆசிரியர் நியமனங்கள ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிறுத்தி வெச்சு, கிட்டத்தட்ட ஒரு மாணவனோட வாழ்க்கையயே கேள்விக்குறியாக்குதுன்னு தெரிஞ்சும் யாரும் பெரிய பிரச்சினை ஆக்க மாட்டேங்குறாங்க? இது சம்பந்தமா பொதுநல வழக்கு போட்டாலும் ஏன் மீடியாவுல இன்னும் பெருசுப்படுத்த மாட்டேங்குறாங்க?
பெரிய நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத எங்க ஊர்ல இருக்குற அரசுப் பள்ளியின் நிலையும் இதுதான், அந்த ஆசிரியர்களோட பிள்ளைகள் அங்க படிச்சிட்டிருந்த வரைக்கும் அவ்ளோ நல்லா நடந்திட்டு இருந்துச்சி, இப்போ அதுலயும் நிலைமை மோசம்தான். எனக்கு இந்த ஆசிரியர்களோட அக்கறையே புரியறதில்ல. ஏதோ ஒரு பிராடு வாத்தி, ஒரு பத்தாங்கிளாசு பொண்ணு கணக்கு பேப்பர் ரீகவுண்டிங்க்ல வேலையக் காமிச்சத்தை மெனக்கெட்டு, பாடுபட்டு அந்தப் பொண்ணு வீட்டுக்கு தெரியப்படுத்தறவங்க, பையன் ரெண்டுநாள் பள்ளிக்கு வரலைன்னா வீட்டுக்கே போய் என்னா எதுன்னு பாக்குறவங்க ஏன் நார்மலான விஷயமான பயிற்றுவித்தலை செம்மையா செய்றத்துக்கு விசனப்படறாங்க? அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?
சரி, இவங்கள விட்டுட்டு மெட்ரிக்குலேஷன் பாடத்திட்ட பள்ளிகள் பக்கம் வந்தா, பெரும்பான்மையா அங்கயும் நிலைமை தூன்னு துப்பற அளவுலதான் இருக்கு. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான பள்ளிகளைத்தவிர மத்ததெல்லாம் மோசம்தான். அங்கெல்லாம் புத்திசாலின்னா, என்னோட மறுபதிப்புகள்தான் ஏராளம். மக்கடிச்சு மார்க்கெடுக்கணும் அவ்ளவுதான். புரிஞ்சு படிச்சதா சரித்திரமே இல்ல. போனதரம் கூட சிலப்பேர் கேட்டிருந்தாங்க எப்டி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மக்கடிச்சேன்னு, பத்தாங்கிலாசு வரை நான் ஒரு பாடம் விடாம எல்லாத்தையும் அப்டித்தான் படிச்சேன். வேறவழியில்ல, சொல்லிக்கொடுக்க ஆளில்ல, ஆனா நல்ல மார்கெடுத்து பாசாகணும்னு நெருக்கடி பிளஸ் ஒருவித காம்பிளக்ஸ் இருந்தா எதையும் மக்கடிக்கலாம்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பலைன்னா குடும்பத்துல தள்ளி வெச்சிடுவாங்கன்னு அனுப்பறவங்கக் கூட, ட்யூஷனுக்கு ஏன் அரசு பள்ளி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கறாங்க? அதுக்கும் அந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் டீச்சர்கிட்டயே அனுப்ப வேண்டியதுதான? அனுப்பமாட்டாங்க, ஏன்னா, அங்க இருக்குறவங்க முக்காவாசி அனுபவமும் விஷயஞானமும் இல்லாதவங்களா இருக்காங்க, இல்லைன்னா, இன்னும் ஒருபடி மேல போய் அங்க பிசிக்ஸ் மேத்சுக்கெல்லாம் டீச்சரே இருக்க மாட்டாங்க, வேறொரு ஏற்பாட்டில் ஸ்கூல் நடக்கும். இதெல்லாம் தெரிஞ்சும் கேக்கமாட்டாங்க. ஏன்னா அங்க கொட்டிக் கொடுக்க பிறவி எடுத்தவங்களாச்சே எல்லாரும்.
இந்த நிலை அங்க வர காரணம் என்ன, ஒன்னு புற்றீசல் போல பலது தொறந்தது, இன்னொன்னு பசங்கக்கிட்ட கொள்ளையடிச்சு பில்டிங்கா ஏத்திக்கிட்டு போறது, வாகனங்களா வாங்கிக் குவிக்கிறது, ஆனா ஆசிரியர்களுக்கு அதுலருந்து கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. என்னதான் காலக் கொடுமைன்னு வந்தாலும், கடைநிலை ஊழியரோட பொண்ணும் பையனும், அவர் வாங்குற சம்பளத்தையே டீச்சரா போய் வாங்கினா அவரு 'ஆஹா இதல்லவோ சமத்துவம்னு சந்தோஷமாப் படுவாரு?'. ஒரு காலத்துல மெட்ரிக் ஸ்கூல்ல வேலப்பாக்குறது பெரிய அதிகாரிகளோட கான்வென்ட் எஜுக்கேட்டட் மனைவிகளுக்கு பெருமையா இருந்துச்சி, இப்போ அப்டியா இருக்கு நிலைமை? ஐடி செக்டர்லையும் கால்செண்டர்லையும் இவங்க போக ஆரம்பிச்சப்புறம் மெட்ரிக் பள்ளிகள் பாடு இன்னும் திண்டாட்டமாச்சு. அப்பவும்கூட திருட்டுத்தனமா பிசிக்ஸ் டீச்சருக்கு தனியா கணக்குல இல்லாம சம்பளம் தருவாங்களே தவிர கொஞ்சம் கூட மனசாட்சிப்படி நடந்துக்க மாட்டாங்க.
ஜனவரி பிப்ரவரி மாதங்களில், மானங்கெட்டத்தனமா கல்வியதிகாரிக்கிட்ட ஏன் முக்காவாசி (எக்சாம் சென்டராக இருக்கும் பட்சத்தில்)மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் எல்லாம் திட்டு வாங்கறாங்க? (கல்வியதிகாரிகள் மட்டும் குறைச்சலா என்ன, வருஷம் பூரா உப்பைத்தின்னுட்டு இருந்தா கடசீல செண்டர்னு வரும்போது தண்ணிக்குடிச்சித்தான ஆகணும். இன்னும் பாதிப்பேர் பதவிய உபயோகப்படுத்தி, பெரிய பள்ளிகளில் பையனுக்கும் பேரனுக்கும் சீட் வாங்குறத்துக்கு காட்ற ஆற்றலை மத்ததுலையும் கொஞ்சூண்டு காமிச்சாலே போதும்). எப்டி உங்க பள்ளிகளில் சீட்டிங் அரேஞ்ச்மென்ட் போடறீங்கன்னு கேட்டா பதில் சொல்ல முடியுமா எல்லாராலையும்?
அந்த மெட்ரிக் போர்டுல இருக்குறவங்களோட மிக நெருக்கமானவங்களே பள்ளிகள் நடத்துனா, நூத்துக்கு நூறு பர்சென்ட்னு பக்கம் பக்கமா பேப்பர் விளம்பரம் கொடுக்கறதுல என்னா அதிசயம்? ஏன் , நெறைய மாநிலங்களில் நம்ம மெட்ரிக் பிராக்டிகல்ஸ் மார்க் பத்தி கிண்டல் பண்ணி பேப்பர்ல ஆர்ட்டிகல் வரும்போது மட்டும் பம்முறாங்க?ஸ்டேட் போர்டுல படிக்கிறவங்களுக்கு பிராக்டிகல்ஸ் கிடையாது, அவங்க புதுசா உயர்நிலைப்பள்ளில கத்துக்கலாம், மெட்ரிக் பசங்களும் அதே கான்கேவ் லென்சை ஏன் புதுசா பாக்குறாங்க?
படிப்புலதான் இப்டின்னா, இதுல எந்த விதத்திலும் பசங்க யோசிக்கிறத்துக்கு, கிரியேட்டிவிட்டிய வளக்கறத்துக்கு வழிவகை உண்டா இந்த பள்ளித்திட்டத்தில்? இந்த பள்ளித்திட்டத்தை தூக்கினாலே தானா தனியார் பள்ளி நிறுவனங்களோட நிலைமை கேவலமா போய், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளோட நிலைமை ஒசந்திடும்.
ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் மட்டும் எப்டி இன்ட்ரஸ்டிங்கா பள்ளியை நடத்துறாங்க? இதுலயும் செயல்வழிக் கல்விதான் ஆரம்பக் கல்வி அப்டிங்கும்போது, அங்க மட்டும் சரிப்படற ஒரு விஷயம் மத்த பாடத்திட்ட பள்ளிகளில் மட்டும் ஒத்துவராதத்துக்கு மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் காரணமா, இல்ல, நல்ல ஒரு முயற்சியை வேணும்னே ஒதுக்கனுங்கற மனநிலையா? அங்கருந்து வர்ற பசங்க எப்டி எல்லா பாடங்கள்ளையும் பலமான அஸ்திவாரத்தோட வர்றாங்க? அங்கருந்து வர்ற பசங்க பெரியளவுல படிப்புல கெட்டிக்காரர்களா இல்லைன்னா கூட எல்லாத்தோட அடிப்படையும் புரிஞ்சி, தானா யோசிக்கிற திறன் ஜாஸ்தி உள்ளவங்களா இருக்கறாங்களே அதெப்படி? காலங்காலமா வசதியான, மேல்தட்டு குழந்தைகள் பெரும்பான்மையாக படிக்கிறதால இப்டியா?
சிபிஎஸ்சி பாடத்திட்டம் நம்மூர்ல கையாளப்பட்ட விதமே வேறங்கறதால அதுப்பத்தி சொல்றத்துக்கு ஒண்ணுமில்ல.
Monday, 9 March 2009
கல்லூரிச்சாலை
ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.
இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.
நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.
காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.
நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.
'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.
இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.
சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.
இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.
இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?
அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.
நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.
இப்டியாப்பட்ட நிலமையில...............................
Wednesday, 18 February 2009
Monday, 15 December 2008
செருப்பும் தீவிரவாதமும்
இந்தத் தொடருக்கு என்னை அழைத்த முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே, திருத்தி விடுகிறேன்.
தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை. காரணங்கள் எப்பொழுதும் மக்களின் மனவோட்டத்தை பொறுத்தது. குஜராத், பம்பாய் என எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர். பல ஊடகங்களும் மிக வெற்றிகரமாகவே இந்தக் கூற்றுக்கு நெய் ஊற்றுகின்றன. உணர்ச்சிவசப்பட்டவனுடைய மூளையைச் சலவை செய்வதில் ஊடகங்களுக்கு இணையுண்டா? ஆதலால் இத்தகையக் காரணங்களைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை.
நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு. ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு, அப்படியும் முதல்வருக்கே டேக்கா கொடுத்த அரசு ஊழியர்களும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?
ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வெளிநாடு செல்ல தேவைப்படும் சிகப்பு முத்திரைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அரசு ஊழியர்கள் நொட்டாங்கை வேலை செய்ய வேண்டும். அது தேவைப்படுபவர் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அது பற்றியே சிந்தித்து ஊண் உறக்கமின்றி களப்பணி ஆற்ற வேண்டும். நடைமுறை கீழே:
தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) -> பதிவாளர் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.
மாதத்தில் பாதிநாள் சென்னையில் ஏதேனும் காரணம் சொல்லி தங்கிவிடும் மாவட்ட ஆட்சியர், அவர் சம்பந்தப்பட்ட கடிதப்போக்குவரத்துகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பிளஸ் கடிதங்களை டீல் செய்யும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து, அன்றே தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நெறுக்கும் இராணுவ அதிகாரி வரை அத்துணை விஷயங்களையும் அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர், உள்ளாட்சித் தேர்தலில் இருந்து, நில அளவுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிர்பந்தத்தயுடைய கிராம நிர்வாக அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு நிகரான பதவியில் உள்ளவர்கள். தரகரின்றி நெருங்கவே முடியாத கிட்டத்தட்ட கலவர பூமிபோன்ற தோற்றத்தை உடைய, காட்சிகளை பெற்ற பதிவாளர் அலுவலகங்கள். இவையனைத்தையும் தாண்டி செக்ரடேரியட்டில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியரின்(கடைநிலை ஊழியர் என்றால் பிளஸ்) உதவியின்றி சுறுசுறுப்பாக வேலை நடக்காத தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எதற்கு இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடைமுறை? ஏன் இன்னமும் அனைத்து நிலைகளிலும் அத்துணை கடிதங்கள் எக்கச்சக்க ரெபரென்ஸ் எண்களோடு?
ஏன் எங்குமே வெளிப்படையான அணுகுமுறை இல்லை. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?
இதன் பலன்தான் என்ன? ஏன் எப்பொழுதுமே அனைத்து அரசு அலுவலகங்களிலும்மிக மோசமான அளவில் ஆள் பற்றாக்குறையுள்ளது? இந்தச் சூழலிலும் குறைந்தபட்ச மனசாட்சியோடு பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் செயல்பட்டாலும் எங்கும் எதிலும் அவப்பெயரே மிஞ்சுவதன் காரணமென்ன?இந்தப் பணிச்சூழலில் தானாக லஞ்சம் வரத்தானே செய்யும்? சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன? குமாஸ்தா டைப் வேலைகள் பெரியளவில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்காதுதான், ஆனால் இப்படி பத்தாள் வேலையை ஒருத்தர் மேலேயா சுமத்துவது?
அனைவரையும் விடுங்கள் கிராம நிர்வாக (அல்லது அதற்கு நிகரான)அலுவலகங்களிலே பணியாற்றுபவர்கள் என்ன தேவதூதர்களா அத்துணை காரியங்களை கவனிப்பதற்கு? இந்த சூழ்நிலையில் அவர்கள் வேறெப்படி செயல்படுவார்கள்? இதில் பல்வேறு விஷயங்களில் மாதத்திற்கொரு மாற்றம் என்று கடுப்பேத்துவது வேறு.
சமூக விரோதிகள் இந்த நடைமுறைகளால் லாபம்தானே அடைவார்கள்? தொல்லைகள் நிறைந்த இடங்களில் தொய்வுதானே ஏற்படும்? கடைசியில் யாரும் எதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
கமேண்டோக்கள் வருகையில் இருந்து, தரமான பாதுகாப்பு உடைகள் வரை அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டது பெரும்பான்மையாக நிர்வாக சீர்கேட்டினால்தானே?
ஒரே ராத்திரியில், குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் இறந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி, பெற்றோர்களே ஏழ்மையால் மற்றொரு பாரத்தை சுமக்க பயந்து ஒதுங்கி, ஒருவேளை பிழைத்தாலும் எட்டாக்கனியான மருத்துவத்தை அண்ணாந்து நோக்குவதையே தினப்படி வாழ்வாக ஏற்றுக்கொண்டு, இத்தனை ஏமாற்றங்களையும் சந்தித்த பின்னும் 'ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தால் பரவாயில்லை', என கெஞ்சும் மக்களை கொண்ட சமூகம் இது.
கிட்டத்தட்ட 'நாளை' எனும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ள இவர்களுக்கு குறைந்தபட்சம் இறப்புச் சான்றிதழ் பிரச்சினையின்றி கிடைக்க வேண்டும், சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக அதனைக் கூட திருடிச் செல்லும் மைத்துனர் அமையாதிருக்கவேண்டும்.
பனிரெண்டாம் தேதி கார்கரே அவர்களின் பிறந்தநாள், பதிமூன்றாம் தேதி நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுநாள். அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களின் எண்ணிக்கை:(:(:(
கார்கரே மனைவியால் ஒரு கோடி வேண்டாம் எனக் கூற முடியும், ஆனால் இறந்த கான்ஸ்டபில்களின் குடும்பத்தாரால் கூற முடியுமா? பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளா கிலோ என்ன விலை என்கின்றன நட்சத்திர விடுதிகள். கேட்டால், இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை, பாதுகாப்புத்துறையின் வேலை என்கின்றனர். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு அலுவலர்கள் இவர்களின் விடுதியை நாடுவதேன்? இங்கெல்லாம் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும் என்றுதானே? அண்டை நாட்டில் இதைவிட பயங்கர தாக்குதல் மற்றொரு விடுதியில் நடைபெற்ற போதே கொஞ்சமாவது உஷாராகியிருக்க வேண்டாமா? முன்பக்க வாசல் வழியாக வருவதற்கு அவர்கள் என்ன இவர்கள் வீட்டு மாப்பிள்ளையா? எப்படி தீவிரவாதிகளுக்கு அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட முடிந்தது என்ற கேள்விஎழும்போது, அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்படிஎன்றால் இங்கு இவர்களைப்போன்றவர்கள் இதே மாதிரி முஸ்தீபுகளுடன் தங்குவது சாதாரணம், என்ன இந்த முறை இங்கேயே தாக்குதல் நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது.
ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.
Tuesday, 25 November 2008
நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)
இன்னைக்கு முடிஞ்சது என் பணி.
வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)
Monday, 24 November 2008
என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)
எனக்கு படத்தோட மொதோ அஞ்சு நிமிஷம் பிடிச்சது. அது ஒரு அழகான செல்ப் பில்ட் அப்பா பத்தின படம்னு நெனக்க வெச்சுது. ஆனா அப்புறம் தான் எங்கப்பாவை பத்தி என்னை உணர்வுப்பூர்வமா சிந்திக்கவெக்கப்போற படம்னு புரிஞ்சது. எப்டின்னு கடசீல சொல்றேன்.
எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது. அடுத்தது படம் முழுக்கபல காட்சிகளில் cliché தூவிட்டா போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ, செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
அப்பாவை இவர்(பையன் சூர்யா) நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. திடீர்னு பாத்தா ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். இதுக்கு 'யாரடி நீ மோகினி'ல தனுஷ் செஞ்ச ஒரே நைட் கோடிங் அளப்பரயே பரவாயில்ல. போதைக்கு அடிமயானப்புறம் பாடற அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.
என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே. இன்னும் சொல்லப்போனா, இவங்க புரிதலை நமக்குப் புரியவெக்கிறேன் பேர்விழின்னு, தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா, அவர் ஹிந்திப்பாட்டை ரசிக்கிறது, பீட்டர் புத்தகம் படிக்கிறது, மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.
சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம், இப்டி படம் முழுக்க அதை ஒருவித அவஸ்தையோட சொல்லிருக்கவேணாம். சூர்யா கெட்டப் சேஞ் ஓகே, ஆனா அவங்க ரிலீஸ் பண்ண புகைப்படங்கள்ல இருந்த பிரம்மிப்பு படம் பார்த்தப்போ ஏற்படலை:(:(:(
சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது. திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.
'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.
பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.
கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல. என் கிளாஸ்மேட் ஒரு பையன், நேவில சேர எக்கச்சக்கமா உழைச்சான், அந்த எக்சாம்கு அவ்ளோ படிச்சான். இதுல சர்வ சாதரணமா எல்லாம் முடிஞ்சிடுது. பிளஸ், வயசு, கணக்குல கொஞ்சம் இடிக்குது. சரி, நான் ஜாஸ்தி சொல்லமுடியாது, ஏன்னா அது ஒரு பெரிய துறை, எனக்கு நெறைய விஷயம் தெரியாம இருக்கும்.
நானெல்லாம் நாலு மணிநேர படம்னாக் கூட ஒழுங்கா இருந்தா பாப்பேன்(வேலையா வெட்டியா:):):)) .அப்டிப்பட்ட என்னயே அரைமணிநேரத்துல கடிகாரம் பாக்க வெச்சுட்டாங்க.
பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?
பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.
முதல்ல சொன்ன விஷயம், இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.
என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.


